Published:Updated:

மாநிலங்கள் தாண்டும் மம்தா!

மம்தா பானர்ஜி
பிரீமியம் ஸ்டோரி
மம்தா பானர்ஜி

திரிபுரா மட்டுமல்ல, வடகிழக்கு மாநிலங்கள் எல்லாவற்றிலுமே திரிணாமுல் காங்கிரஸ் வளர்ச்சி பெறும்’’ என்கிறார் சுஷ்மிதா தேவ்.

மாநிலங்கள் தாண்டும் மம்தா!

திரிபுரா மட்டுமல்ல, வடகிழக்கு மாநிலங்கள் எல்லாவற்றிலுமே திரிணாமுல் காங்கிரஸ் வளர்ச்சி பெறும்’’ என்கிறார் சுஷ்மிதா தேவ்.

Published:Updated:
மம்தா பானர்ஜி
பிரீமியம் ஸ்டோரி
மம்தா பானர்ஜி

தமிழகத்துடன் சேர்த்து கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் தன் கட்சி மகத்தான வெற்றி பெற்றாலும், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோற்றுப்போனார். என்றாலும் அவர்தான் மேற்கு வங்காள முதல்வராகப் பதவியேற்றார். ஐந்து மாதங்கள் கழித்து இப்போது பவானிபூர் இடைத்தேர்தலில் பெருவெற்றி பெற்றுத் தன் முதல்வர் பதவியை உறுதி செய்துகொண்டுள்ளார் மம்தா.

சமீப நாள்கள் வரை மோடியின் அமைச்சரவையில் இருந்துவிட்டு, அமைச்சர் பதவி போனதும் திரிணாமுல் காங்கிரஸுக்குத் தாவிய பாபுல் சுப்ரியோ, ‘`வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மம்தாவைப் பிரதமராகப் பார்க்க ஆசைப்படுகிறேன்’’ என்று அந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் பட்டாசு கொளுத்திப் போட்டார்.

சமீப நாள்களில் திரிணாமுல் காங்கிரஸ் எடுக்கும் முயற்சிகள் பலவும் தேசிய கவனம் பெற்றிருக்கின்றன. மேற்கு வங்காளத்தைத் தாண்டி மேலும் பல மாநிலங்களில் காலூன்ற முயற்சி செய்கிறது அந்தக் கட்சி.

மாநிலங்கள் தாண்டும் மம்தா!

அசாம் காங்கிரஸின் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்தவர் சுஷ்மிதா தேவ். முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் மோகன் தேவின் மகள். சமீபத்தில் அசாமில் காங்கிரஸ் மோசமாகத் தோற்றபிறகு சுஷ்மிதா விலகி திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்தார். உடனே அவருக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி கொடுத்தார் மம்தா. சுஷ்மிதாவின் அப்பாவுக்கு திரிபுரா மாநிலத்தில் நல்ல பெயர் உண்டு. சுஷ்மிதாவை வைத்து அங்கு தங்கள் கட்சியை வளர்க்க நினைக்கிறார் மம்தா. வங்காளிகள் அதிகம் வசிக்கும் மாநிலமான திரிபுராவில் இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்துத் தேர்தல் வருகிறது. அப்போது பா.ஜ.க-வை வீழ்த்தும் வலுவுடன் திரிணாமுல் காங்கிரஸ் இருக்கும் என்பது மம்தாவின் நம்பிக்கை.

‘`திரிபுரா மட்டுமல்ல, வடகிழக்கு மாநிலங்கள் எல்லாவற்றிலுமே திரிணாமுல் காங்கிரஸ் வளர்ச்சி பெறும்’’ என்கிறார் சுஷ்மிதா தேவ். மற்ற மாநிலங்களைவிட மேற்கு வங்காளம் இவற்றுக்கு அருகிலேயே இருக்கிறது என்பதால், இது சாத்தியம்தான் என்று நம்புகிறார் மம்தா. சமீபத்தில் மேகாலயா காங்கிரஸ் கட்சியில் குழப்பம். புதிதாக நியமிக்கப்பட்ட மாநிலத் தலைவரை எதிர்த்து, முன்னாள் முதல்வர் முகுல் சங்மா கொடி பிடித்தார். உடனே அவரை இழுக்க முயன்றது திரிணாமுல் காங்கிரஸ். சோனியா தலையிட்டு அவரை சமாதானப்படுத்தி வைத்தார். ஆனாலும், தளராமல் முயற்சி செய்கிறார் மம்தா.

மாநிலங்கள் தாண்டும் மம்தா!

கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. அங்கும் தன் செல்வாக்கைக் காட்ட அதிரடியில் இறங்கியுள்ளார் மம்தா. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் லூஸின்ஹோ ஃபெலிரோ சில நாள்களுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்தார். பாரம்பரிய காங்கிரஸ்காரரான இவர் விலகியது, கட்சியின் மூத்த தலைவர்களுக்கே அதிர்ச்சி தந்தது. தன்னுடன் ஏராளமான தலைவர்களை மம்தா கட்சிக்கு அழைத்துச் சென்றுவிட்டார் ஃபெலிரோ. ‘கோவாவில் இனி பா.ஜ.க-வுக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் மட்டுமே போட்டி’ என்று சொல்கிறார் அவர்.

அந்த இணைப்பு விழாவில் அவர் சொன்ன இன்னொரு விஷயம் முக்கியமானது. ‘`காங்கிரஸ் குடும்பம் மீண்டும் ஒன்றாக வேண்டும் என்பது என் கனவு. காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்று கட்சி நடத்தும் எல்லோரும் மம்தா தலைமையில் ஒன்றிணைய வேண்டும்’’ என்றார் அவர். சரத் பவார், ஜெகன் மோகன் ரெட்டி போன்றவர்களுக்குத்தான் அவர் இப்படி அழைப்பு விடுத்தார்.

மாநிலங்கள் தாண்டும் மம்தா!

‘`திரிபுரா, கோவா போன்ற சிறிய மாநிலங்களில் இப்போது நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இந்த இரண்டு இடங்களிலும் பா.ஜ.க-வை வீழ்த்துவோம். உ.பி போன்ற பெரிய மாநிலங்களுக்கு அப்புறம் போவோம்’’ என்கிறார் திரிணாமுல் மூத்த தலைவர் டெரெக் ஓ ப்ரையன்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழ் ‘ஜகோ பங்க்ளா.’ சில நாள்களுக்கு முன்பு அதன் முதல் பக்கத்தில் ஒரு கட்டுரை. ‘ராகுல் காந்திக்குப் பல வாய்ப்புகள் கொடுத்தும் அவர் ஜெயிக்கத் தவறிவிட்டார். மம்தா பானர்ஜிதான் மோடிக்கு சரியான மாற்று’ என்று அது அறிவித்தது.

‘`2024 தேர்தலில் மோடிக்கு சவால் விடுக்கும் வல்லமை படைத்தவர் மம்தா. ஒட்டுமொத்த தேசமே இப்போது அவரை மோடிக்கு மாற்றாக நினைக்கிறது. எல்லா எதிர்க்கட்சிகளுடனும் பேசி இதற்கு சம்மதம் பெறுவோம்’’ என்கிறார், திரிணாமுல் மூத்த தலைவர் சுதீப் பந்தோபாத்யாயா.

மாநிலங்கள் தாண்டும் மம்தா!

பா.ஜ.க மற்றும் காங்கிரஸுக்கு மாற்றாக இருக்கும் கட்சித் தலைவர்களின் பிரச்னை, அவர்கள் ஒரே ஒரு மாநிலத்தில் மட்டுமே செல்வாக்கு பெற்றவர்களாக இருப்பது. சரத்பவாரில் ஆரம்பித்து ஸ்டாலின் வரை எல்லோருக்குமே இந்த பலவீனம் இருக்கிறது. இந்தியாவின் வெவ்வேறு திசைகளில் இருக்கும் மாநிலங்களில் கால் பதித்து, தேசிய முகமாகத் தன்னை உருவாக்கிக்கொள்ள முயல்கிறார் மம்தா. இதில் பா.ஜக-வைவிட அதிகம் கவலைப்பட வேண்டியது காங்கிரஸ்தான். ஏற்கெனவே உள்கட்சிக் குழப்பங்களால் தவிக்கும் காங்கிரஸுக்கு இது வெளிக்கட்சிக் குழப்பம்.