Published:Updated:

மம்தாவின் கனிமொழி பாசம்; நோ மேடை செல்வி; தூக்கப்பட்ட போடியம்... கருணாநிதி நினைவு நாள் நிகழ்வுகள்!

எஸ்.ஏ.எம். பரக்கத் அலி
சொ.பாலசுப்ரமணியன்

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கனிமொழி மீது தனி பாசம் காட்டினார், மேற்கு வங்க முதல்வர் மம்தா.

சிலை திறப்பு விழா மேடை
சிலை திறப்பு விழா மேடை ( விகடன் )

'கருணாநிதி இல்லாத தமிழகம்' ஓராண்டைக் கடந்துவிட்டது. அமைதிப் பேரணி, அஞ்சலி, சிலை திறப்பு விழா என கருணாநிதியின் முதல் நினைவு நாளை கடைப்பிடித்திருக்கிறது தி.மு.க.

மம்தாவுக்கு நினைவுப் பரிசு வழங்கும் ஸ்டாலின்
மம்தாவுக்கு நினைவுப் பரிசு வழங்கும் ஸ்டாலின்
விகடன்

முரசொலி வளாகத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்துவைத்திருக்கிறார். வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்ததால், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா விழாவில் ஆப்சென்ட். கோடம்பாக்கம் முரசொலி வளாகத்தில் சிலை திறப்பும், அதன்பிறகு தேனாம்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. பொதுக்கூட்ட மேடையில், கருணாநிதி சிலையின் மாடல் வைக்கப்பட்டிருந்தது. மஞ்சள் சிலைக்கு கறுப்பு கூலிங் கிளாஸ் போடப்பட்டிருந்தது. மேடையின் இன்னொரு புறம், கருணாநிதி முதன்முதலில் பயன்படுத்திய அம்பாசிடர் காரை நிறுத்தியிருந்தார்கள். ஆனால், கடைசிவரை அந்த காரைப் பற்றி யாரும் விளக்கமளிக்கவில்லை.

மேடையில், முன்வரிசையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி, தினேஷ் திரிவேதி, முரசொலி செல்வம், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தி.மு.க தலைவர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா, தி.க. தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து ஆகியோருக்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அதன்மீது பெயர்கள் எழுதிவைக்கப்பட்டிருந்தன. மம்தாவுக்குப் புரிவதற்காக, பெயர்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன. அவர்களுக்குப் பின்னால் சில இருக்கைகள் போடப்பட்டிருந்தன. ஆனால், அதில் பெயர்கள் எழுதப்படவில்லை. அவற்றில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன், தி.மு.க எம்.பி-க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, தயாநிதி மாறன் ஆகியோர் அமர்ந்திருந்தார்கள்.

செல்விக்கு சால்வை வழங்கும் மம்தா
செல்விக்கு சால்வை வழங்கும் மம்தா
விகடன்

மம்தாவுக்கு ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தபோது, கையோடு கொண்டுவந்த சால்வையை ஸ்டாலினுக்குப் போர்த்தினார் மம்தா. மேடைக்குக் கீழே அமர்ந்திருந்த கருணாநிதியின் மகள்கள் செல்வியையும் கனிமொழியையும் சுட்டிக்காட்டி, அவர்களுக்கு சால்வை தரச் சொன்னார், ஸ்டாலின். செல்வியும் கனிமொழியும் மேடைக்கு வராமலேயே கீழே நின்றபடி மம்தாவிடம் இருந்து சால்வைகளைப் பெற்றுக் கொண்டார்கள். ஏன் அவர்கள் மேடைக்கு அழைக்கப்படவில்லை எனத் தெரியவில்லை.

நாராயணசாமி, மம்தாவுக்கு சால்வை அணிவித்தார். அந்தச் சால்வையை மம்தாவிடமிருந்து உதவியாளர் வாங்க வந்தபோது, அதை அவரிடம் தராமல், மேடைக்குக் கீழே அமர்ந்திருந்த கனிமொழியை சைகையால் அழைத்து, அவரிடம் கொடுத்தார் மம்தா.

நாராயணசாமி அளித்த சால்வை...
நாராயணசாமி அளித்த சால்வை...
விகடன்
கனிமொழிக்குக் கை மாறுகிறது...
கனிமொழிக்குக் கை மாறுகிறது...
விகடன்

அப்போது, கனிமொழி முகத்தில் ஏக பூரிப்பு. கொஞ்ச நேரம் கழித்து கி.வீரமணி, மம்தாவுக்கு சால்வை அளித்தார். அந்தச் சால்வையை கனிமொழிக்கு அருகில் அமர்ந்திருந்த தி.மு.க துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனிடம் அளிக்கச் சொல்லி கனிமொழியிடம் கொடுத்தார்.

சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் சால்வையும் நினைவுப் பரிசையும் ஸ்டாலின் அளித்தார். ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி தினேஷ் திரிவேதிக்கு மரியாதை செய்ய மறந்துவிட்டார்கள். அதனை ஸ்டாலினுக்கு சுட்டிக்காட்ட, தாமதமாக அவருக்குச் சால்வை போர்த்தினார் ஸ்டாலின். விழா நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார்.

சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கும் ஒரு சால்வை பார்சல்...
சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கும் ஒரு சால்வை பார்சல்...
விகடன்

''கருணாநிதி நினைவு நாள் மலரை தளபதி வெளியிடுவார்'' என்று சொல்ல... உடனே ஸ்டாலின், அன்பழகனிடம் ''ஆசிரியர் வெளியிடுவார்'' என மாற்றி சொல்லச் சொன்னார். மேடையின் ஓரத்தில் பெங்காலி போலீஸ் அதிகாரிகள் நின்று கொண்டிருந்தார்கள். கட்சியின் புதுவரவான தங்க தமிழ்ச்செல்வனைப் (அ.ம.மு.க-விலிருந்து வந்தவர்) பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. மேடையின் எதிரே கூட்டணி கட்சித் தலைவர்கள் அமர்ந்திருந்தார்கள். பேசியவர்கள், ''கூட்டணி கட்சித் தலைவர்களே'' என்று மட்டும் சொன்னார்கள். மம்தா மட்டும், வைகோவின் பெயரைக் குறிப்பிட்டார்.

நாராயணசாமி பேசியபோது, ''நடந்துமுடிந்த தேர்தலில் தி.மு.க கூட்டணி, நாற்பதும் நமதே என மகத்தான வெற்றிபெற்றது'' என்று சொன்னவர் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு, ''வேலூரிலும் நாம்தான் வெற்றிபெறப்போகிறோம். தேனி தொகுதி வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது'' என்று சப்பைக்கட்டு கட்டினார்.

''2021-ல் தி.மு.க ஆட்சி தமிழகத்தில் அமையும்'' என்று சொல்லி பேச்சை முடித்தார், நாராயணசாமி.

ஸ்டாலினுக்கு சால்வை அணிவிக்கும் மம்தா
ஸ்டாலினுக்கு சால்வை அணிவிக்கும் மம்தா

''மம்தா, நாராயணசாமி, பினராயி விஜயன், ஏன்? ஆதித்யநாத்கூட வரும் சுதந்தர தினத்தில் கொடி ஏற்றும்போது, கருணாநிதிக்கும் மரியாதை செய்ய வேண்டும். சுதந்தர தினத்தில் கொடியேற்றும் உரிமையை முதல்வர்களுக்கு பெற்றுத்தந்தவர், கருணாநிதி'' என்றார் வைரமுத்து.

அடுத்து பேசிய வீரமணி, ''ஒரே கலாசாரம், ஒரே ரேஷன் கார்டு, ஒரே சட்டம் எனப் பேசுகிறவர்கள், ஒரே சாதி என சொல்லத் தயாரா? அப்படி ஒரு சட்டம்போட மாட்டீர்கள். ஏனென்றால், நீங்கள் மனுவின் மைந்தர்கள்'' என்றார்.

அடுத்து மம்தா பேச தயாரானபோது, இன்னொரு போடியம் மைக் கொண்டுவந்து வைத்தார்கள். மம்தாவின் உரையை மொழிபெயர்க்க இந்த ஏற்பாடு எனப் பலரும் நினைத்துக் கொண்டிருந்தபோது, ஸ்டாலின் அந்தப் போடியத்தை எடுக்கச் சொல்லிவிட்டார். அதனால், மம்தாவின் பேச்சு மொழிபெயர்க்கப்படவில்லை. போடியத்தில் மைக் இருந்தபோதும், தனியாக ஒரு மைக்கை கேட்டு வாங்கி, அதைக் கையில் பிடித்தபடியேதான் பேசினார் மம்தா.

கையில் மைக் பிடித்தபடியே பேசும் மம்தா
கையில் மைக் பிடித்தபடியே பேசும் மம்தா
விகடன்

''கருணாநிதி மறைந்தாலும் இதயங்களில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது வழியில் நின்று, சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்துவமான அடையாளம் இருக்கிறது. அப்படிப்பட்ட சொந்த மாநிலத்தைத் துண்டாட அனுமதிக்கக் கூடாது'' என்று சொல்லி பேச்சை நிறைவுசெய்தார், மம்தா.

ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், மேடைக்கு எதிரே முக்கியப் பிரமுகர்களும் நிர்வாகிகளும் அமர்வதற்காகக் கொஞ்சம் திறந்த வெளிப்பகுதியும், அதற்குப் பின்னால் தொண்டர்கள் அமர மேற்கூரையும் அமைத்திருந்தார்கள். விழா தொடங்குவதற்கு முன்பே மேற்கூரைப் பகுதியின் பெரும்பாலான நாற்காலிகள் காலியாக இருந்தன.

`தமிழக மக்களை எனக்குப் பிடிக்கும்; புலியைப் போன்றவர்கள்’ - கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மம்தா!

ஜெ.அன்பழகன், மைக்கில் ''தொண்டர் படையினர், தொண்டர்களை உட்காரவையுங்கள்'' எனக் கட்டளையிட்டுக்கொண்டே இருந்தார். விழா தொடங்கிய பிறகும் அந்த மேற்கூரை ஏரியா முழுவதும் தொண்டர்களால் நிரம்பவில்லை.