Published:Updated:

மம்தா உறவினரைக் கன்னத்தில் அறைந்த நபர்; 6 வருடங்கள் கழித்து மர்ம மரணம்?! நடந்தது என்ன?

அபிஷேக் பானர்ஜியை கன்னத்தில் அறைந்த தேபாஷிஷ் ஆச்சார்யா
அபிஷேக் பானர்ஜியை கன்னத்தில் அறைந்த தேபாஷிஷ் ஆச்சார்யா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரும்,எம்.பி-யுமான அபிஷேக் பானர்ஜியை 2015-ல் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கன்னத்தில் அறைந்த நிர்வாகி ஒருவர் 6 வருடங்கள் கழித்து மர்ம நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று 3-வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தனது மருமகனும், டைமண்ட் ஹார்பர் மக்களவைத் தொகுதியின் எம்.பி-யுமான அபிஷேக் பானர்ஜிக்குக் கட்சியில் பெரிய பொறுப்பை வழங்குவது குறித்துத் தேர்தலுக்கு முன்பாகவே ஆலோசனை நடத்திவந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக அபிஷேக் பானர்ஜி நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே, கட்சியின் இளைஞரணித் தலைவராகப் பதவியில் இருக்கும் அவருக்கு பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதால், மம்தாவுக்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய முகமாக அபிஷேக் பானர்ஜி தற்போது உயர்ந்திருக்கிறார். சீனியர்கள் பலரும் இருப்பினும், மருமகன் என்பதால் மம்தா தனக்கு அடுத்தபடியாகக் கட்சியை நிர்வகிக்க அபிஷேக்கை தயார்ப்படுத்திவருகிறார் என்ற பேச்சும் அடிபட்டுவருகிறது.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸின் பொதுச்செயலாளராகப் பதவியேற்றிருக்கும் அபிஷேக்கின் பெயர் பாஜக நிர்வாகி ஒருவரின் மர்மமான கொலையில் அடிபட்டிருப்பது மேற்கு வங்க அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸார் பாஜக-வினர் பொய்ப் பழி சுமத்துவதாகக் கூறிவரும்போதிலும், பாஜக-வினர் கொலையில் மம்தா மருமகன் அபிஷேக்கைச் சந்தேகிப்பதற்கு அவர்கள் தரப்பில் ஒரு காரணமும் முன்வைக்கப்படுகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் இளம் தலைவர் அபிஷேக் பானர்ஜி, 2015-ல் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் தேபாஷிஷ் ஆச்சார்யா என்பவர் அபிஷேக்கை திடீரென கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அதையடுத்து, கூட்டத்திலிருந்தவர்கள் அபிஷேக்கைத் தாக்கிய தேபாஷிஷ் ஆச்சார்யாவைப் பலமாகத் தாக்கி, ரத்தக் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மம்தா பானர்ஜி - அபிஷேக் பானர்ஜி
மம்தா பானர்ஜி - அபிஷேக் பானர்ஜி

அதைத் தொடர்ந்து, கட்சியிலிருந்து நீக்கப்பட்டதுடன், அவர்மீது போலீஸில் வழக்கு பதிவும் செய்யப்பட்டது. ஆனால், தேபாஷிஷ் ஆச்சார்யாவின் உறவினர்கள் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறி மன்னிப்புக் கேட்டதால் வழக்கு திரிணாமுல் காங்கிரஸாரால் திரும்பப் பெறப்பட்டது. ஆனால், தாக்குதல் சம்பவம் குறித்து அபிஷேக் தரப்பில் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுப்ரதா முகர்ஜி மட்டும் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, "யாரும் ராமகிருஷ்ண மடத்திலிருந்தும், பாரத சேவா சங்கத்திலிருந்தும் அரசியலுக்கு வந்துவிடவில்லை. அவருக்குத் தனிப்பட்ட முறையில் ஏதோ கோபம் இருந்துள்ளது. அதன் வெளிப்பாடே இந்தத் தாக்குதல். கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவர் பொதுவெளியில் தாக்கப்பட்டுள்ளபோதிலும், அவர் தற்போது பாதுகாப்பாக இருக்கிறார்" என்று கூறினார்.

அதற்குப் பிறகு, அந்தச் சம்பவத்தின் அதிர்வலைகள் அடங்கி தேபாஷிஷ் ஆச்சார்யா என்ற பெயர் அனைவராலும் மறக்கப்பட்டது. 2015-ல் இந்தத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியிருந்த நிலையில், சமீபத்தில் 2020-ல் தேபாஷிஷ் ஆச்சார்யா பாஜக-வில் உறுப்பினராக இணைந்தார். மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில்கூட அவர் பாஜக-வுக்குப் பிரசாரங்கள் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், தேபாஷிஷ் ஆச்சார்யா கடந்த 16-ம் தேதி மாலை தனது நண்பர்கள் மூவருடன் இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்றிருக்கிறார். அப்போது டீக்கடை ஒன்றில் மூன்று பேரும் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது ஆச்சார்யாவுக்குத் தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்ததாகவும், அதையடுத்து 'இதோ வந்து விடுகிறேன்!' என்று கூறிவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அடுத்த நாள் அதிகாலை 4 மணியளவில் தாம்லுக் மாவட்ட அரசு மருத்துவமனையில் தேபாஷிஷ் ஆச்சார்யா பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடும் நிலையில் சிலரால் அனுமதிக்கப்படுகிறார். தீவிர காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் துரிதமாகச் செயல்பட்டு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், அன்று மதியமே தேபாஷிஷ் ஆச்சார்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிடுகிறார். இது குறித்து மருத்துவர்கள் தரப்பில், ஆச்சார்யாவை மர்ம நபர்கள் சிலர் பயங்கரமாகத் தாக்கிவிட்டு, அவர்களே மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, உடனடியாகச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

தேபாஷிஷ் ஆச்சார்யா
தேபாஷிஷ் ஆச்சார்யா

இது தொடர்பாக மேற்கு வங்க போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். இந்தநிலையில், தேபாஷிஷ் ஆச்சார்யாவின் குடும்பத்தினர் மற்றும் பாஜக நிர்வாகிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட கொலை என்று குற்றம்சாட்டிவருகின்றனர். 2015-ல் மம்தா மருமகன் அபிஷேக்கைப் பொதுவெளியில் வைத்துத் தாக்கியதற்காகத்தான் அபிஷேக் தற்போது தனது கட்சியினரை வைத்து ஆச்சார்யாவைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துவிட்டதாக பாஜக-வினர் கூறுகின்றனர். தேபாஷிஷ் ஆச்சார்யா கொலை செய்யப்பட்டது குறித்து பாஜக-வின் மேற்கு வங்க பொறுப்பாளர் கைலாஷ் விஜயவர்ஜியா கூறுகையில், "சட்ட ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதால், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். மேற்கு வங்க தேர்தலுக்குப் பின்னர் இதுவரை 48 பாஜக தொண்டர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

பாஜக-வினர் திரிணாமுல் எம்.பி அபிஷேக் பானர்ஜி மீது குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், மேற்கு வங்க போலீஸ் உயரதிகாரிகள் பாஜக நிர்வாகி ஆச்சார்யாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்திருக்கின்றனர். போலீஸார் தற்போது முதற்கட்டமாக, டீக்கடையிலிருந்து ஆச்சார்யாவின் தொலைபேசிக்கு வந்த மர்ம அழைப்பு குறித்தும், அதற்குப் பின் அவர் எங்கு சென்றார் என்பது குறித்தும் விசாரித்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு