Election bannerElection banner
Published:Updated:

பா.ஜ.க-வுக்கு மானாமதுரை; அ.தி.மு.க எம்.எல்.ஏ கலக்கம் - திடீர் கிடாய் விருந்தின் பின்னணி!

மடப்புரத்தில் விருந்து ஏற்பாடு
மடப்புரத்தில் விருந்து ஏற்பாடு

மானாமதுரை தொகுதி, அ.தி.மு.க கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வுக்கு வழங்கப்படும் என்ற பேச்சு எழுந்திருப்பதால், மானாமதுரை எம்.எல்.ஏ நாகராஜன் கலக்கத்தில் இருக்கிறார்.

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை என நான்கு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இவற்றில், மானாமதுரை தனித் தொகுதியாக இருந்துவருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க கீழடி, இந்தத் தொகுதிக்கு உட்பட்டு வருகிறது. அ.தி.மு.க-வின் கோட்டை என சொல்லப்பட்ட மானாமதுரை தொகுதி தற்போது கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

மடப்புரம் கோயிலில் எம்.எல்.ஏ நாகராஜன்
மடப்புரம் கோயிலில் எம்.எல்.ஏ நாகராஜன்

ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள்விழாவை முன்னிட்டு அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் தொகுதி மக்களுக்கு விருந்து வைக்கின்றனர். இந்தநிலையில், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ நாகராஜனும், தொகுதிக்குட்பட்ட மடப்புரம் பத்ரகாளி கோயிலில் 15 கிடாய்களை வெட்டி மக்களுக்கு விருந்துவைத்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு விருந்து விழா நடந்ததாகக் கூறப்பட்டாலும், வேறு ஒரு தகவல் பற்றியும் ரத்தத்தின் ரத்தங்கள் பேசிக்கொள்கிறார்கள். சிவகங்கை மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளில், காரைக்குடி தொகுதி அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனுக்கும், சிவகங்கை தொகுதி அமைச்சர் பாஸ்கரனுக்கும் கொடுக்கப்படும் என்று சொல்லப்படுவதால், மானாமதுரை சீட்டை கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க-வுக்கு அ.தி.மு.க தாரை வார்க்கும் எனக் கட்சிக்குள் பேச்சு நிலவுகிறது. இதனால் கலக்கத்திலுள்ள மானாமதுரை எம்.எல்.ஏ நாகராஜன், தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு கிடாய் விருந்து கொடுத்தாகச் சொல்கிறார்கள்.

கோயில் பூஜையில் எம்.எல்.ஏ நாகராஜன்
கோயில் பூஜையில் எம்.எல்.ஏ நாகராஜன்

மானாமதுரை அ.தி.மு.க நிர்வாகிகள் வட்டாரத்தில் விசாரித்தோம். ``18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கப்பட்டபோது, மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடியும் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அதனால், மானாமதுரையில் இடைத்தேர்தல் நடைபெற்றது. தி.மு.க வேட்பாளரைவிட 8,194 வாக்குகள் கூடுதலாகப் பெற்று அ.தி.மு.க வேட்பாளர் நாகராஜன் வெற்றி பெற்றார். தற்போது எம்.எல்.ஏ-வாக இருக்கும் நாகராஜன், மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் மற்றும் அமைச்சர் பாஸ்கரனுடன் நெருக்கமாக இருக்கிறார்..

ஆனால், அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்பதால், மானாமதுரை தொகுதியை பா.ஜ.க-வுக்கு ஒதுக்கலாம் எனப் பேசிவருகிறார்கள். இதனால், நாகராஜன் கலக்கத்தில் இருக்கிறார். தனக்கு சீட் கிடைத்து வெற்றி பெற வேண்டும் என இந்தப் பகுதியின் துடியான தெய்வமான மடப்புரம் பத்ரகாளி கோயிலுக்கு கிடாய் வெட்டியிருக்கிறார். அவரின் தேர்தல் வேண்டுதல் நிறைவேறினால் இன்னும் நிறைய கிடாய் வெட்டுவார்” என்று தெரிவித்தனர்.

மடப்புரம்
மடப்புரம்

கிடாய் வெட்டு விருந்து குறித்து மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ நாகராஜனிடம் கேட்டோம். ``அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டுத்தான் கிடாய் வெட்டு விருந்து நடத்தினேன். அம்மாவின் ஆட்சி எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அமைய வேண்டும் என்பதையும் வேண்டிக்கொண்டோம். மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயிலில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். அதனால், இங்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தேன்.

சிவகங்கை: `பதியும்போதே வாங்குனாங்க; இப்பவும் பணம் கேட்டா எப்படி?’-  கொதித்த மக்கள்

அடுத்ததாக சட்டமன்றக் கூட்டம் முடிந்ததும், இளையான்குடி ஒன்றியத்தில் தாயமங்கலம் முத்துமாரி கோயிலிலும், மானாமதுரை ஒன்றியத்தில் தல்லாகுளம் முனியப்பன் கோயிலிலும் கிடாய் வெட்டு நிகழ்ச்சி நடத்தவிருக்கிறேன்.

மடப்புரத்தில் விருந்து ஏற்பாடு
மடப்புரத்தில் விருந்து ஏற்பாடு

சீட் கிடைக்க வேண்டும் என்பதற்காக கிடாய் விருந்து வைக்கவில்லை. அது முற்றிலும் பொய்யான தகவல். எனக்கு கண்டிப்பாக சீட் கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சீட் கிடைத்தால் நிற்பேன். கிடைக்கவில்லை என்றாலும் கட்சிக்காக வேலை செய்வேன். தலைமை என்ன முடிவு செய்தாலும் ஏற்றுக்கொண்டு செயல்படுவேன். கழகத்துக்காக 5 முதல் 10 முறை சிறைக்கு சென்ரிருக்கிறேன். அதனால் அ.தி.மு.க மீது எப்போதும் விசுவாசத்துடன் தலைமையின் உத்தரவை ஏற்றுச் செயல்படுவேன். மானாமதுரை தொகுதி அ.தி.மு.க-வின் கோட்டை. அதனால் இங்கு பா.ஜ.க-வுக்கு சீட் ஒதுக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரை மீண்டும் அ.தி.மு.க-தான் மானாமதுரையில் போட்டியிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு