Published:Updated:

மணிகண்டன் விக்கெட்: எடப்பாடி ஆட்சிக்கு சிக்கல்களின் தொடக்கப்புள்ளியா?

''துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஸும் மணிகண்டனும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மணிகண்டனின் அமைச்சர் பதவியைப் பறித்ததன் மூலமாக, ஓ.பி.எஸ் கரத்தை ஒடுக்குவதாக சிலர் நினைக்கிறார்கள்.

மணிகண்டன்
மணிகண்டன்

ஆகஸ்ட் 6... தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுக்கு, அன்று பிறந்த நாள். அதையொட்டி ராமநாதபுரம் நகர் முழுவதும், 'முகவையின் நிரந்தர அமைச்சர்' எனக் குறிப்பிட்டு ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை கழற்றப்படும் முன்பே அமைச்சரவையில் இருந்து மணிகண்டனைக் கழற்றி விட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டு, எடப்பாடியால் பதவி பறிக்கப்பட்ட முதல் அமைச்சர் இவரே! https://bit.ly/2TnOP5t

மறைந்த எம்.நடராஜன் மற்றும் 'மிடாஸ்' மோகனைப் பிடித்து, 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சீட் வாங்கி ஜெயித்தார் மணிகண்டன். டாக்டரான அவரை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆக்கினார் ஜெயலலிதா. மாவட்டச் செயலாளர் பதவியும் தந்தார். இப்படி அடுத்தடுத்த பதவிகள் மணிகண்டனைத் தேடி வந்தன.

மணிகண்டன் விக்கெட்: எடப்பாடி ஆட்சிக்கு சிக்கல்களின் தொடக்கப்புள்ளியா?

புதிய சேனல் தொடங்க நினைத்த முக்கியச் செய்தி நிறுவனத்தாரிடம் அனுமதிக்காக பேரம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், ஆறு மாதங்களிலேயே அவரின் மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, மணிகண்டனின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கியது. 'அன்வர் ராஜா எம்.பி ஆகக் கூடாது என்பதற்காகவே, ராமநாதபுரம் தொகுதியை பி.ஜே.பி-க்கு ஒதுக்க உள்ளடி வேலை செய்தார். நயினார் நாகேந்திரன் தோற்றதற்கும் அவரே முழு காரணம். மணல் குவாரிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மணிகண்டன், அதில் தி.மு.க பிரமுகர் களையும் பங்குதாரர்களாக வைத்திருந்தார்' என எக்கச்சக்கமான புகார்கள் முதல்வருக்குப் பறந்தன.

நம்மிடம் பேசிய மணிகண்டன் ஆதரவாளர்கள் சிலர், ''துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஸும் மணிகண்டனும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மணிகண்டனின் அமைச்சர் பதவியைப் பறித்ததன் மூலமாக, ஓ.பி.எஸ் கரத்தை ஒடுக்குவதாக சிலர் நினைக்கிறார்கள். ஆனால், மணிகண்டன் மீதான நடவடிக்கை அ.தி.மு.க ஆட்சிக்கு ஏற்படப்போகும் பல பிரச்னைகளுக்குத் தொடக்கப்புள்ளி என்பதை யாரும் உணரவில்லை.

டாக்டரான மணிகண்டனுக்கு, மத்தியில் முக்கியப் பொறுப்பில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலருடன் நல்ல நட்புண்டு. அவர்கள் மூலமாக மத்திய அமைச்சர்கள், பி.ஜே.பி நிர்வாகிகள் சிலரிடமும் அவர் நெருக்கமாகியுள்ளார். அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்தான் கேபிள் டி.வி விவகாரத்தில் திரியைக் கொளுத்திப் போட்டார். அவருடைய குற்றச்சாட்டிலிருந்து நூல் பிடித்து, அ.தி.மு.க-வின் பல்வேறு ஊழல்களையும் தோண்டுவதற்கு பி.ஜே.பி திட்டம் போட்டிருக்கிறது.

மணிகண்டன் விக்கெட்: எடப்பாடி ஆட்சிக்கு சிக்கல்களின் தொடக்கப்புள்ளியா?

மணிகண்டனை அப்ரூவர் ஆக்கிவிட்டால், பல விவகாரங்கள் வெளியே வரும். அதன் பிறகு அ.தி.மு.க-வைக் கழற்றிவிடலாம் என்று பி.ஜே.பி நினைக்கிறது. அதற்கேற்றார்போல், 'அனைத்தையும் அம்பலப்படுத்துவேன்' என்று மணிகண்டனும் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்'' என்றார்கள்.

- இந்த விவகாரம் குறித்த உள்ளரசியல் தகவல்களை 'அப்ரூவர் மணிகண்டன்?' https://www.vikatan.com/government-and-politics/politics/manikandan-dropped-from-edappadi-palaniswamy-cabinet எனும் ஜூனியர் விகடன் கவர் ஸ்டோரியில் முழுமையாக வாசிக்கலாம்.

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/