Published:Updated:

`2003-ல் குடியுரிமைச் சட்டத் திருத்தம் குறித்துப் பேசிய மன்மோகன் சிங்!’ - வைரலாகும் வீடியோ

2003-ல் மாநிலங்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் டாக்டர் மன்மோகன் சிங் ‘அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்குவதில் தாராளமயமாக இருக்க வேண்டும்.

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

குடியுரிமைச் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்தே எதிர்க்கட்சிகளும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்பைப் பதிவு செய்துவருகின்றன. நாடு முழுவதும் குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடர்பான போராட்டங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், பா.ஜ.க ஆட்சியிலிருந்த 2003-ம் ஆண்டு, மாநிலங்களவையில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மன்மோகன் சிங் குடியுரிமைச் சட்டம் குறித்து பேசியிருப்பது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

அதில்``அகதிகள் நடத்தப்படும் விதத்தைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். நம்முடைய நாடு பிரிக்கப்பட்ட பின்னர், அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினர் துன்புறுத்தல்களைச் சந்திக்கின்றனர். வேறுவழியில்லாமல் சூழ்நிலைக்காரணமாக நமது நாட்டுக்குள் தஞ்சம் புகும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நாம் தாராள மனதுடன் இருக்க வேண்டும். இது நமது தார்மிகக் கடமையாகும். எதிர்காலத்தில், குடியுரிமைச் சட்டம் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கும்போது துணை பிரதமர் இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்” என்று பேசியுள்ளார்.

இந்த வீடியோவை பா.ஜ.க-வின் ட்விட்டர் பக்கத்தில், ``2003-ல் மாநிலங்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் டாக்டர் மன்மோகன் சிங் ‘அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதில் தாராளமயமாக இருக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார். குடியுரிமைச் சட்டம் அதைத்தான் செய்கிறது...” என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளனர்.

பா.ஜ.க மற்றும் காங்கிரஸ்
பா.ஜ.க மற்றும் காங்கிரஸ்

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகக் காங்கிரஸினர் தங்களுடைய எதிர்ப்பைத் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். போராட்டக்களத்தில் இருப்பவர்களுக்கும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோ நெட்டிசன்களிடையே விவாதப் பொருளாகியுள்ளது.