Published:Updated:

`எங்க சமூகத்தை புறக்கணிக்கிறீங்க; ஊருக்குள்ள விட மாட்டோம் !'- திமுக வேட்பாளரை விரட்டியடித்த மக்கள்

தி.மு.க வேட்பாளரை விரட்டியடித்த மக்கள்
தி.மு.க வேட்பாளரை விரட்டியடித்த மக்கள்

தங்கள் சமூக மக்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி திமுக வேட்பாளரை கிராம மக்கள் நுழைய விடாமல் தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

``முத்தரையர் சமூகத்தை தி.மு.க தொடர்ந்து புறக்கணிக்கிறது. எங்களைப் புறக்கணிக்கும் நீங்களும், உங்களது கட்சியைச் சார்ந்த எவரும் எங்கள் கிராமத்துக்குள் வரக் கூடாது" என்று மண்ணச்சநல்லூர் தொகுதி தி.மு.க வேட்பாளரை கிராமத்துக்குள் நுழைய விடாமல் தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேட்பாளரிடம் கிராம மக்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மண்ணச்சநல்லூர் தி.மு.க வேட்பாளர்
மண்ணச்சநல்லூர் தி.மு.க வேட்பாளர்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளராக கதிரவன் என்பவர் போட்டியிடுகிறார். இனாம் சமயபுரம் ஊராட்சியில் கதிரவன் வாக்கு கேட்டுச் செல்லும்போது கிராமத்து இளைஞர்கள் ஒன்றிணைந்து தி.மு.க வேட்பாளரை வாக்குச் சேகரிக்க கிராமத்துக்குள் நுழையவிடாமல் தடுத்தனர்.

தி.மு.க வேட்பாளரை விரட்டியடித்த மக்கள்
தி.மு.க வேட்பாளரை விரட்டியடித்த மக்கள்

மேலும், சாலையின் குறுக்கே இரும்புக்குழாய்களைப் போட்டு, தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட முயன்றதால் வாக்கு சேகரிக்காமல் திமுக வேட்பாளர் திரும்பினார். தி.மு.க-வினரை எதிர்த்து மக்கள் கோஷங்களை எழுப்பினர். `தேர்தல் நேரத்தில் ஏன் இந்த எதிர்ப்பு?’ என்று விசாரித்தோம்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேசினோம். ``கடந்த முறை இந்தத் தொகுதியில் தி.மு.க கட்சி சார்பில் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த காட்டுகுளம் கணேசன் போட்டியிட்டார். ஏழாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் பரமேஸ்வரி முருகனிடம் தோல்வியைத் தழுவினார். இந்த முறை கணேசனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால், அனுதாப வாக்குகள் விழுந்து எளிதாக வெற்றிபெற்றிருப்பார்.

திரும்பிச் செல்லும் வேட்பாளர் தி.மு.க கதிரவன்
திரும்பிச் செல்லும் வேட்பாளர் தி.மு.க கதிரவன்

மேலும், கடந்த முறை பல கோடி ரூபாய் செலவு ஆனதால், பொருளாதாரரீதியாக மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார். கட்சிக்காகத் தனது சொத்தையெல்லாம் இழந்த கணேசன் மீண்டும் அரசியல் அங்கீகாரம் பெறுவதற்கான வாய்ப்பை தி.மு.க தலைமை உருவாக்கித் தர வேண்டுமா, இல்லையா?. ஆனால், பண பலம் படைத்த ஒருவருக்கு சீட் கொடுக்கிறார்கள்.

இவர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத் தலைவர் சீனிவாசனின் மகன். இவர்களுக்குச் சொந்தமாகப் பல கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்தப் பகுதியில் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள், திருச்சி சிறுகனூரில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்துக்குப் பல கோடிகளைத் தலைமைக்குக் கொடுத்திருக்கிறார்கள். அத்தோடு இவர் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் கே.என்.நேரு மூலமாகக் காய்நகர்த்தி சீட் வாங்கியிருக்கிறார். இப்படிப்பட்டவருக்கு தி.மு.க வாய்ப்பு அளிக்கிறது.

கே.என்.நேரு
கே.என்.நேரு

அதுவும் குறிப்பாக, தி.மு.க தலைமை முத்தரையர் சமூகத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கிறது. எங்கள் சமுதாயத்தில் உள்ளவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் நாங்கள் வசிக்கும் பகுதிக்குள் தி.மு.க வேட்பாளரை விட மாட்டோம்" என்றனர். இந்தச் சம்பவத்தால் இந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதால், இந்தப் பகுதியில் வாக்கு சேகரிக்காமல் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவைச் சந்திக்கச் சென்றார் வேட்பாளர் கதிரவன்.

அடுத்த கட்டுரைக்கு