Published:Updated:

`சசிகலா வெளியே வந்தால்தான் தெரியும்!' -எடப்பாடியை சந்தித்த மன்னார்குடி அ.ம.மு.க முக்கியப் புள்ளி

அரை மணி நேரத்துக்கும் மேலாக, முதல்வர் என்னிடம் எளிமையாகப் பேசிக்கொண்டிருந்தார். தினகரனைவிட அவர் நன்றாகப் பேசுகிறார்.

முதல்வருடன் சிவ.ராஜமாணிக்கம்
முதல்வருடன் சிவ.ராஜமாணிக்கம்

`` என்னை நம்பி வருபவர்களுக்கு எந்த நல்லது கெட்டதும் செய்ய முடியவில்லை. அதனால் அ.ம.மு.க-விலிருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்தேன்'' என்கிறார் மன்னார்குடியைச் சேர்ந்த சிவ.ராஜமாணிக்கம்.

சிவ.ராஜமாணிக்கம்
சிவ.ராஜமாணிக்கம்

தஞ்சாவூரில் நேற்று ஆதரவாளர்களுடன் பெங்களூரு புகழேந்தி ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது, `அ.ம.மு.க ஒரு கட்சியே கிடையாது. அது ஒரு கம்பெனி. அதிலிருந்து அனைவரும் வெளியே வந்துவிடுவார்கள். கடைசியில் தினகரன், அவரின் மனைவி மற்றும் உதவியாளர் ஜனா இவர்கள் மட்டுமே இருப்பார்கள்' எனக் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

இந்தநிலையில், தினகரனின் சொந்த ஊரான மன்னார்குடியில் அ.ம.மு.க-வின் மண்டலப் பொறுப்பாளராக இருந்த சிவ.ராஜமாணிக்கம் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்துள்ளது தினகரன் தரப்பினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

தினகரன் அழிவுக்கு காரணம்.. அ.ம.மு.கவின் `ஸ்லீப்பர் செல்' தான்!- முன்னாள் அமைச்சரை விளாசிய புகழேந்தி

மன்னார்குடி நகராட்சியின் முன்னாள் நகர்மன்றத் தலைவராக இருந்தவர் சிவ.ராஜமாணிக்கம். இவர் திவாகரனின் தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டு வந்தவர். பின்னர், அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் அ.ம.மு.க-வில் இணைந்தார். அவருக்கு முக்கிய பொறுப்பும் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கட்சிப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தவர், இன்று சென்னையில் உள்ள முதல்வரின் இல்லத்துக்குச் சென்று அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

`` இந்த இணைப்பின் பின்னணியில் திவாகரன் இருக்கிறார்" எனத் தஞ்சை வட்டாரத்தில் உள்ள அ.ம.மு.க-வினர் பேசி வருகின்றனர்.

சிவ.ராஜமாணிக்கம்
சிவ.ராஜமாணிக்கம்

சிவ.ராஜமாணிக்கத்திடம் பேசினோம். `` என்னை நம்பி வருபவர்களுக்கு எந்த நல்லது கெட்டதும் செய்ய முடியவில்லை. அத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நன்றாக நடப்பதாக மக்கள் மத்தியில் ஒரே பேச்சாக இருக்கிறது. அதனால் அ.தி.மு.க-வில் என்னை இணைத்துக்கொண்டேன்.

அதேநேரம், தினகரனைப் பற்றி குறைகூற விரும்பவில்லை. அரை மணி நேரத்துக்கும் மேலாக, முதல்வர் என்னிடம் எளிமையாகப் பேசிக்கொண்டிருந்தார். தினகரனைவிட அவர் நன்றாகப் பேசுகிறார். வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் சசிகலா வெளியே வருவார் என்கிறார்கள். அவர் வெளியே வந்த பிறகுதான் அ.தி.மு.க-வில் என்ன நடக்கும் எனத் தெரியும்" என்றதோடு முடித்துக்கொண்டார்.