Published:Updated:

விரைவில் கவர்னர்கள் மாற்றம்... தமிழக பா.ஜ.க பிரமுகருக்கு வாய்ப்பு?

ந.பொன்குமரகுருபரன்

விரைவில் மாநில கவர்னர்கள் மாற்றப்படலாம் என டெல்லி வட்டாரத் தகவல்

கமலாலயம்
கமலாலயம்

நாடு முழுவதும் விரைவில் கவர்னர்களை மாற்ற மத்திய அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதில் தமிழக பா.ஜ.க பிரமுகர் ஒருவருக்கு கவர்னர் பொறுப்பு அளிக்கப்படலாம் என பி.ஜே.பி. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கவர்னர் மாளிகை
கவர்னர் மாளிகை

மாநில கவர்னர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் அனைவரும் ஜனாதிபதியின்கீழ் செயல்பட்டாலும், இவர்களை மாற்றுவதற்கும், நீக்குவதற்கும் மத்திய உள்துறைக்கு அதிகாரமுள்ளது. இரண்டாவது முறையாக மோடி ஆட்சி அமைந்துள்ள நிலையில், தேர்தலில் தோல்வியடைந்த பி.ஜே.பி. தலைவர்கள், ஓய்வுக்காலத்தை நெருங்கும் தலைவர்களை கவர்னர்களாக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறதாம்.

சில கவர்னர்கள் மீது மத்திய அரசுக்கு அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. அவர்களையும் நீக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தலில் பி.ஜே.பி. பின்தங்கிய மாநிலங்களிலுள்ள கவர்னர்களை மாற்றிவிட்டு, ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ள நபர்களை அங்கு பணியமர்த்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். இதன்மூலமாக, சில அரசியல் காய் நகர்த்தல்களை விருப்பப்படி செய்ய முடியும் எனவும் டெல்லி கருதுகிறதாம்.

மோடி அமித்ஷா
மோடி அமித்ஷா

இதுகுறித்து நம்மிடம் பேசிய பி.ஜே.பி மாநில நிர்வாகி ஒருவர், “தமிழக பா.ஜ.க பிரமுகர் ஒருவருக்கு கவர்னர் பதவி வழங்க பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விரும்புகின்றனர். தெலங்கானா, அல்லது வட மாநிலத்தில் அவர் பணியமர்த்தப்படலாம். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தையும் மாற்ற டெல்லி ஆலோசித்து வருகிறது. அவருக்கும் இங்கேயிருக்க விருப்பமில்லை. விரைவில் மாற்றம் வரலாம்” என்றார்.

தமிழக பிரமுகருக்கு கவர்னர் வாய்ப்பு வழங்கப்படுவதைத் தொடர்ந்து, வேறு சில தமிழக பி.ஜே.பி. தலைவர்களும் டெல்லியை நெருக்கத் தொடங்கியுள்ளனராம். சமீபத்தில் எம்.பி பதவியை இழந்த ஒரு தலைவர், கவர்னர் பதவிக்கு நாக்பூர் வழியாக டெல்லியைப் பிடித்து லாபி செய்துவருவதாகத் தகவல்.