Published:Updated:

`தி.மு.க கூட்டணியில் சலசலப்பு; பல கட்சிகள் அ.தி.மு.க-வுடன் இணையும்'- கடம்பூர் ராஜு சொல்வது என்ன?

``தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள சலசலப்பால் அங்கு குழப்பம் நிலவுகிறது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் அங்குள்ள கட்சிகள் அ.தி.மு.க-வுடன் இணைய வாய்ப்புள்ளது” என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

நலத்திட்ட விழாவில் அமைச்சர்
நலத்திட்ட விழாவில் அமைச்சர்

தூத்துக்குடியில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.கவை வீழ்த்துவதுதான் எங்கள் இலக்கு என டி.டி.வி.தினகரன் கூறியிருப்பது வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் உள்ளது.

அமைச்சர் கடம்பூர் ராஜூ
அமைச்சர் கடம்பூர் ராஜூ

நடிகர்கள் ரஜினி, கமல் இருவரும் திரைப்படத்துறையில் இணைந்து பணியாற்றுகின்றனர். அதேபோல இருவரும் அரசியலில் இணைந்தால் இணையட்டும். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் எத்தனை வாக்கு சதவிகிதம் பெற்றது, அ.தி.மு.க எத்தனை வாக்கு சதவிகிதம் பெற்றது என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

அ.தி.மு.க என்பது நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. எனவே, யார் இணைந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. மக்களவைத் தேர்தலில் மக்கள் வேறு நிலைப்பாட்டை எடுத்தாலும், அதனுடன் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காகவே 9 தொகுதிகளில் வெற்றியை வழங்கினர்.

நலத்திட்ட விழா
நலத்திட்ட விழா

அதன் பின்னர் நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், 60 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. தற்போது தி.மு.க-வுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள சலசலப்பால் அவர்களுக்குள் குழப்பம் நிலவுகிறது.

எனவே, தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள், கூட்டணியை விட்டு விலகி உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் இணைய வாய்ப்புள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனைப் பொறுத்தவரை மக்களவையைப் பற்றி வேண்டுமானால் பேசலாம். அவர் சட்டமன்றத்தைப் பற்றி பேசுவது பொருத்தமாக இருக்காது.

நலத்திட்ட விழா
நலத்திட்ட விழா

தமிழகத்தில் திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒரு தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் திரைப்படத்துறையில் சீர்திருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது” என்றார்.