Published:Updated:

மதுரை: `பெயர் சொல்லி மிரட்டுகிறார் உதயநிதி; அதிகாரப்பசியில் தி.மு.க!’ - மருது அழகுராஜ் விமர்சனம்

அம்மா கிச்சன்
அம்மா கிச்சன்

நிவர் புயலின்போது ஆர்.பி.உதயகுமார் எழிலகத்தைவிட்டு விலகவில்லை. அங்கேயே தங்கியிருந்து புயல் பாதிப்புகளைத் தடுக்க முன்னேற்பாடுகளைச் செய்தார்.

`பேரிடரை மதுரைக்காரனல்தான் தீர்க்க முடியும் என்று நினைத்துதான் ஆர்.பி.உதயகுமாரை பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக எடப்பாடியார் சரியாகத் தேர்வு செய்துவைத்திருக்கிறார்’ என்று, `நமது அம்மா’ நாளிதழ் ஆசிரியரும், அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளருமான மருது அழகுராஜ் பாராட்டிப் பேசினார்.

அம்மா கிச்சன் விழா
அம்மா கிச்சன் விழா

மதுரையில் கொரோனா நோயாளிகளுக்கும், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் தினமும் மூன்று வேளை உணவு வழங்கும் வகையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரால் தொடங்கப்பட்ட `அம்மா கிச்சன்’ என்ற உணவுக்கூடம் 150-வது நாளில் முடிவுக்கு வந்தது. இதை நேற்று அ.தி.மு.க-வினர் மதுரையில் விழாவாகக் கொண்டாடினார்கள். மதுரை கலெக்டர் அன்பழகன், எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் மருது அழகாராஜ் பேசும்போது, ``உண்டி கொடுப்போர் உயிர் கொடுப்போர் ஆவார். அதிலும் நோய் பீடித்துள்ளவர்களுக்கு உணவு கொடுப்பதோ தலைசிறந்த பணி.

அம்மா கிச்சனில் கலெக்டர்
அம்மா கிச்சனில் கலெக்டர்

அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரமாக, இந்த அம்மா கிச்சன் மதுரையில் திகழ்ந்துவந்தது. நானே 15 தடவை இங்கு சாப்பிட்டிருக்கிறேன். நான் எப்போது மதுரை வந்தாலும் தனியார் ஹோட்டலில் சாப்பிடுவதில்லை. இந்த சிம்பிள் சிட்டியில்தான் சாப்பிடுவேன். அந்த அளவுக்கு தரமாகவும் சுவையாகவும் உணவு படைத்தார்கள்.

எனக்கு அரசியல் குரு உதயகுமார்தான். அம்மாவின் எழுத்தாளனாக 10 வருடம் பணிசெய்திருக்கிறேன். பொதுவாக எந்தவோர் ஆச்சர்யமான விஷயங்களைப் பார்த்தாலும் `அம்மா...’ என்று சொல்வோம். ஆனால், எங்கள் அம்மாவே ஆச்சர்யம்தான். அப்படிப்பட்ட அம்மாவின் பெயரில் கிச்சனை உருவாக்கியது மட்டுமல்லாமல், தன் குடும்பத்தினரோடு இணைந்து இந்தச் சேவையைச் செய்திருக்கிறார்.

மருது அழகுராஜ்
மருது அழகுராஜ்

இது கடுமையான பணி. தன் அர்ப்பணிப்பான செயலால் இன்று உயர்ந்தநிலையில் இருக்கிறார். அவரைவைத்து பலர் அரசியலில் உயர்ந்த இடத்துக்கு வந்திருக்கிறார்கள். எனக்கும் அரசியலில் முக்கிய இலக்கை அடைய ஆசை இருக்கிறது. அமைச்சரிடம்தான் அதைக் கற்க வேண்டும்.

சங்க இலக்கியங்கள் காட்டும் சிறந்த மன்னர்களுக்கு இலக்கணமானவர், பொருத்தமானவர் எடப்பாடியார். அவர் பதவி ஏற்றபோது தமிழகத்தில் ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நடந்தன. இப்போது ஏதாவது நடந்திருக்கிறதா... தற்போதைய அ.தி.மு.க ஆட்சியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவு பெற்றது, ஓ.பி.எஸ் முயற்சியால் ஜல்லிக்கட்டு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சிறப்புச் சட்டம் இயற்றியது, மின்வெட்டு இல்லாமல் ஆக்கியது, மீத்தேன் திட்டத்துக்குத் தடைபோட்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, அத்திக்கடவு அவினாசி திட்டம் கொண்டு வந்தது... என எந்தவொரு பிரச்னையும் தமிழகத்தில் இல்லை என்ற நிலையை விவசாயி வீட்டில் விளைந்த வெள்ளந்தி தமிழன் எடப்படியார் ஏற்படுத்தியிருக்கிறார்.

அம்மா கிச்சன்
அம்மா கிச்சன்

தமிழகத்தில் பிரச்னையே இல்லை. ஆனால், தி.மு.க-வினர் அதிகாரப்பசியில் அலைகின்றனர். உதயநிதி காவல்துறை உயர் அதிகாரிகளைப் பெயர் சொல்லி நேரடியாக மிரட்டுகிறார். கொரோனாவைவிட கொடிய வைரஸ் தி.மு.க. தி.மு.க என்ற கிருமியை அழிக்க முடியாது.

நிவர் புயலின்போது ஆர்.பி.உதயகுமார் எழிலகத்தைவிட்டு விலகவில்லை. அங்கேயே தங்கியிருந்து புயல் பாதிப்புகளைத் தடுக்க முன்னேற்பாடுகளைச் செய்தார். பேரிடர்களை மதுரைக்காரனால்தான் தீர்க்க முடியும் என்பதால்தான் ஆர்.பி.உதயகுமாரை பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக எடப்பாடியார் சரியாகத் தேர்வு செய்து வைத்திருக்கிறார்.

அம்மா கிச்சனில் கலெக்டர்
அம்மா கிச்சனில் கலெக்டர்

பெரும்பாலான இயற்கைச் சீற்றங்கள் அ.தி.மு.க ஆட்சி காலத்தில்தான் வந்திருக்கின்றன. சோதனையைக் கொடுக்கும் இறைவன், அதை அ.தி.மு.க-வால்தான் தீர்த்து வைக்க முடியும் என்று நினைத்து அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் விடுகிறான்.

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும்போதெல்லாம் அ.தி.மு.க ஆட்சிதான் நடக்கிறது. தமிழகத்தில் குளம் குட்டை நிரம்பியிருப்பதால் அடுத்த வருடம் பாருங்கள், ஒரு லட்சம் குழந்தைகள் நீச்சல் கற்றிருப்பார்கள். இன்று உழவன் கையில் அதிகாரம் இருப்பதால்தான் உலகமே குளிர்ந்திருக்கிறது.

இது மட்டுமா, மதுரைக்கு எய்ம்ஸ் மட்டுமல்லாமல் 11 மருத்துவக் கல்லூரிகள் வந்துவிட்டன. ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துவிட்டது.

மருது அழகுராஜ்
மருது அழகுராஜ்

நம் கட்சித் தலைவர்கள் புத்தியுடன் இருக்கிறார்கள். மூன்றாம் கிளாஸ் பிள்ளைக்கு உள்ள அறிவுகூட மு.க.ஸ்டாலின், உதயநிதிக்கு இல்லை. வறண்டுபோன கண்மாய் மழைத் தண்ணீரை உடனே உறிஞ்சக் காத்திருப்பதுபோல அதிகாரப்பசியில் தி.மு.கவினர் இருக்கிறார்கள்.

வேறு வேறு வயிற்றில் பிறந்தாலும் அ.தி.மு.க-வில் இருப்ப்பவர்கள் ஒரு தாய்ப் பிள்ளையாக இருக்கிறோம். பாமரனைக்கூட பச்சை மையில் கையெழுத்து போடவைத்த இயக்கம். அ.தி.மு.க-வில் சாதி, மதம் இல்லை. ஆனால், ஒரு வயிற்றில் பிறந்தாலும் ஒற்றுமை இல்லாமல் அதிகாரத்துக்காகக் குடும்பத்துக்குள் எதையும் செய்யத் தயங்காத குடும்பக் கட்சி தி.மு.க. ஆனால், தமிழக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்'' என்று அதிரடியாகப் பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு