Published:Updated:

மதுரை : 'படிப்பகம் இடிப்பு?! திமுக பிரமுகர் குறித்து முதலமைச்சருக்கு புகார் அனுப்பிய சி.பி.எம் !'

சிபிஎம் கட்சியினரின் கண்டன துண்டறிக்கை
சிபிஎம் கட்சியினரின் கண்டன துண்டறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புகார் அனுப்பியதால் பரபரப்பு!

மதுரை ஆரப்பாளையம் அருகே நீண்டகாலமாக இருந்து வந்த 'தூக்குமேடை' பாலு நினைவு படிப்பகம் இடித்து நொறுக்கப்பட்டுள்ள சம்பவம் கம்யூனிஸ்ட் தோழர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இடிக்கப்பட்ட படிப்பகம்
இடிக்கப்பட்ட படிப்பகம்

இதற்கு காரணம் திமுக பிரமுகர் ஒச்சுபாலுதான் என்று குறிப்பிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைமைக்கும், காவல்துறைக்கும் புகார் அனுப்பியுள்ளார்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய ஆரப்பாளையம் பகுதி சிபிஎம் செயலாளர் ஸ்டாலின், " மக்களுக்காக போராடி தூக்குமேடையேறி உயிர்த்தியாகம் செய்த தோழர் பாலுவின் நினைவை போற்றும் வகையில் கரிமேடு 13 வது வார்டில் படிப்பகம் உருவாக்கப்பட்டது.

இடிக்கப்பட்ட படிப்பகம்
இடிக்கப்பட்ட படிப்பகம்

இப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் அன்றாட நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளவும், உலக விஷயங்களை புரிந்து கொள்ளவும் இந்த படிப்பகம் 70 வருடங்களாகப் பயன்பட்டு வருகிறது. இந்த படிப்பகத்துக்கு வரும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது இப்பகுதியிலுள்ள சமூக விரோதிகளுக்கு நீண்ட காலமாக அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

திமுகவின் முன்னாள் பகுதி செயலாளர் ஒச்சு பாலு இந்த படிப்பகத்தை அகற்றிட பெரும் முயற்சி எடுத்து வந்தார். ஏற்கனவே அவருடைய நடவடிகைகளால் இப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.

இடிக்கப்பட்ட படிப்பகம்
இடிக்கப்பட்ட படிப்பகம்

நில ஆக்கிரமிப்பு என்று பல புகார்கள் அவர் மீது உள்ளன. படிப்பகம் இருப்பது அவருக்கு இடைஞ்சலாக இருப்பாதால் அவருடைய ஆட்கள் மூலம் இடித்துள்ளார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் படிப்பகம் செயல்படவும் நடவடிக்கை வேண்டுமென்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் புகார் கொடுத்துள்ளோம். முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பியுள்ளோம்." என்றார்.

கூட்டணிக் கட்சியான சிபிஎம், திமுக பிரமுகர் மீது புகார் எழுப்பியுள்ளது மதுரை திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது திமுகவை விமர்சனம் செய்ய அதிமுகவுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு