Published:Updated:

`எங்களுக்கு இன்னொரு வழியும் இருக்கு...!' - பா.ஜ.கவுக்கு சிவசேனாவின் ஸ்ட்ராங் மெசேஜ்

தங்களின் கோரிக்கைகளை ஏற்க பா.ஜ.க மறுக்கும்பட்சத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்போம் என சிவசேனா கட்சி தெரிவித்திருக்கிறது.

பட்னாவிஸ் - உத்தவ் தாக்கரே
பட்னாவிஸ் - உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் யாரும் ஆட்சியமைக்க முடியாத சூழல் நிலவுகிறது. மொத்தமுள்ள 288 இடங்களில் பா.ஜ.க 105 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வென்றிருக்கின்றன. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.

பட்னாவிஸ்
பட்னாவிஸ்

பா.ஜ.க - சிவசேனா கட்சிகள் கூட்டணியாகத் தேர்தலை சந்தித்திருப்பினும் முதலமைச்சர் பதவி தொடர்பாக முடிவுக்கு வரமுடியாததால் இழுபறி நீடிக்கிறது. தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் முதல் இரண்டரை ஆண்டுகள் முதல்வராகவும் அதன்பின்னர் பா.ஜ.கவை சேர்ந்த ஒருவர் முதல்வராகவும் இருக்கலாம் என்ற சிவசேனா தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டும் அதை ஏற்க பா.ஜ.க தலைமை மறுத்துவருகிறது. நவம்பர் 7ம் தேதிக்குள் இதில் முடிவு எட்டப்படாவிட்டால் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்படும் என்று பா.ஜ.க தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆட்டம்காட்டும் சிவசேனா; ஆடிப்போன பி.ஜே.பி!- மகாராஷ்டிராவில் பலிக்காத அமித் ஷா வியூகம்

இந்தநிலையில், தங்கள் கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னா மூலமாக பா.ஜ.கவுக்கு ஸ்ட்ராங்கான மெசேஜைத் தட்டிவிட்டிருக்கிறது சிவசேனா. அதன் தலையங்கத்தில், மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை முடிந்தால் அமல்படுத்துங்கள் என்று சவால்விடும் தொனியில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. மேலும், பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா என்றும் கேட்கப்பட்டிருக்கிறது. மேலும், ``பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாதபட்சத்தில் தேசியவாத காங்கிரஸின் 54 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸின் 44 எம்.எல்.ஏக்கள் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏக்கள் சிலரின் உதவியால் இரண்டாவது பெரிய கட்சியான தங்களால் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சிக் கட்டிலில் அமர முடியும்' என்றும் சிவசேனா எச்சரித்திருக்கிறது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

கடந்த 2014ம் ஆண்டு பல்வேறு கருத்துவேறுபாடுகளை மறந்து பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்ததை நினைவுகூர்ந்துள்ள சிவசேனா, அப்போது பா.ஜ.க விதித்த அனைத்து கட்டுப்பாடுகளையும் ஏற்றுக்கொண்டதாகக் கூறியிருக்கிறது. அதனால், தங்களது கட்சி விதித்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் பா.ஜ.க ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள சிவசேனா, கூட்டணிக் கதவை முதலில் தாங்கள் மூட மாட்டோம் என்றும் தெரிவித்திருக்கிறது. இது மகராஷ்டிரா அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தசூழலில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் மகாராஷ்டிராவின் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.