Published:Updated:

`எவ்வளவோ முயன்று பார்த்தேன்; ஆனால்..?!’ -துரை வையாபுரி அரசியலுக்கு வருவது குறித்து வைகோ

``துரை வையாபுரி அரசியலுக்கு வருவதை, என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு தடுத்துப் பார்த்தேன். என்னை மீறிக் காரியங்கள் நடக்கின்றன. தொண்டர்களின் விருப்பம் எதுவுவோ அது ஜனநாயக முறைப்படி நிறைவேற்றப்படும்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம் அருகேயுள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த மதிமுக நிர்வாகி எரிமலை வரதன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில், எரிமலை வரதனின் இல்லத்துக்கு இன்று சென்ற மதிமுக பொதுச்செயலாளரும், ராஜ்ய சபா உறுப்பினருமான வைகோ, அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம், ``துரை வையாபுரி அரசியலுக்கு வருவாரா?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

எரிமலை வரதனின் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்திய வைகோ
எரிமலை வரதனின் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்திய வைகோ

அதற்கு பதிலளித்த அவர், ``துரை வையாபுரி, கடந்த இரண்டு ஆண்டுக்காலமாக எனக்கே தெரியாமல் மதிமுக கட்சிக்காரர்கள் இல்லங்களின் சுப நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவந்தார். கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு உடல்நலக்குறைவு எனத் தகவல் கேட்டாலும், சிகிச்சைக்குத் தேவையான உதவியைச் செய்துவந்திருக்கிறார். கட்சியினரின் இல்லத் திருமண நிகழ்ச்சிகளில் துரை வையாபுரியின் படத்தைப் போடக் கூடாது. அவர் படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டக் கூடாது என நிர்வாகிகளிடம் சொன்னேன். கட்சியின் மாநாட்டுப் பந்தலிலும் அவர் படம் போடக் கூடாது எனச் சொன்னேன்.

துரை வையாபுரி டு துரை வைகோ... வாரிசு அரசியலை வழிமொழிகிறாரா  வைகோ?

அதை மீறிப் படம் போடப்பட்டிருந்த பேனர்களை அகற்றவும் சொல்லியிருக்கிறேன். தொடர்ந்து இதே செயலில் நிர்வாகிகள் ஈடுபட்டால் கட்சியைவிட்டு நீக்கவும் தயங்க மாட்டேன் எனக் கண்டிப்புடன் கூறினேன். சில குடும்பங்களில் வாரிசுகளை அரசியலில் புகுத்துகின்றனர். சிலர் அவர்களைக் கொண்டுவர வேண்டும் என்று அரசியலில் திட்டமிட்டுச் செய்கிறார்கள். நான் அவரை ஊக்குவிக்கவில்லை. அதேநேரத்தில் அவர் அரசியலுக்கு வந்துவிடக் கூடாது எனத் தடுப்பதற்கு என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயன்று பார்த்தேன். அதையும் மீறி தற்போது காரியங்கள் நடக்கின்றன.

வைகோ
வைகோ

’எங்களுக்கு வழிகாட்ட நல்ல ஒரு வழிகாட்டி வேண்டும். அதற்கு எல்லாத் தகுதிகளும் துரை வையாபுரியிடம் இருக்கின்றன’ எனச் சொல்லி என்னையே மீறி தொண்டர்கள் அழைத்துக்கொண்டு போகின்றனர். இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. தொண்டர்களின் விருப்பம் எதுவோ அது ஜனநாயக முறைப்படி நிறைவேற்றப்படும்” என்றவரிடம், ``ஜனநாயக முறைப்படி கட்சியில் துரை வையாபுரி தேர்ந்தெடுக்கப்படுவாரா?” என்ற கேள்விக்கு பதிலளித்த வைகோ, ``யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. அதை நிராகரிக்கவும் முடியாது” எனக் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு