Published:Updated:

ஜூலை 5-ம் தேதி தீர்ப்பு வருகிறது!- மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் வைகோ

ராம் பிரசாத்

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் மதிமுக சார்பில் வைகோ போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வைகோ
வைகோ

மதிமுக தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களவை தேர்தலில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்த ம.தி.மு.க.வுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 2019 ஜூலை 18ம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வைகோ வேட்பாளராக போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ம.தி.மு.க கூட்டம்
ம.தி.மு.க கூட்டம்

தமிழக அரசு, மும்மொழிக் கொள்கையை உறுதியாக எதிர்க்க வேண்டும். தமிழகத்தில் இந்திக்கு இடம் இல்லை என்பதை திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும். காவிரி படுகையைப் பாலைவனம் ஆக்கும் நாசகார ஹைட்ரோ கார்பன் திட்டங்களை, மத்திய பா.ஜ.க. அரசு முற்றாகக் கைவிட வேண்டும். இல்லையெனில், வரலாறு காணாத மக்கள் கொந்தளிப்பை மத்திய - மாநில அரசுகள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை பா.ஜ.க. அரசு செயல்படுத்தக்கூடாது தமிழக அரசும் இதனைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். தமிழகத்தில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதற்கு தமிழக அரசுநிர்வாகத்தின் அலட்சியப்போக்கே காரணமாகும். எடப்பாடி பழனிச்சாமி அரசு போர்க்காலஅடிப்படையில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வைகோ
வைகோ

தி.மு.க ஆட்சிக்காலத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக வைகோ பேசியதாக அவர் மீது ஆயிரம் விளக்கு போலீஸார் தேச விரோத வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு ஜூலை 5-ம் தேதி வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தான் தற்போது வைகோவுக்கு சிக்கலாக உள்ளது.