Published:Updated:

மதிமுக: `தலைமைக் கழகச் செயலாளராகிறார் துரை வையாபுரி; அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வைகோ!'

மதிமுக தலைமைக் கழகச் செயலாளராக துரை வையாபுரி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக வைகோ தெரிவித்திருக்கிறார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் எழும்பூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. முன்னதாக கடந்த 9-ம் தேதி தென்காசியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது வைகோ, ``56 வருடங்களாக அரசியலில் கஷ்டப்பட்டிருக்கிறேன். நூற்றுக்கணக்கான போராட்டங்கள், ஜெயில் வாழ்க்கை என அரசியலில் என் வாழ்க்கையை அழித்திருக்கிறேன். அரசியல் என்னோடு போகட்டும். என் மகன் அரசியலுக்கு வந்து கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை. எனவே அவர் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. ஆனால், அவரின் அரசியல் பிரவேசம் குறித்து 20-ம் தேதி நடைபெறவிருக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கட்சிக் குழு முடிவு செய்யும்" என்று கூறியிருந்தார். வைகோவின் செய்தியாளர் சந்திப்பு மதிமுக-வில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. துரை வையாபுரி அரசியலுக்கு வர வேண்டும் என்று ஒரு தரப்பினரும், அவருக்குப் பதவி வழங்கக் கூடாது என்று மற்றொரு தரப்பினரும் தலைமையிடம் முறையிட்டனர். அதனையடுத்து, கட்சியின் மூத்தத் தலைவர்கள் 20-ம் தேதி நடைபெறவிருக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின்போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்தி துரையின் அரசியல் பிரவேசம் குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறியதாக மதிமுக அலுவலகத்திலிருந்து உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில், நேற்றைய தினம், திருப்பூர் துரைசாமி , கோவையைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலர், வாரிசு அரசியலை எதிர்த்து உருவான கட்சி மதிமுக. அதனால் வைகோவின் மகன் துரைக்கு எந்த பதவியும் வழங்கக் கூடாது என்று வெளிப்படையாகவே போர்க்கொடி தூக்கினார்கள்.

துரை வைகோ- வைகோ
துரை வைகோ- வைகோ

இத்தனை சலசலப்புகளுக்கு மத்தியில் திட்டமிட்டபடி இன்று மாலை மதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் கணேசமூர்த்தி, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகளும், மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், திருப்பூர் துரைசாமி மற்றும் கோவையைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. கூட்டத்தில் வைகோவின் மகனுக்குப் பதவி வழங்குவது குறித்ததான ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்ட இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலானோர் துரை வையாபுரிக்கு பதவி வழங்குவதற்கு ஆதரவு தெரிவித்ததால், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, தன் மகன் துரை தலைமைகக் கழகச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாகத் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வைகோ, " கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் பலரும் துரை வைகோவை கட்சிக்கு அழைக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாக என்னிடம் வலியுறுத்தினார்கள். அதைத்தொடர்ந்து, இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம். அப்போது, வாக்கெடுப்பு நடத்துவது என்று முடிவு செய்தோம். சிலர் வாக்கெடுப்பு வேண்டாம் என்றனர். பின்னர் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினோம். அமைப்புச் செயலாளர் கண்காணிப்பில் வாக்கெடுப்பு நடந்தது. அதில் துரை வைகோவுக்கு 106 வாக்குகள் பதிவானது. அதில் 104 பேர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். 2 பேர் வாய்ப்பு வழங்கக்கூடாது எனத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்தே, துரை வைகோ தலைமைக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதன்மூலம் இனி அவர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து பணி செய்வார். மாவட்ட நிர்வாகிகள் உடன் தொடர்பில் இருப்பார்" என்றார்.

வைகோ
வைகோ
`எவ்வளவோ முயன்று பார்த்தேன்; ஆனால்..?!’ -துரை வையாபுரி அரசியலுக்கு வருவது குறித்து வைகோ

தொடர்ந்து பேசிய வைகோ, "சென்ற மாவட்டங்களிலெல்லாம், துரை வைகோவை கட்சிப்பணிக்கு ஈடுபடுத்த வேண்டுமென தொண்டர்கள் கேட்டுக் கொண்டனர். எனக்குத் தெரியாமல் அவரும் கட்சிப்பணியிலும் களகப்பணியிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் துரை வைகோவின் செயல்பாட்டை தொண்டர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டனர். அதனால், தொண்டர்களின் கருத்துகளை மீறி கட்சிப் பணியாற்றும் ஒருவரை நான் தடுக்கிறோனோ என்ற திகைப்புக்கு உள்ளானேன். அதனால்தான் இன்று கூட்டத்தைக் கூட்டி இந்த முடிவினை எடுத்தோம். துரை வையாபுரி தேர்வில், வாரிசு அரசியல் கிடையாது. கட்சி தொண்டர்கள் விருப்பப்படியே அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்" என்றார்.

வரும் 25-ம் தேதி அண்ணா நினைவிடம் மற்றும் பெரியார் திடலில் மரியாதை செலுத்தவுள்ள துரை வையாபுரி, வரும் 25-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு