Published:Updated:

ம.தி.மு.க-வை தி.மு.க-விடம் விற்றுவிடுவார் வையாபுரி! - முகம் சிவக்கும் செவந்தியப்பன்...

செவந்தியப்பன்
பிரீமியம் ஸ்டோரி
செவந்தியப்பன்

‘தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தது அவர்களுக்குப் பிடிக்கவில்லை’ என்று எங்கள்மீதே பழியைப் போடுகிறார். ‘தி.மு.க கூட்டணியைவிட்டு விலகக் கூடாது’ என்று சொன்னவர்கள் நாங்கள்.

ம.தி.மு.க-வை தி.மு.க-விடம் விற்றுவிடுவார் வையாபுரி! - முகம் சிவக்கும் செவந்தியப்பன்...

‘தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தது அவர்களுக்குப் பிடிக்கவில்லை’ என்று எங்கள்மீதே பழியைப் போடுகிறார். ‘தி.மு.க கூட்டணியைவிட்டு விலகக் கூடாது’ என்று சொன்னவர்கள் நாங்கள்.

Published:Updated:
செவந்தியப்பன்
பிரீமியம் ஸ்டோரி
செவந்தியப்பன்

ம.தி.மு.க-வின் தலைமைக்கழகச் செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வைகோவுக்கு எதிராகக் கட்சிக்குள் கலகக்குரல்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. துரை வைகோவின் பதவி அறிவிப்புக்கான பொதுக்குழுக் கூட்டத்தை கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் புறக்கணித்துவிட்டார்கள். இன்னொரு பக்கம், வைகோவுடன் பொடா சிறைவாசம் அனுபவித்த சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பன் தலைமையில் விருதுநகர் மாவட்டச் செயலாளர் சண்முகசுந்தரம், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன், உயர்மட்டக்குழு உறுப்பினர் மதுரை அழகுசுந்தரம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், துரை வைகோவுக்கு கட்சியில் உயர் பொறுப்பு வழங்கியதற்கும், வைகோவின் அரசியல் நிலைப்பாடுகளுக்கும் எதிராகக் கேள்விகளை எழுப்பி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்! இந்த நிலையில்தான் செவந்தியப்பனிடம் பேசினோம்...

‘‘ஏன் இந்த திடீர் கலகம்?”

‘‘திடீர் கலகம் அல்ல... ஏற்கெனவே பலரும் அதிருப்தியில்தான் இருக்கிறார்கள். சென்னையில் நடந்த பொதுக்குழுவில்கூட அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, வேலூர் சுப்ரமணியம், திருச்சி வீரபாண்டியன், புதுக்கோட்டை சந்திரசேகர் உட்பட 17 மாநில நிர்வாகிகள் கலந்துகொள்ளவில்லை. வைகோவிடம் நான் ஏற்கெனவே எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், ‘தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தது அவர்களுக்குப் பிடிக்கவில்லை’ என்று எங்கள்மீதே பழியைப் போடுகிறார். ‘தி.மு.க கூட்டணியைவிட்டு விலகக் கூடாது’ என்று சொன்னவர்கள் நாங்கள். ஆனால், நாங்கள் தி.மு.க-வுக்குச் சென்றுவிடுவோமோ என்று பயந்து, அதைத் தடுக்க இப்படிப் பொய் சொல்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ‘தனிச்சின்னம்’ என்று சொன்ன வைகோவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்புக்கொள்ளவைத்ததே நானும் மதுரை பூமிநாதனும்தான். வாரிசு அரசியலை எதிர்த்து ம.தி.மு.க-வைத் தொடங்கிய வைகோ, இன்று தன் மகன் துரை வையாபுரியை தலைமைக் கழகச் செயலாளராக்கியிருக்கிறார். அதேசமயம், இந்தப் பதவியை வைகோ கொடுத்தாரா, அவரின் குடும்பத்தினர் பறித்துக்கொண்டார்களா என்று தெரியவில்லை.’’

‘‘கடந்த சட்டமன்றத் தேர்தலில் உங்களுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்காததால்தான் இப்படிக் குற்றம்சாட்டுவதாக வைகோ கூறுகிறாரே?’’

‘‘அப்படியெல்லாம் இல்லை. அதேசமயம், ஒரு கட்சி நிர்வாகி தேர்தலில் சீட் எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால், சீட் கிடைக்காததற்காக நான் கவலைப்படவும் இல்லை. தொண்டர்கள்தான் எனக்கும் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.’’

ம.தி.மு.க-வை தி.மு.க-விடம் விற்றுவிடுவார் வையாபுரி! - முகம் சிவக்கும் செவந்தியப்பன்...

‘‘வைகோவுக்கு எதிராக நீங்கள் கட்சி நிர்வாகிகளைத் தயார்ப்படுத்துவதாகச் சொல்கிறார்களே?’’

‘‘நான் யாரையும் தயார்ப்படுத்தவில்லை... அதற்கான தேவையும் எனக்கு இல்லை. ஆனால், ம.தி.மு.க-வை நல்ல விலைக்கு தி.மு.க-வுக்கு விற்றுவிட வேண்டும் என்ற திட்டம் துரை வையாபுரிக்கு உண்டு. அதற்காக அவர் சில முக்கிய நபர்களைச் சந்தித்துவருவதாகத் தகவல்கள் வருகின்றன. அதனால், துரை வையாபுரிக்கு வேண்டுமானால் ஆதாயம் கிடைக்கலாம்... ஆனால், கட்சிக்காகக் கொடிபிடித்த தொண்டர்களுக்கு ஒன்றும் கிடைக்காது. அதற்கு, அவர்களாகவே போய் தி.மு.க-வில் சேர்ந்தாலாவது ஏதாவது பலன் கிடைக்கும்.’’

‘‘எதை வைத்து இப்படிச் சொல்கிறீர்கள்?’’

‘‘தி.மு.க-வுக்கு, பலமுறை துரோகம் செய்தவர் வைகோ. எடப்பாடி போன்றவர்களிடம் சிக்கி தமிழகத்தின் நலன் பாதிக்கப்பட்டதற்கு இவர் முன்னெடுத்த மக்கள் நலக் கூட்டணிதான் காரணம். தற்போது முதலமைச்சர் ஸ்டாலினிடம் நல்ல பெயர் எடுக்க, பல முயற்சிகளைச் செய்துவருகிறார். அது மட்டுமல்ல... வைகோவும் அவரின் மகனும் தங்களது சுயலாபத்துக்காக பா.ஜ.க-வுடன் இணையவும் தயங்க மாட்டார்கள். இவர்களை நம்பியுள்ள தொண்டர்கள்தான் பாவம்... 30 ஆண்டுகள் எங்கள் காலம் வீணாகப் போய்விட்டது. எஞ்சி இருக்கிற இளைஞர்களாவது தப்பிக்கட்டும் என்று நினைக்கிறோம். தி.மு.க மட்டும் கதவைத் திறந்துவைத்திருந்தால், பொதுக்குழுவுக்கு வந்த பாதிப்பேர் அங்கு சென்றிருப்பார்கள். அந்த நிலையில்தான் இன்று ம.தி.மு.க இருக்கிறது!’’

“எல்லாம் சரி... ம.தி.மு.க-வின் செல்வாக்கு தமிழகத்தில் எப்படி உள்ளது?’’

“இன்றைக்குத் தமிழகத்தில் மொத்தத் தொண்டர்களின் எண்ணிக்கையே 20 ஆயிரத்தைத் தாண்டாது. பலர் வேறு கட்சிகளுக்குப் போய்விட்டார்கள். வெற்றிபெற வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் வைகோ தவறான முடிவுகளை எடுத்ததே இதற்குக் காரணம்!”