Published:Updated:

`10 மடங்கு அதிகரித்த ஆக்ஸிஜன் உற்பத்தி முதல் புயல்கள் வரை..’ - பிரதமர் மோடியின் மன் கி பாத் உரை

மோடி
மோடி

"ஒரு ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் பெண்களால் முழுமையாக இயக்கப்படுவதைக் கேட்டு தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் பெருமிதம் கொள்வார்கள். நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் அதில் பெருமைப்படுவார்கள்" - பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று 7 வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத்தின் 77-வது நிகழ்வில் இன்று உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் கொரோனா பாதிப்பு குறித்து பேசிய அவர், ``நமது பொறுமையையும், வலியைத் தாங்கும் திறனையும் சோதிக்கும் நேரத்தில் நான் உங்களிடம் பேசுகிறேன். நமது அன்புக்குரியவர்களில் பலர் காலமாகியுள்ளனர். கொரோனா பாதிப்பின் முதல் அலையை வெற்றிகரமாகச் சமாளித்தபின், நாட்டின் மன உறுதியும், நம்பிக்கையும் மிக அதிகமாக இருந்தது. ஆனால் இந்த புயல் (இரண்டாவது அலை) தேசத்தை உலுக்கியுள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து, ``கொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த தொற்றுநோய் பாதிப்பு கடந்த 100 ஆண்டுகளில் உலகம் கண்ட மிக மோசமான தொற்றுநோய். நமது முன்கள தொழிலாளர்கள் கொரோனா உடன் போராடுவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளனர். சாதாரண காலங்களில், இந்தியா ஒரு நாளில் 900 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்தது. இப்போது இது 10 மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது, ஒவ்வொரு நாளும் சுமார் 9,500 மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன” என்றார்.

ஆக்சிஜன்
ஆக்சிஜன்

``தொற்று மட்டுமில்லாமல் இந்த மாதத்தில் மட்டுமே தோன்றி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இரண்டு புயல்களான டவ்தே மற்றும் யாஷ் புயல்களின் பாதிப்பில் துணிந்து நின்ற இந்திய மக்களின் தைரியத்தை பாராட்டுகிறேன். பேரழிவின் இந்த கடினமான மற்றும் அசாதாரண சூழ்நிலையில், சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களின் மக்களும் தைரியத்தைக் காட்டியுள்ளனர், நெருக்கடியின் இந்த நேரத்தில், மிகுந்த பொறுமையுடனும், ஒழுக்கத்துடனும் - அனைத்து குடிமக்களையும் பாராட்ட விரும்புகிறேன்” என்றார்.

மேலும் பிரதமர் மோடி பேசுகையில், ``இரண்டாவது அலையின் போது, ​​தொலைதூர பகுதிகளுக்கு மருத்துவ ஆக்ஸிஜனை வழங்குவது ஒரு பெரிய சவாலாக இருந்தது. நாடு சவால்களை எதிர்கொள்ள தயாராக இருந்த போது கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் டேங்கர்களின் ஓட்டுநர்கள் உதவியது மட்டுமல்லாமல் லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றினர்” என்றார்.

ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெண் ஓட்டுநருடன் பேசிய பிரதமர் மோடி, "ஒரு ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் பெண்களால் முழுமையாக இயக்கப்படுவதைக் கேட்டு தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் பெருமிதம் கொள்வார்கள். நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் அதில் பெருமைப்படுவார்கள். அது மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியரும் இது குறித்து பெருமைப்படுவார்கள்” என்றார்.

தொடர்ந்து உத்தரபிரதேசத்தின் ஜான்பூரைச் சேர்ந்த தினேஷ் உபாத்யாயுடன் பேசினார். அவர் திரவ ஆக்ஸிஜன் டேங்கர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றவர் ஆவர். இவர்களைப் போன்றவர்களால் தான் நாடு நெருக்கடியை சமாளிக்க முடிந்தது என்று கூறினார்.

மோடி
மோடி

இறுதியாக, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் மோடி பாராட்டியதோடு, தடுப்பூசி போடுவதில் மக்களிடம் இருக்கும் தயக்கம் போன்ற பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினார். ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்ற பிற முன்னணி ஊழியர்களின் முயற்சிகளைப் பாராட்டினார். மேலும் கொரோனா பாசிட்டிவாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின்படி தனித்து இருக்கவும் சிகிச்சை நெறிமுறையைப் பின்பற்றவும் மக்களை கேட்டுக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு