Published:Updated:

ஏன் எரிகிறது மேகாலயா?

மேகாலயா
பிரீமியம் ஸ்டோரி
மேகாலயா

தாக்‌ஷாயிணி

ஏன் எரிகிறது மேகாலயா?

தாக்‌ஷாயிணி

Published:Updated:
மேகாலயா
பிரீமியம் ஸ்டோரி
மேகாலயா

ஒரு போலீஸ் என்கவுன்ட்டர், மொத்த மேகாலயா மாநிலத்தையும் பதற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அந்த மாநில முதல்வர் கான்ராட் சங்மாவின் வீட்டில் இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. போலீஸ் என்கவுன்ட்டருக்குக் கண்டனம் தெரிவித்து மாநில உள்துறை அமைச்சரான லக்மென் ரிம்புய், தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு, இன்டர்நெட் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு விதிக்கப்படும் அளவுக்கு நிலைமை முற்றியிருக்கிறது. பல வாகனங்கள் தீக்கரையாக்கப்பட்டுள்ளன. என்னதான் நடக்கிறது மேகாலயாவில்?

ஏன் எரிகிறது மேகாலயா?

பிரச்னையின் பின்னணி!

மேகாலயா மாநிலத்தில் காசி, ஜைன்தியா, காரோ ஆகிய பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். இந்தப் பழங்குடியினரின் நெடுநாள் கோரிக்கை காரணமாக, அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து 1972-ம் ஆண்டு ஜனவரி மாதம் காசி, ஜைன்தியா, காரோ மலைப்பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, `மேகாலயா’ என்கிற அடையாளத்துடன் தனி மாநில அந்தஸ்தும் வழங்கப்பட்டது. அதற்குப் பிறகும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. தனி நாடு கோரிக்கையை முன்வைத்து, ‘ஹைந்நியூவ்ட்ரெப் அச்சிக் லிபரேஷன் கவுன்சில்’ என்கிற போராளிக்குழு 1980-களில் தொடங்கப்பட்டது. இந்தக் குழுவின் நிறுவனர்களில் ஒருவரான செரிஸ்டெர்ஃபீல்ட் தேன்ங்கியூவ்தான் சமீபத்தில் போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டிருக்கிறார். இதற்குக் கண்டனம் தெரிவித்து தேன்ங்கியூவ்வின் ஆதரவாளர்களால் தற்போது மேகாலயாவில் கலவரம் வெடித்திருக்கிறது.

யார் செரிஸ்டெர்பீஃல்ட் தேன்ங்கியூவ்?

‘ஹைந்நியுவ்ட்ரெப் அச்சிக் லிபரேஷன் கவுன்சில்’ என்கிற போராளி இயக்கத்தின் மூலம் இந்தியாவிடமிருந்து விடுதலை கேட்டு போராடிய பழங்குடியினங்களுக்குள் ஒருகட்டத்தில் பிளவு ஏற்பட்டது. 1992-ல் இயக்கம் இரண்டாகப் பிளவுற்றது. காசி மற்றும் ஜைன்தியா இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள், ‘ஹைந்நியூவ்ட்ரெப் நேஷனல் லிபரேஷன் கவுன்சில்’ என்கிற இயக்கமாகவும், காரோ இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் ‘அச்சிக் நேஷனல் வாலன்டியர் கவுன்சில்’ என்கிற இயக்கமாகவும் பிரிந்து செயல்பட்டனர். இதில், ஹைந்நியூவ்ட்ரெப் நேஷனல் லிபரேஷன் கவுன்சில் அமைப்பில் செரிஸ்டெர்ஃபீல்ட் தேன்ங்கியூவ் பொதுச்செயலாளராக இருந்துவந்தார்.

ஏன் எரிகிறது மேகாலயா?

ஒரு கட்டத்தில் தனி நாடு கோரிக்கையைக் கைவிட்ட காரோ இனக்குழுவினர், ‘தங்களுக்கென தனி மாநிலம் அமைத்துத் தர வேண்டும்’ எனக் கோரினர். இந்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக, ஜூலை 23, 2004-ல் சண்டை நிறுத்தத்தையும் அச்சிக் நேஷனல் வாலன்டியர் கவுன்சில் அறிவித்தது. இந்த அமைப்பால் மேகாலயா போலீஸாருக்குப் பெரிய அச்சுறுத்தல் ஏதுமில்லை. ஆனால், ஹைந்நியூவ்ட்ரெப் நேஷனல் லிபரேஷன் கவுன்சில் இந்திய ராணுவம், மேகாலயா போலீஸ் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்திவந்தது. தனி நாடு கேட்டுப் போராடும் இந்த இயக்கத்தின் போராளிகள் தாக்குதலை நிகழ்த்திவிட்டு, பங்களாதேஷில் பதுங்கிக்கொள்வதை வழக்கமாக்கியுள்ளனர். தவிர, பணம் கேட்டு மிரட்டுதல், ஆள் கடத்தல் புகார்களும் இந்த இயக்கத்தின்மீது மேகாலயா போலீஸாரால் முன்வைக்கப்படுகின்றன. இரண்டு முறை இந்திய அரசால் தடைசெய்யப் பட்டிருக்கும் இந்த இயக்கத்திலிருந்து விலகுவதாக செரிஸ்டெர்ஃபீல்ட் தேன்ங்கியூவ் 2018-ம் ஆண்டு அறிவித்தார். ஆனால், ‘அவர் இயக்கச் செயல்பாடுகளிலிருந்து விலகவில்லை. தீவிரவாதத் தாக்குதலுக்குத் துணை போயிருக்கிறார்’ என்று குற்றம்சாட்டுகிறது மேகாலயா போலீஸ்.

ஏன் எரிகிறது மேகாலயா?

திட்டமிட்ட என்கவுன்ட்டரா?

இந்த என்கவுன்ட்டர் பற்றி விரிவாகப் பேசியிருக்கும் மேகாலயா டி.ஜி.பி ஆர்.சந்திரநாதன், “மேகாலயாவின் க்ளேரியாட் பகுதியில் கடந்த ஜூலையில் நடந்த குண்டு வெடிப்பிலும், ஷில்லாங்கின் லய்தும்க்ரா மார்க்கெட் பகுதியில் கடந்த வாரம் நிகழ்ந்த குண்டுவெடிப்பிலும் செரிஸ்டெர்ஃபீல்ட் தேன்ங்கியூவுக்குத் தொடர்பிருக்கிறது. அமைதியாக இருப்பதுபோலக் காட்டிக்கொண்டு, இந்தக் குண்டு வெடிப்புகளுக்கு தேன்ங்கியூ துணைபோயிருக்கிறார். இதற்கான வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன. மற்றொரு குண்டுவெடிப்புக்கு அவர்கள் தயாராவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், ஆகஸ்ட் 13-ம் தேதி அதிகாலை செஸ்டெர்ஃபீல்ட் தேன்ங்கியூவைக் கைதுசெய்வதற்காக, ஷில்லாங்கின் மவ்லாய் பகுதிக்கு போலீஸார் சென்றனர். போலீஸைப் பார்த்தவுடன் கத்தியால் அவர்களைத் தாக்க முயன்றிருக்கிறார் தேன்ங்கியூவ். அப்போது, தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக போலீஸார் சுட்டதில் அவர் இறந்துவிட்டார்” என்று விளக்கமளிக்கிறார்.

கான்ராட் சங்மா, லக்மென் ரிம்புய், செரிஸ்டெர்பீஃல்ட் தேன்ங்கியூவ்,
கான்ராட் சங்மா, லக்மென் ரிம்புய், செரிஸ்டெர்பீஃல்ட் தேன்ங்கியூவ்,

‘இது எதிர்பாராத சம்பவம்’ என போலீஸ் தரப்பு குறிப்பிடுகிறது. ‘திட்டமிட்டுத்தான் தேன்ங்கியூவை போலீஸார் சுட்டுக்கொன்றிருக்கிறார்கள்’ என்ற குற்றச்சாட்டோடு அவரது ஆதரவாளர்களால் கலவரம் வெடித்திருக்கிறது. தன் உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கும் லக்மென் ரிம்புய், இந்தச் சம்பவத்தில் நீதி விசாரணை கோரியிருக்கிறார். மேகாலயாவில் மறைந்த முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மாவின் மகன் கான்ராட் சங்மாதான் முதல்வராக இருக்கிறார். தேன்ங்கியூவ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால், அவரது தேசிய மக்கள் கட்சிக்கு அழுத்தம் அதிகரித்திருக்கிறது. நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக கான்ராட் சங்கமா உறுதியளித்தாலும், மேகாலயாவில் பதற்றம் முழுமையாகத் தணியவில்லை. `சொர்க்க பூமி’ என்றழைக்கப்படும் மேகாலயாவில் அமைதி திரும்பட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism