Published:Updated:

1973 திண்டுக்கல் இடைத்தேர்தல்; ஆறு மாத குழந்தை அதிமுக வெற்றியடைந்த சரித்திரம்!

எம்.ஜி.ஆர்

1973 திண்டுக்கல் இடைத்தேர்தலை வெறும் தேர்தலாக கடந்து சென்றுவிட முடியாது. அது ஒரு அரை நூற்றாண்டு அரசியல் வரலாற்றின் தொடக்கம் என்பதை பின்னாளில் வரலாறு உணர்த்திவிட்டது.

1973 திண்டுக்கல் இடைத்தேர்தல்; ஆறு மாத குழந்தை அதிமுக வெற்றியடைந்த சரித்திரம்!

1973 திண்டுக்கல் இடைத்தேர்தலை வெறும் தேர்தலாக கடந்து சென்றுவிட முடியாது. அது ஒரு அரை நூற்றாண்டு அரசியல் வரலாற்றின் தொடக்கம் என்பதை பின்னாளில் வரலாறு உணர்த்திவிட்டது.

Published:Updated:
எம்.ஜி.ஆர்

1973-ல் நடந்த திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல், தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்திய தேர்தலாக அமைந்துவிட்டது. எம்.ஜி.ஆர் தலைமையில் புதிதாக உருவான அ.தி.மு.க என்கிற இயக்கம், அந்த இடைத்தேர்தலில் வென்று தி.மு.க-வுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. தேர்தல் முடிவுகள் 1973, மே 21-ம் தேதி வெளியானபோது, ஒரு புது அரசியல் சக்தி தமிழகத்தில் உருவாகியிருப்பதை யாரும் கவனிக்கத் தவறவில்லை. அந்த சரித்திர சாதனையை எம்.ஜி.ஆர் நிகழ்த்தி இன்றோடு 49 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அந்த சமயத்தில் அவர் சந்தித்த சிக்கல்கள், நெருக்கடிகள் ஏராளம்.

அறிஞர் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர்.
அறிஞர் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர்.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, அ.தி.மு.க-வுக்கு ஆறு மாதம்தான் வயது. அங்கீகரிக்கப்படாத மாநில கட்சி என்பதால், நிலையான சின்னம் ஏதுமில்லை. வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு, சுயேட்சைகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அ.தி.மு.க வேட்பாளர் மாயத்தேவரிடம் 16 சின்னங்களைக் காட்டிய அரசு அதிகாரிகள், இதிலிருந்து ஒன்றை தேர்வு செய்துக் கொள்ளுமாறு கூறினர். இதில் இரட்டை இலை சின்னமும் அடக்கம். எம்.ஜி.ஆரிடம் பேசிய மாயத்தேவர், "நாம் இரட்டை இலையை தேர்ந்தெடுப்போம். வெற்றியைக் குறிக்கும் சின்னம். எளிதாக வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும். சுவற்றில் இந்த சின்னத்தை இலகுவாக வரையலாம்" என்று பேசி இரட்டை இலையில் அ.தி.மு.க போட்டியிட சம்மதம் வாங்கினார். இப்படித்தான், அ.தி.மு.க-வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அ.தி.மு.க சந்திக்கும் முதல் பொதுத் தேர்தல் என்பதால், அரசியல் எதிர்பார்ப்புகளும் அதிகரித்தன. தி.மு.க சார்பில் பொன்.முத்துராமலிங்கமும், காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் சித்தனும் களமிறங்கினர். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, மொத்த அமைச்சரவை சகாக்களையும் பிரசாரத்தில் இறக்கினார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. தந்தை பெரியாரும் தி.மு.க-வை ஆதரிப்பதாக அறிக்கை வெளியிட்டார். 'உங்கள் ஓட்டு தமிழனுக்கா.. அல்லது அந்நியனுக்கா?' என எம்.ஜி.ஆரின் மலையாள பின்புலத்தை குறிவைத்து தி.மு.க பிரசாரம் செய்தது. அந்த சமயத்தில்தான், எம்.ஜி.ஆரின் நடிப்பு, இயக்கத்தில் உருவான 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்திற்கும் சிக்கல்கள் முளைத்தன. நெருக்கடிகளை மீறி வெளிவந்த அந்த திரைப்படம் வசூலில் சக்கைப் போடு போட்டது. இந்த உத்வேகத்தில், தேர்தல் களத்தில் தீவிரமாக உழைத்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் - கருணாநிதி
எம்.ஜி.ஆர் - கருணாநிதி

அன்றைய காலக்கட்டம் குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், "எம்.ஜி.ஆரின் உண்மையான பலம் என்ன என்பதை, திண்டுக்கல் இடைத்தேர்தல்தான் தமிழக அரசியலுக்கு பட்டவர்த்தனமாக உணர்த்தியது. பெரியாருடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக தி.மு.க என்கிற இயக்கத்தை தொடங்கிய அறிஞர் அண்ணா, 1952 பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை. 'காங்கிரஸ் என்கிற இயக்கத்தை வீழ்த்த முடியுமா? நம்மிடம் பிரபலமான முகங்கள் இல்லையே' என்கிற தயக்கம்தான் அதற்குக் காரணம். 1953-ல் எம்.ஜி.ஆர் தி.மு.க-வில் இணைகிறார். அதன்பிறகுதான், தி.மு.க-வின் பெயர் பிரபலமடைய ஆரம்பித்தது. பட்டித்தொட்டியெங்கும் உதயசூரியன் சின்னத்தை கொண்டு சென்ற எம்.ஜி.ஆர்., தன் திரைப்படங்கள் வாயிலாலும் கட்சியை வளர்த்தார். இதில் ஏற்பட்ட தன்னம்பிக்கையால்தான், 1957 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தார் அண்ணா. அந்தத் தேர்தலில் தி.மு.க-வுக்கு 15 இடங்கள் கிடைத்தன. அடுத்ததாக, 1962 சட்டமன்றத் தேர்தலில் 50 தொகுதிகளை தி.மு.க கைப்பற்றியது. 1967-ல் ஆட்சியையே பிடித்தது தி.மு.க. அக்கட்சியின் ஒவ்வொரு வெற்றியிலும் எம்.ஜி.ஆரின் உழைப்பு இருக்கிறது.

அண்ணாவுக்குப் பிறகு, அரசியல் வாரிசாக யாரைத் தேர்வு செய்வது என விவாதம் எழுந்தபோது, கருணாநிதிக்கு கைகொடுத்தார் எம்.ஜி.ஆர். இதன் பயனாகத்தான், கருணாநிதி கையில் ஆட்சியே வந்தது. 1971-ல் கருணாநிதி அமைச்சரவை இருந்தபோது, சிறுசேமிப்புக் குழுத் தலைவர் என்கிற பதவியில் மட்டுமே எம்.ஜி.ஆர் இருந்தார். ஆட்சியில் தலையிடவெல்லாம் அவர் விரும்பவில்லை. ஆனால், அவரைப் புறந்தள்ளுவதற்காகவும், அரசியல்ரீதியாக அவரை முடக்குவதற்கும் கருணாநிதி செய்த வேலைகள் அனைத்தும் அம்பலப்பட்டுப் போயின. தவிர, பெரும் பண்ணையார்கள் சூழ் உலகமாக தி.மு.க மாறியிருந்தது. கொதித்தெழுந்த எம்.ஜி.ஆர்., கட்சி நிர்வாகிகளிடம் கணக்குக் கேட்டார். இது கருணாநிதிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. எம்.ஜி.ஆரின் உழைப்பை உதாசீனப்படுத்தி, அவரை சதி வேலை செய்து கட்சியிலிருந்து வெளியேற்றினார் கருணாநிதி. தான் வெளியேற்றியது ஒரு பழுத்த அரசியல்வாதியை என்பதை கருணாநிதி உணரவில்லை. திண்டுக்கல் இடைத்தேர்தல் முடிவுகள்தான் அதை உணர்த்தின. இடைத்தேர்தலில், அ.தி.மு.க வேட்பாளர் மாயத்தேவர் 2.6 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். தி.மு.க மூன்றாமிடம் சென்றது. எம்.ஜி.ஆர் என்கிற தலைவனை, அ.தி.மு.க என்கிற இயக்கத்தை தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக அந்த தேர்தல் முடிவுகள் அமைந்தன" என்றார் விரிவாக.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

தேர்தலில் வெற்றிப் பெற்றவுடன், எம்.ஜி.ஆரிடமிருந்து ஒரு அறிக்கை வந்தது. "தமிழ்ப் பண்பு, கலாசாரம், மரபு, அண்ணாவின் வழி, வள்ளுவன் நெறிமுறை உள்ளிட்டவற்றை இதய சுத்தியோடு பின்பற்றுபவன்தான் தமிழன். இதை ஒளிவு மறைவில்லாமல் அ.தி.மு.க பின்பற்றுவதால்தான், பெருவாரியான வாக்குகளை அளித்து மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்" என்று அறிக்கையில் கூறினார் எம்.ஜி.ஆர். 'தமிழன்' என்கிற அடையாளத்தை உசுப்பிவிட்டு தி.மு.க செய்த பிரசாரத்தை, தேர்தல் வெற்றி மூலமாக உடைத்தெறிந்தார் எம்.ஜி.ஆர். இந்த வெற்றி தந்த ஊக்கத்தில், 1974-ம் ஆண்டு கோவை மேற்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்று, சட்டமன்றத்திலும் தங்கள் கணக்கை ஆரம்பித்தது அ.தி.மு.க. அக்கட்சியின் வேட்பாளர் அரங்கநாயகம், அ.தி.மு.க-வின் முதல் சட்டமன்ற உறுப்பினராக அவைக்குச் சென்றார். 1973 திண்டுக்கல் இடைத்தேர்தலை வெறும் தேர்தலாக கடந்து சென்றுவிட முடியாது. அது ஒரு அரை நூற்றாண்டு அரசியல் வரலாற்றின் தொடக்கம் என்பதை பின்னாளில் வரலாறு உணர்த்திவிட்டது.