Published:Updated:

`அமைச்சர் காரையே ஓரமா நிறுத்தணுமா?’; காவலரை அறைந்த உதவியாளர்! - திருச்செந்தூரில் சர்ச்சை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கிருபாகரன் - அமைச்சரின் உதவியாளர்
கிருபாகரன் - அமைச்சரின் உதவியாளர்

திருச்செந்தூரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் வாகனத்தை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதபடி ஒதுக்கி நிறுத்தும்படி சொன்ன போக்குவரத்து தலைமைக் காவலரை அமைச்சரின் உதவியாளர் கிருபாகரன், அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்துவருபவர் முத்துக்குமார். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலின் சரவணப் பொய்கைப் பகுதி நுழைவு வாயிலில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, நுழைவு வாயிலின் அருகிலுள்ள மணி அய்யர் ஹோட்டல் முன்பு திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வும், மீனவர்நலன், மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுடன் வந்த வாகனத்தை நிறுத்திவிட்டு அமைச்சரின் உதவியாளர் கிருபா ஹோட்டலுக்குள் சென்றிருக்கிறார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

அப்போது, கோயிலின் உள் பகுதியிலிருந்து வெளியே செல்வதற்காக கார்கள் வரிசையாக வந்திருக்கின்றன. அமைச்சருடன் வந்த வாகனத்தின் டிரைவர் குமாரிடம் காரை, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதபடி சற்று ஓரமாக நிறுத்தும்படி சொன்னதற்கு கார் டிரைவருக்கும், போக்குவரத்து தலைமைக் காவலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, அந்த டிரைவர் அமைச்சரின் உதவியாளர் கிருபாவிடம் சொல்ல, தலைமைக் காவலரை அழைத்த கிருபா, அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார். இதையடுத்து காரை எடுத்துச் சென்றிருக்கிறார். பின்னர், போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய தலைமைக் காவலர் முத்துக்குமார், அமைச்சரின் உதவியாளர் மீது திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். என்ன நடந்தது என போக்குவரத்து தலைமைக் காவலர் முத்துக்குமாரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

முத்துக்குமார் - போக்குவரத்து தலைமைக் காவலர்
முத்துக்குமார் - போக்குவரத்து தலைமைக் காவலர்

``திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலின் டோல்கேட் முன்பு டிராஃபிக்கை ஒழுங்குபடுத்துவதுதான் என்னோட பணி. எப்பவும்போல டிராஃபிக்கை க்ளியர் பண்ணிக்கிட்டு இருந்தேன். அந்த ரோட்டுல இருக்குற மணி அய்யர் ஹோட்டல் முன்னால, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுடன் வந்த காரை (TN 43G 8969 எண் கொண்ட இனோவா) நிறுத்திட்டு அமைச்சரின் உதவியாளர் கிருபாகரன், ஹோட்டலுக்குள் போனார். காரை டிரைவர் ஓரமாக நிறுத்தாமல் நடுரோட்டில் நிறுத்தினார். அந்த ரோடு குறுகலான ரோடுங்கறதுனால கோயில்ல இருந்து உள்ளே போற கார்கள், வெளியே வர்ற கார்கள்னு எப்பவுமே டிராஃபிக்காத்தான் இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையிலதான் மணி அய்யர் ஹோட்டலுக்கு முன்னால நடுரோட்டுல அமைச்சருடன் வந்த கார் நிறுத்தப்பட்டிருந்துச்சு. அதனால கோயில்லருந்து வெளியே வர்ற கார்கள் ஒண்ணுக்குப் பின் ஒண்ணா நின்னு ரொம்ப டிராஃபிக் ஆகிடுச்சு. காரோட டிரைவர் குமாருங்கிறவர்ட்ட, ``சார் காரைக் கொஞ்சம் ஓரமா நிப்பாட்டுங்க. பின்னால பாருங்க. எவ்வளவு கார் வரிசைகட்டி நிக்குதுன்னு... ரொம்ப டிராஃபிக் ஆகிடும்னு சொன்னேன்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுடன் உதவியாளர் கிருபாகரன்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுடன் உதவியாளர் கிருபாகரன்

ஆனா, `காரை எடுக்க முடியாது. உன் வேலையைப் பார்த்துட்டுப் போ. டிராஃபிக் ஆனா எனக்கு என்ன?” எனச் சொன்னார் டிரைவர். பக்கத்துல இருக்குற ஆட்டோ டிரைவர்கள் வந்து ``ஒரு போலீஸை இப்படி மரியாதை இல்லாமப் பேசலாமாப்பா”ன்னு சொல்லி அவரை அனுப்பினார்கள். உடனே ஹோட்டலுக்குள்ள போனவர் கிருபாவிடம் என்ன சொன்னார்னு தெரியலை. வேகமாக நடந்து வந்தவர், `என் டிரைவரை எப்படிக் காரை எடுத்து தள்ளி நிப்பாட்டச் சொல்லலாம்’னு சொல்லி சில தகாத வார்த்தைகளால் கோபமாகப் பேசி என்னோட இடது கன்னத்துல ஒங்கி அறைந்தார்.

அதுல என் கண்ணாடி கீழே விழுந்தது. காரை ஓரமா நிறுத்துங்கன்னு சொன்னது தப்பா சார்? உடனே, திருச்செந்தூர் தாலுகா போலீஸ் ஸ்டேஷன்ல கிருபா மேல கம்ப்ளெயின்ட் கொடுத்தேன். கம்ப்ளெயின்ட்டை வாங்கி மட்டும்வேச்சாங்க.

குறிப்பிட்ட கார்
குறிப்பிட்ட கார்

அப்புறமா இன்ஸ்பெக்டர் போன் செஞ்சு, ``நீங்க கம்ப்ளெயின்ட் கொடுத்த ஸ்டேஷனுக்கு போங்க. இன்ஸ்பெக்டர் எல்லாத்தையும் பார்த்துக்குவார்”னு சொன்னாரு. நான் ஸ்டேஷனுக்கே போனேன். கிருபா அங்கே வந்தாரு. அடிச்சது தப்புதான்னு மன்னிப்புக் கேட்டாரு. மன்னிப்புக் கேட்ட பிறகு எதுக்கு கம்ளெயின்ட்னு வாபஸ் வாங்கிட்டேன்” என்றார்.

இது குறித்து கிருபாகரனின் விளக்கத்தைக் கேட்க அவரது செல்போன் எண்ணுக்குப் பலமுறை தொடர்புகொண்டோம். அவரது எண் ஸ்விட்ச் ஆஃப் நிலையிலேயே இருந்தது. ``அண்ணாச்சியின் உதவியாளர்களில் கிருபா ரொம்ப பொறுப்பானவர். அமைதியானவரும்கூட. அண்ணாச்சி எம்.எல்.ஏ ஆபீஸுக்கு மனு கொடுக்க வந்த எல்லாத்துக்குமே கிருபாவைப் பற்றித் தெரியும். இதுவரை அவரு மேல எந்தக் குற்றச்சாட்டும் எழுந்ததில்லை. அடிக்கிற அளவுக்குப் போக மாட்டார். ஆனா, என்ன மனநிலையில கை ஓங்கிட்டார்னு தெரியலை” என்கின்றனர் அமைச்சர் அனிதா ராதகிருஷ்ணனின் ஆதரவாளர்கள்.

கிருபாகரன்
கிருபாகரன்

இது குறித்து மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரிடம் பேசினோம். ``வாக்குவாதம் ஏற்பட்டுச்சு. பிறகு ரெண்டு பேரும் சமாதானம் ஆகிட்டாங்களே” எனச் சமாளித்தார். ``போக்குவரத்துக் காவலரின் நியாயமான காரணத்தை ஏற்காமல் கன்னத்தில் அடித்ததும் குற்றம்தானே?” எனக் கேட்கிறார்கள் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு