Published:Updated:

“5,000 கோடியில் 300 கோடியெல்லாம் ஒரு விஷயமா?”

சவால்விடும் துரைக்கண்ணு மகன்...

பிரீமியம் ஸ்டோரி
தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, கொரோனா தொற்றால் இறந்து பத்து நாள்கள் கடந்துவிட்டன. ஆனால், அவரது குடும்பத்தை மையப்படுத்தி எழுந்திருக்கும் பண விவகாரம், அ.தி.மு.க வட்டாரத்தில் அனலைப் பரப்பிக்கொண்டிருக்கிறது. `துரைக்கண்ணு ஆதரவாளர்கள் கைது’, `ரூ.300 கோடிப் பணம் கேட்டு குடும்பத்துக்கு நெருக்கடி’... என்றெல்லாம் தினம் தினம் வெளியாகும் தகவல்கள் அதிரவைக்கின்றன. இந்த மொத்தச் சர்ச்சைகளின் நாயகனாக துரைக்கண்ணுவின் இளைய மகன் அய்யப்பனை கைகாட்டுகிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள். உண்மையில் உள்ளே என்னதான் நடக்கிறது? அய்யப்பனிடம் பேசினோம்.

``உங்கள் குடும்பத்தை மையப்படுத்தி வரும் தகவல்கள் உண்மையா, என்னதான் நடக்கிறது?”

``நானும் அதைத்தான் கேட்கிறேன். எங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. என் அப்பா 45 வருடங்களாக கட்சிக்காக ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருந்தவர். அவர் தனது குடும்பத்தைப் பெரிதாக கவனிக்கவில்லை. அவரது மரணம் எங்களுக்குப் பேரிழப்புதான். நான் 2016 வரை அரசியல் பக்கமே வரவில்லை. 2010 முதல் 2016 வரை துபாயில் வேலை பார்த்தேன். அங்கு பிசினஸும் செய்தேன். என் அக்கா வீட்டுக்காரர் கனகதாரன் மீது சில சர்ச்சைகள் உருவாகின. இதையடுத்தே 2016-ல் அப்பாவுக்கு உதவியாக நான் இங்கு வந்துவிட்டேன். வேறு என்ன கேட்க வருகிறீர்கள் என்று தெரியவில்லை.”

“5,000 கோடியில் 300 கோடியெல்லாம் ஒரு விஷயமா?”

“உங்கள் அப்பா மருத்துவமனையில் இருந்தபோது, நீங்கள் மேற்கொண்ட சில பயணங்கள் சந்தேகங்களைக் கிளப்பியிருக்கின்றன. அதேபோல அவர் மருத்துவமனையில் சீரியஸாக இருந்தபோது, பண விவகாரத்தை முன்வைத்து மரண அறிவிப்பை தாமதப்படுத்தினார்கள் என்றெல்லாம் தகவல்கள் வந்தனவே..?”

``அப்பாவுக்கு எக்மோ போட்ட அன்று, அவர் குணமாக வேண்டும் என்பதற்காக ஊருக்கு வந்து ஒரு யாகத்தில் கலந்து கொண்டேன். பின்னர், திண்டுக்கல்லில் ஒரு கோயிலுக்குச் சென்றுவிட்டு அங்கேயே தங்கிவிட்டேன். காலையில் உடுமலைப் பேட்டையிலுள்ள ஒரு கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு கேரளாவுக்குச் சென்றேன். எர்ணாகுளத்தில் உடல்நலப் பிரச்னைகளைத் தீர்க்கும் தன்வந்திரி கோயிலுக்குச் சென்றேன். அங்கிருந்தபோது, `அப்பா ரொம்ப சீரியஸ்’ என்று தகவல் வந்ததால், உடனடியாகக் கிளம்பி சென்னைக்கு வந்துவிட்டேன்.

மருத்துவமனையில், `மூளைச்சாவு அடைந்ததற்கான வாய்ப்பிருக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டதால், `அதற்கான டெஸ்ட் எடுத்துவிடுங்கள். டெஸ்ட்டில் அது உறுதியானால் அறிவித்துவிடலாம்’ என்றேன். ஆனால், மூளைப் பரிசோதனை செய்துவிட்டு, கண்ணைத் திறந்து பார்த்ததில் அசைவு இருந்ததாகத் தெரிவித்தனர். எனவே, சிகிச்சை தொடர்ந்தது. 31-ம் தேதி அன்று பல்ஸ் குறைந்துகொண்டே போனது. அன்றிரவு 10:15 மணிக்கு அப்பா இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதுதான் நடந்தது. இப்படிப்பட்ட சூழலில் நீங்கள் சொல்லும்படியெல்லாம் யாரும் எங்களிடம் பேசவில்லை. எந்தவோர் அசாதாரண விஷயமும் நடக்கவில்லை. மறுநாள் காலை 7 மணிக்கு சி.எம் வந்தார். ஆம்புலன்ஸில் வைத்துப் பார்த்துவிட்டு அஞ்சலி செலுத்தினார்.”

“5,000 கோடியில் 300 கோடியெல்லாம் ஒரு விஷயமா?”

``பிறகு எதற்காக திடீரென்று உள்ளூர் அ.தி.மு.க வாட்ஸ்அப் குரூப்களிலிருந்து நீங்கள் வெளியேறினீர்கள்?”

``அது என் மனைவி செய்த காரியம். அவர் என்மீது கோபத்தில் இருந்ததால், வாட்ஸ்அப்பை அன்இன்ஸ்டால் செய்துவிட்டார். அந்த போனும் உடைந்துவிட்டது. அப்பாவை அடக்கம் செய்த மறுநாள் கட்சிக்காரர்களெல்லாம், `ஒதுங்கியிருக்க வேண்டாம். கட்சி வேலைகளைப் பாருங்கள்’ என்றனர். அதேநேரம், அப்பாவுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வாகனம், உதவியாளர்கள் உட்பட அனைவரையும் போகச் சொல்லிவிட்டோம். அப்பாவின் அரசு வாகனத்தைக்கூட நான் எந்தக் காலத்திலும் பயன்படுத்தியதில்லை.”

``எந்தப் பிரச்னையும் இல்லையென்றால், துரைக்கண்ணுவின் ஆதரவாளர்களான கள்ளப்புலியூர் ஊராட்சித் தலைவர் பெரியவன் முருகன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டது ஏன்?”

``பெரியவனையும் என் அப்பாவையும் இணைத்து வரக்கூடிய தகவல்கள் பொய்யானவை. அவர் எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் தரப்பினர் என்னிடம் நட்பு முறையில் பழக முயன்றார்கள். முதலில், மணல் குவாரி எடுத்து நடத்த என்னை அழைத்தனர். என் அப்பாவோ, `மண், சாராயத்துல வர்ற காசு ஒட்டாது’ என்று கூறியதால், அந்த இரண்டு தொழில்களிலும் நான் ஈடுபாடு காட்டியதில்லை. ஒருமுறை பெரியவனின் உறவுக்காரர் ஒருவரின் திருமணத்துக்குப் போய்விட்டு வந்தேன். இதற்கு மேல் எந்தச் சம்பந்தமும் இல்லை.”

“5,000 கோடியில் 300 கோடியெல்லாம் ஒரு விஷயமா?”

``ஆனால், பெரியவனை உங்கள் அப்பாவின் பினாமி என்கிறார்களே..?”

``அதுதான் எனக்கும் தெரியவில்லை. ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். நாங்கள் வாங்கச் சொன்னதாக எந்தச் சொத்தையாவது பெரியவன் அடையாளம் காட்டினால், அதை இப்போதே எழுதிக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். நான் கைதாகவும் தயாராக இருக்கிறேன். இந்த விவகாரத்தில் போலீஸில் நானே நேரடியாகச் சென்று சரண்டர் ஆகிறேன்.”

``நேரடியாகவே கேட்கிறேன்... தேர்தலையொட்டி 300 கோடி ரூபாயை உங்கள் அப்பாவிடம் கட்சித் தலைமை கொடுத்துவைத்திருந்தது. அந்தப் பணம் தொடர்பான தேடுதல் வேட்டையில்தான் கைது சம்பவங்கள் நடப்பதாகச் சொல்கிறார்களே..?”

``அதெல்லாம் இல்லை. கைதானவர்கள் எங்களுக்கு நெருக்கமானவர்களா, இல்லையா என்பதை நாங்கள்தானே சொல்ல வேண்டும்... அமைச்சர் இருந்திருந்தால் இதற்கு பதிலைக் கொடுத்திருப்பார். அவர் இல்லாததால் நான்தான் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். எங்களுக்கு இவர்களெல்லாம் நெருக்கமானவர்கள் என்று எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.”

“5,000 கோடியில் 300 கோடியெல்லாம் ஒரு விஷயமா?”

``பிறகு ஏன் மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம் தஞ்சையில் முகாமிட்டிருக்கிறார்... இது மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தாதா?”

``கைது சம்பவங்கள் இயல்பாக நடந்தவைதான். தஞ்சை மாவட்டத்துக்கு புது எஸ்.பி-யாக தேஷ்முக் சேகர் சஞ்சய் பதவியேற்றதும், பழைய ஃபைல்களை எடுக்க ஆரம்பித்துவிட்டார். ஐ.ஜி தனது டூட்டியைச் செய்கிறார். ரெளடிகள் களையெடுக்கப்படுகிறார்கள்.”

``தமிழகம் முழுவதுமே ரெளடிகள் இருக்கிறார்கள். உங்கள் பகுதியில் மட்டும்தான் களையெடுக்க வேண்டுமா என்ன?”

``கைது செய்யப்பட்டவர்கள் வெவ்வேறு சமூகங் களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் யாரையும் அப்பா வுக்குத் தெரியாது. ஒரே ஒரு கல்யாணத்தில் கலந்து கொண்டு, இவர்கள் அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். அதேநேரம், எங்கள் பெயரைப் பயன்படுத்தி அவர்கள் ஏதாவது செய்திருக்கலாம். எங்களைச் சுற்றியுள்ள சிலரும், அமைச்சரின் உதவியாளர்கள் என்றுதான் சொல்லிக்கொண்டார்கள். அமைச்சர்கள் வட்டாரத்தில் அது எல்லா இடங்களிலும் நடப்பதுதான். எங்களுக்கு 5,000 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகச் செய்தி வெளியிடுகிறார்கள். பிறகு ஏன் 300 கோடி ரூபாயை கூடுதலாகத் தலைமை கொடுக்க வேண்டும்? இப்போது 800 கோடி என்கிறார்கள். கட்சித் தலைமையிலிருந்து பணத்தைக் கொடுத்திருந்தால் என்னை அழைத்துக் கேட்டிருக்கலாமே... நான்தான் மூன்றாண்டுக் காலம் அப்பாவின் ஆபீஸ் வேலைகளை யெல்லாம் பார்த்தேன். சொல்லப் போனால், எங்கள் கட்சியின் தற்போதைய நிலவரப்படி யாருக்கும் பணம் கொடுத்து வாக்கு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. எங்களுக்கு நல்ல தலைமை இருக்கிறது. தொண்டர்கள் சரியாக இருக்கிறார்கள். நல்ல சி.எம் கிடைத்திருக்கிறார். அவர் எல்லோருக்கும் ஏற்றபடி நடந்துகொள்கிறார். தேர்தல் தேதியே அறிவிக்கப்பட வில்லை. அப்படியிருக்கும் போது, இப்படியெல்லாம் தகவல்கள் பரவுவது வேதனை அளிக்கிறது.’’

“அப்படியென்றால் யார் இப்படி யெல்லாம் தகவல்கள் பரப்பு கிறார்கள்?”

``எங்கள் அருகில் இருப்பவர்கள்தான் பரப்பியிருக்கி றார்கள். அவர்கள் எதற்காக இப்படிச் செய்தார்கள் என்று எனக்கும் தெரிய வில்லை. அரசியலில் நான் வளர்ந்து விடக் கூடாது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.”

``உங்கள் அப்பாவின் படத்திறப்பு விழாவுக்கு முதல்வர் தேதி கொடுக்கவில்லை என்கிறார்களே..?”

``இது தொடர்பாக, துணை ஒருங் கிணைப்பாளர் வைத்திலிங்கத்தைப் பார்த்துப் பேசினோம். அவரும் `அண்ணனைப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.”

``கடைசியாக ஒரு கேள்வி. உங்களால்தான் தஞ்சாவூர் மாவட்டத்தில் துரைக்கண்ணுவின் பெயர் கெட்டதாகச் சொல்கிறார்களே?”

``அது சரிதான்... ஆனால், எந்த வகையில் பெயர் கெட்டது என்று சொல்லட்டும். ஒன்று, நான் பெரிய ஒப்பந்ததாரராக இருக்க வேண்டும் அல்லது அரசாங்க விஷயங்களில் தலையிட்டிருக்க வேண்டும். என் வங்கிக் கணக்குகூட இன்று வரை பூஜ்ஜியம்தான். பணத்தின் மீதே எனக்கு நாட்டமில்லை.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு