Published:Updated:

`எம்.ஜி.ஆர்., கோபால்சாமி போன்ற துரோகிகளையே பார்த்துவிட்டோம்!’ - துரைமுருகன்

``எத்தனை காலத்துக்குத் துரோகிகளையே பார்த்துக்கொண்டிருப்பது. அண்ணா காலத்தில் சம்பத்தைப் பார்த்தோம். அதன் பிறகு எம்.ஜி.ஆரைப் பார்த்தோம். அப்புறம் கோபால்சாமியைப் பார்த்தோம். இனிமேல் அப்படி பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்’’ என்று திமுக-வினரை எச்சரித்திருக்கிறார் துரைமுருகன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், தி.மு.க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசிய துரைமுருகன், ``பொதுவாக கல்யாணப் பத்திரிகையில் ஒண்ணு போடுவார்கள். `இந்த தேதியில் என்னுடைய மகளுக்கும், இன்னாருடைய மகனுக்கும் இங்கு திருமணம் நடக்கவிருக்கிறது. வந்து வாழ்த்துகளைத் தெரிவிக்க வேண்டும். இங்ஙனம் கோவிந்தசாமி’னு செலவு பண்ணிப்போடுவான். அதுக்குப் பொண்ணு வீட்டுக்காரன், `யானும் அவ்வண்ணமே கோரும்... இப்படிக்கு சின்னசாமி’னு போட்டுக்கொள்வான். நானும் அவ்வண்ணமே... இங்கு வந்திருப்பவர்களை வரவேற்கின்றேன்.

துரைமுருகன் - ஸ்டாலின்
துரைமுருகன் - ஸ்டாலின்
`உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது?’ - எடப்பாடி பழனிசாமி கேள்வியும், திமுக-வின் பதிலும்!

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்றால் எங்கள் செயலுக்கு ஆதரவு அளிக்கிறீர்கள் என்று பொருள். தப்பித் தவறி அ.தி.மு.க ஜெயித்துவிட்டால், `100 நாளில் திமுக-வின் சாயம் போய்விட்டது. தி.மு.க ஆட்சி அவ்வளவுதான்’ என்று அவர்கள் புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள். இந்தத் தேர்தலில் அ.தி.மு.க தோற்றுவிட்டால் அடுத்து வரவிருக்கும் சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகிய தேர்தல்களில் நிற்கக்கூட அவர்களுக்குத் தைரியம் வராது. ஒரு பதவியை 20 பேர் கேட்கிறான். அதுல ஒருத்தனுக்குத்தான் கொடுக்க முடியும். மற்றவர்களுக்கு கொஞ்சம் வருத்தம் இருக்கும். பொதுச்செயலாளர், சட்டமன்றத் தலைவர் என்ற முறையில் அவர்களுக்கெல்லாம் நான் ஓர் உறுதியைத் தருகிறேன்.

இந்தத் தேர்தல் முடிந்தவுடன் முதல் வேலை எல்லா சொசைட்டிகளையும் கலைத்துவிடுவோம். அதற்கான கையெழுத்தும் போடப்பட்டுவிட்டது. தேர்தல் காலத்தில் அறிவிக்கக் கூடாது என்று சட்டம் சொல்கிறது. எனவே, தேர்தல் ரிசல்ட் வந்த மூன்றாவது நாள் சொசைட்டிகள் கலைக்கப்படும். சர்க்கரை மில், பால்வளம் உட்பட எல்லாற்றையும் கலைப்பேன். `சொசைட்டிக்கான தேர்தலை உடனே வைக்காதீங்க. ரெண்டு வருஷம் கழிச்சுப் பார்த்துக்கலாம். நம்ம ஆட்கள் அங்க போய் உட்காரணும். கண்டவனெல்லாம் சொசைட்டித் தலைவர் என்கிறான். ரெண்டு மூணு வருஷத்துக்காவது நம்ம ஆட்கள் சொசைட்டி தலைவர்களாக இருக்கணும். அப்போதுதான் அவனுக்கு ஆத்திரம் அடங்கும்’னு தலைவரிடம் சொல்லியிருக்கிறேன்.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

எனவே, உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கெல்லாம் சீட் விட்டுப்போனதோ அவர்களுக்கெல்லாம் உரிய பதவிகள் தரப்படும். யாரும் அவசரப்படாதீங்க. கட்சிக்கு எதிராகச் செயல்படுபவர்களை நானே கட்டம்கட்டிவிடுவேன். சீட் கிடைக்காத ஆத்திரத்தில் எங்களை அடித்தால்கூட வாங்கிக்கொள்வோம். உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால், கட்சிக்கு துரோகம் செய்கிறவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், இந்த துரைமுருகன் நினைத்தால் 24 மணி நேரத்தில் கட்டம்கட்டிவிடுவான். எத்தனை காலத்துக்கு துரோகிகளையே பார்த்துக்கொண்டிருப்பது... அண்ணா காலத்தில் சம்பத்தைப் பார்த்தோம். அதன் பிறகு எம்.ஜி.ஆரைப் பார்த்தோம். அப்புறம் கோபால்சாமியைப் பார்த்தோம். இனிமேல் அப்படி பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். கட்டுப்பாடுடன் இருங்கள். நமக்குத் தெரியாத தேர்தல் வித்தைகளில்லை. எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், நகரச் செயலாளர் மூலமாகப் பட்டியல் பெறப்பட்ட பிறகு தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு சொசைட்டிகளிலும், வாரியங்களிலும் உரிய பதவிகள் வழங்கப்படும்’’ என்றார் துரைமுருகன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு