Published:Updated:

`` நகைக்கடன் மோசடியில் தொடர்புடையவர்கள்மீது கிரிமினல் நடவடிக்கை" - அமைச்சர் ஐ.பெரியசாமி

``முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமைகளை திமுக அரசு விட்டுக்கொடுக்காது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விரைவில் அணையைப் பார்வையிடவிருக்கிறார்." - கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி.

நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கும் நிலையில், திண்டுக்கல்லில் கூட்டுறவுத்துறையின் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவருகிறார். குறிப்பாக, கொரோனா காலத்தில் நகையை அடகுவைத்து திருப்ப முடியுமா என ஏங்கிக்கொண்டிருந்த மக்களுக்காக ஐந்து பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். முதல்வர் பொறுப்பேற்றபோது கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. நோய்த் தொற்று பரவலிலிருந்து மக்களைக் காப்பாற்றவேண்டிய கட்டாயம் இருந்தது. பிற மாநிலங்களை தமிழகத்துடன் ஒப்பிடும்போது நிதிநிலை மோசமாக இருந்தது. ரூ,5 லட்சம் கோடி வரை கடன் இருந்தது. இருப்பினும், திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சட்டமன்றக் கூட்டத்தொடரில் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு இருக்குமா என எல்லோரும் எதிர்பார்த்தனர். அப்போது `தகுதி அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்’ என முதல்வர் அறிவித்தார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் 110 விதிகளின் கீழ் அறிவிப்புகள் மட்டுமே வெளிவந்தன. ஆனால் அரசுக்குப் பெரும் கடன் சுமை இருந்தாலும், அறிவித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுவருகின்றன.

நாமக்கல்: கூட்டுறவு வங்கியில் போலி நகைக்குக் கடன்! -  முறைகேட்டில் ஈடுபட்ட 3 பேர் சஸ்பெண்ட்

நகைக்கடன் தள்ளுபடி செய்வது தொடர்பான அரசாணை வெளியிடுவதற்காக முதல்வர் என்னை அழைத்து பலக் கூட்டங்களை நடத்தினார். தற்போது அரசாணையும் வெளியிடப்பட்டிருக்கிறது. இது ஏழை எளிய மக்களின் வயிற்றியில் பால் வார்க்கும் செய்தி. இதன் மூலம் 16 லட்சம் பேருக்கு ரூ.6,000 கோடிக் கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்தியாவில் பொதுநகைக்கடன் தள்ளுபடி என்பது முதன்முறையாக தமிழகத்தில்தான் நடந்திருக்கிறது. மேலும் தேர்தல் வாக்குறுதியான ரூ.2,761 கோடி சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் சுமார் 15 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன.

கொரோனா நிவாரண நிதி கூட்டுறவுத்துறை மூலமாக நிவாரணப் பொருள்களுடன் ரூ.4,000 வழங்கும் பணி நூறு சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளன.

அதிமுக ஆட்சியில் இருக்கும்போது சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி வழங்கியது. ஆட்சிக்கு வரப்போவது இல்லை எனத் தெரிந்ததும் அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தனர்.

கொடைக்கானலில் கூட்டுறவுத்துறை கல்லூரி உருவாக்க முதல்வர் அனுமதி வழங்கியிருக்கிறார். இங்கு கூட்டுறவுத்துறை குறித்து முழுமையாகக் கற்கலாம், பயிற்சி பெறலாம், ஆராய்ச்சி மேற்கொள்ளலாம்.

கொடைக்கானல் மேல்மலையில் விளையும் பூண்டுக்கு நிச்சயம் கூட்டுறவு அங்காடிகளின் மூலமாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

அணை
அணை

தமிழக மக்களுக்கு முதல்வர் வழங்கியிருக்கிற தீபாவளிப் பரிசு கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி. ஆயிரம் ஆடிட்டர்கள் மூலம் நேர்மையாக அனைவருக்கும் நகை திரும்பப் பெறப்படும். கூட்டுறவுத்துறையில் தரிசு நிலத்துக்குக் கடன் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட அளவை மீறி விதிமீறலில் போலி நகைகளைவைத்து கடன் பெற்றிருக்கின்றனர். நகையே வைக்காமலும் கடன் பெற்றிருக்கின்றனர். இதுவரை மொத்தம் ரூ.15 கோடி வரை மோசடி நடந்திருக்கிறது. இதில் தொடர்புடையவர்கள்மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். 30 சதவிகிதம் மட்டுமே ஆய்வுகள் முடிந்துள்ளன. இந்த மாதம் இறுதியில் ஆய்வுகள் முழுவதுமாக முடிக்கப்படும். கூட்டுறவில் புதிய நிர்வாகிகள் வர மக்கள் விரும்புகின்றனர். அது குறித்தும் விரைவில் முடிவெடுக்கப்படும்.

கூட்டுறவுத்துறை மூலம் ஒரே நாளில் ரூ.183 கோடி வரை கடன் கொடுக்கப்படுகிறது. தொடர்ச்சியாக கடன் கொடுப்போம். பயிர்க்கடன் வழங்குவதில் தடையிருக்காது. வட்டியில்லா கடன் குறித்து ஜனவரியில் பேசுவேன். கடன் கேட்டு வருவோரிடம் இல்லையென்று சொன்னால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடி வரை நிலைநிறுத்துவதற்கு திமுக தலைவர் கலைஞர் தொடர்ந்த வழக்குதான் காரணம். முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வளத்துறை அமைச்சர் விரைவில் செல்லவிருக்கிறார். முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நிச்சயம் நிலைநிறுத்தப்படும், 152 அடி நமது குறிக்கோள். முல்லைப்பெரியாறு அணை மீதான உரிமையை திமுக விட்டுக்கொடுக்காது. செப்டம்பர் மாதம் தேக்காமல், அக்டோபரில் இவ்வளவு தேக்கலாம் என விதி இருக்கிறது. நீர்வரத்து 6,000 கனஅடி இருந்தால் தமிழகத்துக்கு 2,500 முதல் 3,000 கனஅடி மட்டுமே வெளியேற்ற முடியும். மீதமுள்ள 3,000 கனஅடி நீர் தேங்கி 142 அடி உயர வாய்ப்புள்ளது. திடீரென மழைபெய்துவிட்டால் செம்பரம்பாக்கம் ஏரியில் நடந்ததுபோல நடக்க வாய்ப்பிருக்கிறது. அந்த மாதிரி நிகழ்வுகள் நடந்துவிடக் கூடாது என்பதை கவனத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு