Published:Updated:

`தமிழகத்தில் தி.மு.க இனி தேறவே முடியாத கட்சி!’ - அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

`பா.ஜ.க-வில் ஆளாளுக்குக் கருத்து சொல்லிக்கொண்டிருப்பார்கள்; அதற்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. கூட்டணியை மதிக்கும் கட்சி அ.தி.மு.க’ என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன. கூட்டணி குறித்தும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பேசி வருகிறார்கள். அந்தவகையில், அ.தி.மு.க கூட்டணியிலிருக்கும் பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. செய்தியாளர்களிடம் கூட்டணி குறித்துப் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், `வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., தி.மு.க-வுடன்கூட கூட்டணிவைக்க வாய்ப்பிருக்கிறது’ என்று பேசியிருந்தார். அதேபோல், `தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான் யாரெல்லாம் கூட்டணியில் இருக்கிறார்கள் என்பது தெரியும்’ என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியது அரசியல் களத்தில் உற்றுநோக்கப்பட்டது.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ``அவர் பேசியது பா.ஜ.க-வின் கருத்தா என்பது குறித்து அந்தக் கட்சியின் மாநிலத் தலைவரோ அல்லது மாநிலப் பொறுப்பாளராக அந்தக் கட்சியின் தேசியத் தலைமை நியமித்திருக்கும் நிர்வாகியோ கருத்து தெரிவித்திருந்தால், அது பற்றி எங்கள் (அ.தி.மு.க) கருத்தைச் சொல்ல முடியும். பா.ஜ.க-வில் ஆளாளுக்குக் கருத்து சொல்கிறார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்லத் தயாராக இல்லை. அதேபோல், கூட்டணியை மதிப்பவர்கள் நாங்கள்.

`தேர்தல் நேரத்தில் கூட்டணி உடையலாம்!’ - துரைமுருகன் சூசகம்

தி.மு.க-வைப் பொறுத்தவரை அவர்கள் கூட்டணியை எந்த அளவுக்கு மதிப்பவர்கள் என்று தெரியும். சமீபத்தில் தி.மு.க-வின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற அண்ணன் துரைமுருகன் அவர்கள், கூட்டணி பற்றி, `எவன் இருப்பான், எவன் போவான் என்பதெல்லாம் தேர்தல் நேரத்தில்தான் தெரியவரும்' என்று சொன்னார் அல்லவா... அந்தவகையில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்'' என்றார்.

துரைமுருகன்
துரைமுருகன்

அப்போது, ` `எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் கைகோத்திருப்பது தமிழகத்தைக் கொள்ளையடிப்பதற்காகத்தான்’ என தி.மு.க தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறாரே...’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்கு, ``தமிழ்நாட்டைச் சூறையாடி, கொள்ளையடித்து அதலபாதாளத்துக்குத் தள்ளிய கட்சி தி.மு.கதான். தமிழகத்தை இத்தனை ஆண்டுகள் தி.மு.க ஆட்சி செய்த நிலையில், ஆசியாவின் பணக்காரக் குடும்பமாக அவர்கள் உருவெடுத்ததுதான் அந்தக் கட்சியின் மிகப்பெரிய சாதனை.

முள்ளிவாய்க்கால் படுகொலை, மீத்தேன், கெயில் எரிவாயுத் திட்டம் போன்ற திட்டங்களால் விவசாயிகளுக்கு துரோகம் செய்த கட்சி தி.மு.க. தமிழகத்தில் 17 ஆண்டுகள் ஆட்சி செய்து எதுவுமே செய்யாத தி.மு.க இதைச் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். தமிழகத்தில் தி.மு.க இனி தேறவே முடியாத கட்சி'' என்று அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

தமிழகத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடர வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு, ``பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். அது அந்தக் கட்சியின் அதிகாரபூர்வ கருத்தா என்பதைச் சொல்லட்டும். தேர்தல் நேரத்தில்தான் அது பற்றிக் கொள்கைரீதியாக முடிவெடுக்க முடியும். இப்போதை அது குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

வழிகாட்டுதல்குழுவில் பெண்கள் இடம்பெறாதது குறித்த கேள்விக்கு, ``அகில இந்திய அளவில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுத்து சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் நிறுத்தியது அ.தி.மு.கதான். இன்னும் நிறைய குழுக்கள் இருக்கின்றன. அந்தக் குழுக்களில் பெண்கள் இடம்பெறுவார்கள். கடந்த தேர்தலில் பெண்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களை வெற்றிபெறச் செய்து அழகுபார்த்தவர் ஜெயலலிதா. அதேபோல், பெண்களை மாவட்டச் செயலாளர்களாகவும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் அமர்த்தி அழகுபார்த்தவர் அவர்தான்; அ.தி.மு.கதான். அதைத் தெரிந்துகொள்ளுங்கள்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு