Published:Updated:

`எப்ப சார் தியேட்டர் திறக்கப் போறீங்க?'- கோடம்பாக்கத்தின் கோபக் கேள்வியும் அமைச்சரின் பதிலும்!

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

மத்திய அரசு, வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து சினிமா ஷூட்டிங்குக்கு அனுமதி அளித்திருக்கிறது. தமிழ்த் திரையுலகம் என்ன சொல்கிறது?

கொரோனா ஊரடங்கால் முடங்கிக்கிடக்கும் இந்திய சினிமாவை, 'க்ளாப்' அடித்து மீண்டும் தொடங்கிவைத்திருக்கிறது மத்திய அரசு! ஆனால், `தியேட்டர்கள் இன்னும் மூடிக்கிடக்கும் சூழலில், சினிமா ஷூட்டிங்கை மட்டும் தொடங்கி என்ன செய்வது...’ என்ற பொருமல் கோடம்பாக்கத்திலிருந்து எழ ஆரம்பித்திருக்கிறது.

கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக இருளடைந்துகிடக்கும் வெள்ளித்திரையுலகில், `கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடித்து ஷூட்டிங் தொடங்குங்கள்’ என வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துக்கொடுத்து நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சியிருக்கிறது மத்திய அரசு.

டி.சிவா
டி.சிவா

இது குறித்துப் பேசும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் டி.சிவா,``இது நம் எல்லோருடைய உயிர்ப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். எனவே, மத்திய அரசின் வழிகாட்டுதலை எல்லோருமே கடைப்பிடித்துத்தான் ஆக வேண்டும். மாநில அரசிடமும் இது குறித்து நாங்கள் ஆலோசித்துவருகிறோம். ஏனெனில், நிறைய படங்கள் அரைகுறையாக ஷூட்டிங் முடிக்கப்பட்டு, தவித்துக்கிடக்கின்றன. எனவே, தமிழ்நாட்டிலும் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார்கள். நாங்களும் ஷூட்டிங்கை ஆரம்பிப்போம்'' என்கிறார் நம்பிக்கையோடு.

அதேசமயம், படப்பிடிப்புக்கு மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியை வரவேற்றுப் பேசும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன், `திரையரங்குகளை எப்போது திறக்கப்போகிறீர்கள்...’ என்ற கேள்வியையும் முன்வைக்கிறார். இது குறித்துப் பேசுபவர், ``தியேட்டர்கள் அனைத்துமே மூடிக்கிடக்கும் இந்தச் சூழ்நிலையில், 200-க்கும் மேற்பட்ட சிறு பட்ஜெட் படங்கள் வெளியிடப்படாமல் முடங்கிக்கிடக்கின்றன. வீடு, நகை உள்ளிட்ட சொத்துகளை விற்றுப் படம் எடுத்த தயாரிப்பாளர்கள், செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார்கள்.

எனவே, `சிறுவணிகப் படங்களை மட்டுமே தியேட்டர்களில் வெளியிடலாம்' என்ற நிபந்தனையோடு தியேட்டர்களைத் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். ஏனெனில், இப்போதைய சூழலில், பெரிய நடிகர்களின் படங்களை தியேட்டர்களில் திரையிட்டால் மக்கள் பெருங்கூட்டமாகக் கூடுவார்கள். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதில் சிரமம் ஏற்படும். மாறாக, சிறு முதலீட்டுப் படங்களை மட்டும் வெளியிட்டால், தியேட்டருக்கு 50, 100 என்று குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் கூட்டமே வரும்.

கே.ராஜன்
கே.ராஜன்

இதனால், திரையரங்கினுள் நல்ல இடைவெளியுடன் அமர்ந்து படம் பார்க்கும் பாதுகாப்பான சூழல் உருவாகும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, தமிழ்த் திரைத்துறையிலுள்ள சிறு தயாரிப்பாளர்களும் பிழைத்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். எனவே, `தமிழக அரசு இது குறித்து உடனடியாக முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்' என ஏற்கெனவே நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம்’’ என்றார் தெளிவாக.

“வீடு என்பது அவரவர் ரசனையைப் பொறுத்தது!” - நடிகர் நாசர்

இந்த நிலையில், நடிகர் நாசர் இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, ``மத்திய அரசு வகுத்துள்ள வழிமுறைகளின்படி, தற்போது குறைந்த எண்ணிக்கையினரைக்கொண்ட காட்சிகளைத்தான் படமாக்க முடியும். திருவிழா போன்ற பிரமாண்ட காட்சிகளையெல்லாம் படமாக்க முடியாது. போகப் போக இந்த நடைமுறைகளில் தளர்வு வரும்போதுதான் திரைத்துறையினர் முழுமையாக தாங்கள் நினைத்த காட்சிகளையெல்லாம் படமாக்க முடியும்!

இது திரைப்படம் உருவாக்குதல் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் பிரச்னைகள். அடுத்து, உருவான திரைப்படங்களை வெளியிட்டு விற்பனை செய்வதென்பது வேறொரு தளத்திலுள்ள தொழிலாளர்களின் பிரச்னையாக இருக்கிறது. ஆனாலும்கூட இந்தத் துறைகள் அனைத்துமே ஒன்றையொன்று சார்ந்தேதான் இயங்கவேண்டியிருக்கிறது.

நாசர்
நாசர்

அதாவது, தியேட்டர்கள் மூடிக்கிடக்கும் இந்தச் சூழலில், ஏற்கெனவே திரையிடத் தயாராக இருக்கும் திரைப்படங்களை ஓ.டி.டி எனப்படும் இணையதளத்தின் வழியே வெளியிடலாமா, கூடாதா என்பதிலேயே திரைத்துறையினரிடையே தெளிவான புரிந்துணர்வு இல்லை. இந்த ஊரடங்கு காலகட்டத்தில், ஏற்கெனவே ஓ.டி.டி-யில் சில தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. தற்போது, சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' படமும் ஓ.டி.டி-யில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், `பெரிய நடிகர்களின் படங்களை ஓ.டி.டி தளத்தில் வெளியிடக் கூடாது; திரையரங்குகளில்தான் வெளியிட வேண்டும்' என்று ஒரு தரப்பினர் சொல்லிவருகிறார்கள்.

தமிழ்த் திரையுலகின் இந்தப் பிரச்னைகள் குறித்த தெளிவு, திரைப்படத்துறையைச் சார்ந்தவர்களுக்குத்தான் முழுமையாகத் தெரியும். எனவே, திரைத்துறையைச் சார்ந்தவர்கள் உட்கார்ந்து பேசித்தான் இது போன்ற பிரச்னைகளில் நல்லதொரு தீர்வை எட்ட முடியும். மற்றபடி அரசிடம் இந்தப் பிரச்னையைக் கொண்டு சென்றால், அவர்கள் இதற்கென தனி அதிகாரிகளைத்தான் நியமிப்பார்கள். ஏனெனில், அவர்களுக்கு ஏற்கெனவே பல துறைகள் சார்ந்த பிரச்னைகள் இருக்கின்றபோது, திரைத்துறையிலுள்ள சிக்கல்கள் என்பது கூடுதலான இன்னொரு பிரச்னை அவ்வளவுதான்’’ என்கிறார்.

ஷூட்டிங் அனுபவம் குறித்து சின்னத்திரை நடிகை ஃபரினாவிடம் கேட்டோம். ``ஷூட்டிங் ஸ்பாட்டிலும்கூட நடிக்கும்போது மட்டும்தான் முகக்கவசமின்றி இருக்கிறோம். மற்றபடி கேமராவைவிட்டு விலகிய உடனேயே அவரவர் முகக்கவசத்தை அணிந்துகொள்கிறோம். அடிக்கடி கைகளைக் கழுவுகிறோம். ஆரம்பத்தில் இந்தப் பழக்கங்கள் எல்லாவற்றையுமே கடைப்பிடிப்பதில் கொஞ்சம் சிரமமிருந்தது.

ஃபரினா
ஃபரினா

ஆனால், இப்போது பழக்கத்துக்கு வந்துவிட்டதால், பெரிய அளவில் சிரமம் ஏதுமில்லை. அதேசமயம் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு எங்களைவிட கொஞ்சம் கூடுதல் சிரமம் உண்டு. நடிகர், நடிகைகள் தங்களுக்கான உதவியாளர்களை உடன் அழைத்துவரத் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதனால், எங்களுக்குக் கொஞ்சம் சிரமம். எங்கள் லக்கேஜ்களை நாங்களே தூக்கிச் சுமக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதில் ஆரம்பித்து டீ, காபி, டச் அப், ஹேர் டிரெஸ் என ஒவ்வொரு தேவைக்கும் நாங்களே அலைந்து திரிந்துதான் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது'' என்றார்.

செப்டம்பரில் தியேட்டர்கள் திறக்கலாம்... ஆனால், விஜய்யின் `மாஸ்டர்' ரிலீஸாகுமா?!

இதையடுத்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம், `தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்... படப்பிடிப்புகளுக்கான அனுமதி எப்போது வழங்கப்படும்...’ ஆகிய கேள்விகளை முன்வைத்தோம்.

``ஷூட்டிங் தொடங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு இப்போதுதான் வழங்கியுள்ளது. எனவே, இது குறித்து தெளிவாகப் படித்து அறிந்த பிறகு, முதலமைச்சரோடு கலந்து பேசி, அடுத்த சில நாள்களுக்குள் தமிழக அரசின் நிலைப்பாட்டை அறிவிப்போம்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ
அமைச்சர் கடம்பூர் ராஜூ

தியேட்டர்களைத் திறப்பது என்பது இந்தியா முழுமைக்குமான பிரச்னை. எனவே, இது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுத்து அறிவிக்க வேண்டியிருக்கிறது. வரும் செப்டம்பர் 1-ம் தேதிக்குள் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் மத்திய அரசே கூறியிருக்கிறது. அதன் பிறகே நம் மாநில நிலைப்பாட்டையும் தெரிவிக்க முடியும்’’ என்கிறார் அமைச்சர்.

அடுத்த கட்டுரைக்கு