Election bannerElection banner
Published:Updated:

`கிராமசபைக் கூட்டத்தில் பெண் வெளியேற்றம்; கனிமொழி கண்டனம் தெரிவிக்காதது ஏன்?’ - கடம்பூர் ராஜூ கேள்வி

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

ஸ்டாலின் நடத்திய கிராமசபைக் கூட்டத்தில், அவரை எதிர்த்துக் கேள்வி கேட்ட ஒரு பெண்ணை, பெண் என்றும் பாராமல் அங்கிருந்து வெளியேற்றச் சொல்லியிருக்கிறார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ஒரு பெண்ணாக, கனிமொழி கண்டனம் தெரிவித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. ஏன்?

தூத்துக்குடி, முத்தையாபுரத்தில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்தநாளை முன்னிட்டு `மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை’ சார்பில் மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. பெரிய மாட்டுவண்டி, சிறிய மாட்டுவண்டி என இரண்டு பிரிவுகளில் நடந்த பந்தயத்தில் தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் கலந்துகொண்டன. பெரிய மாட்டுவண்டிக்கு 10 மைல் தூரமும் , சிறிய மாட்டுவண்டிக்கு 6 மைல் தூரமும் எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன.

மாட்டுவண்டிப் பந்தயம்
மாட்டுவண்டிப் பந்தயம்

பந்தயத்தை, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ``திரையரங்குகளுக்கு 100 சதவிகித இருக்கை அனுமதியை தமிழக அரசு உடனே வழங்கிவிடவில்லை. கொரோனா ஊரடங்கு நிலவிவந்த நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் திரையரங்கு, வணிக வளாகம், பூங்கா உட்பட அனைத்துக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, 50 சதவிகித இருக்கையுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்றுதான் முதலில் அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவலும் தமிழகத்தில் படிப்படியாகக் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள நிலையில் திரைத்துறையினர், நடிகர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பண்டிகை காலத்தையொட்டி திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கைவைத்தனர்.

மாட்டுவண்டிப் பந்தயம்
மாட்டுவண்டிப் பந்தயம்

அதன் அடிப்படையில்தான் தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. `தமிழக அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என மத்திய அரசு கேட்டுக்கொண்டு கடிதம் எழுதியிருக்கிறது. மற்றபடி அனுமதி அளித்ததற்காக தடையோ, எச்சரிக்கையோ மத்திய அரசு விதிக்கவில்லை. இது குறித்து முதலமைச்சர், மற்ற துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவை அறிவிப்பார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைப் பொறுத்தவரையில் அது குறித்த வழக்கு விசாரணையை தமிழக அரசுதான் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

ஒரு சம்பவம் நிகழ்ந்த நேரத்திலேயே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது அ.தி.மு.க அரசுதான். வன்கொடுமைச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், அவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்கி விசாரணையில் எந்தவிதக் குறுக்கீடும் செய்யாமல் இருந்ததும் இந்த அரசுதான். எம்.பி கனிமொழி சொல்வதுபோல, அ.தி.மு.க அரசு யாருக்கும் பாரபட்சமாக நடந்தது கிடையாது.

மாட்டுவண்டிப் பந்தயம்
மாட்டுவண்டிப் பந்தயம்

தி.மு.க தலைவர் ஸ்டாலின் நடத்திய கிராமசபைக் கூட்டத்தில் அவரை எதிர்த்துக் கேள்வி கேட்ட ஒரு பெண்ணை, பெண் என்றும் பாராமல் அங்கிருந்து வெளியேற்றச் சொல்லியிருக்கிறார். குண்டர்களைவைத்து மிரட்டியிருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ஒரு பெண்ணாக கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்திருந்தால், அவர் சொல்வது நியாயமானது என வைத்துக்கொள்ளலாம். ஆனால், அவர் அது பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்ல. ஏன்? எனவே, கனிமொழி எம்.பி-யும் தி.மு.க-வும்தான் பாரபட்சமாக நடந்துவருகின்றனர்” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு