Published:Updated:

`தர்ணா செய்யுமளவுக்கு அப்படியென்ன நடந்துவிட்டது?' - கனிமொழியைச் சாடிய அமைச்சர் கடம்பூர் ராஜு

அமைச்சர் கடம்பூர் ராஜு
News
அமைச்சர் கடம்பூர் ராஜு

``தேர்தலைச் சந்திக்கும் எல்லோரும் வெற்றி பெறுவோம் என்றுதான் சொல்வார்கள். நானும் அதைத்தான் சொன்னேன். இதில் என்ன மர்மம் உள்ளது?” என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் வெற்றி பெற்ற கஸ்தூரியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அமைச்சர் கடம்பூர் ராஜு. பின்னர், செய்தியாளர்களிடம் பேசியவர், ``கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளின்படிதான் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடந்தது. இதில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட 3-வது வார்டு உறுப்பினர் கஸ்தூரி 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து தி.மு.க சார்பில் போட்டியிட்ட பூமாரி 9 வாக்குகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பதவியேற்ற கஸ்தூரி
பதவியேற்ற கஸ்தூரி

அதன்பின்னர், மாலை 3 மணிக்கு ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் தேர்தலை நாங்கள் எதிர்கொள்வதாக இருந்தோம். தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் தேர்தலைப் புறக்கணித்து, தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தலைமையில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மறைமுகமாக நடைபெற்ற இத்தேர்தல் அரங்குக்குள் 19 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மறைமுகத் தேர்தலைப் பொறுத்தவரை, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது வெற்றி பெற்ற உறுப்பினர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. தி.மு.க மற்றும் ஆதரவு கவுன்சிலர்களைக் கடந்த 27 நாள்களாக அடைத்து வைத்து அவர்களை தி.மு.க-வினர் பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன? இதுதொடர்பாக, மதுரை உயர்நீதிமன்றத்தில், `எங்கள் ஊரைச் சேர்ந்த கவுன்சிலரைக் காணவில்லை' என ஒருவர் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். அ.தி.மு.க மற்றும் ஆதரவு அளித்த கவுன்சிலர்களை நாங்கள் சுதந்திரமாக வைத்திருந்தோம்.

பதவியேற்பு நிகழ்வு
பதவியேற்பு நிகழ்வு

நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்த காரணத்தால் யாரையும் கடத்தவில்லை. தேர்தலில் போட்டியிடும் அனைவருமே, தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றுதான் கூறுவார்கள். அதைத்தான் நானும் கூறினேன். இதில் என்ன மர்மம் உள்ளது. இதை தி.மு.க-வினர் விவாதமாக எடுத்துக்கொண்டது வேடிக்கையாக உள்ளது. மொத்தமுள்ள 19 கவுன்சிலர்களில் 4 பேர் சுயேச்சையாக வெற்றி பெற்றவர்கள். அவர்கள் எந்தக் கட்சிக்கும் கட்டுப்பட்டு வாக்களிக்க வேண்டிய அவசியமில்லை. தன்னிச்சையாகவே முடிவெடுக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில், அ.தி.மு.க தரப்பைச் சேர்ந்த 9 பேரும் எங்களுக்குதான் வாக்களித்தார்கள் என்று கூற முடியாது. மறைமுகத் தேர்தலில் 19 பேரும் தன்னிச்சையாக முடிவெடுக்கலாம். எங்கள் தரப்புக்கு 10 பேர் ஆதரவாக இருக்கின்றனர் என தி.மு.க-வினர் ஆணித்தனமாகக் கூறினால், மாலையில் நடைபெற இருந்த துணைத்தலைவர் தேர்தலை ஏன் அவர்கள் எதிர்கொள்ளவில்லை? தோல்வி பயத்தின் காரணமாகத் தேர்தலைச் சந்திக்காமல் புறக்கணித்துவிட்டனர். தேர்தலை எதிர்கொள்ளாமல் புறக்கணித்தது வருத்தமானது. கனிமொழி, நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே இரண்டு முறை உறுப்பினராகப் பணியாற்றியவர்.

பதவியேற்பு நிகழ்வு
பதவியேற்பு நிகழ்வு

தற்போது மக்களவை உறுப்பினராகவும் உள்ளார். தி.மு.க-வின் மாநில மகளிரணிச் செயலாளராகவும் உள்ளார். அவர் சாலையில் அமர்ந்து தர்ணா செய்யக்கூடிய அளவுக்கு இது ஒரு பிரச்னையே இல்லை. வெற்றி பெற்ற 19 உறுப்பினர்களும் வாக்களிப்பதை யாராவது தடுத்திருந்தாலோ, அவர்களின் வாக்குரிமையைப் பறித்து வேறு யாராவது வாக்களித்திருந்தாலோ அது ஜனநாயகப் படுகொலை எனலாம். ஜனநாயக முறைப்படி வாக்களிக்கவில்லையென்று கூறினால் அவரது விவாதத்துக்கு நான் தயார்” என்றார்.