Published:Updated:

`விஜய் தன்னையும் அறியாமல் அப்படிப் பேசியிருப்பார்!' - அமைச்சர் கடம்பூர் ராஜு

``மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு சரியாகத்தான் வைத்துள்ளர்கள். நடிகர் விஜய் போன்றவர்களை கேட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை'' என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Kadambur Raju
Kadambur Raju

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற ஹாக்கி மற்றும் ஸ்குவாஷ் போட்டிகளின் துவக்க விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு போட்டிகளைத் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நடிகர் விஜய் நடித்துள்ள`பிகில்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், `யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைக்க வேண்டும்'' என விஜய் பேசியுள்ளது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

 `லாரி டிரைவர் மேலயும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுறாங்க!' - சுபஸ்ரீ விவகாரம் குறித்து விஜய்
Kadambur Raju
Kadambur Raju

அதற்குப் பதிலளித்த அவர், ``யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு சரியாகத்தான் மக்கள் வைத்துள்ளார்கள். விஜய்யைக் கேட்டுத்தான் யாரை எங்க வைக்க வேண்டும் என்று என்பதனை தமிழக மக்கள் தீர்மானிக்க வேண்டியது இல்லை. அவர் தன்னைத்தானே அவ்வாறு நினைத்துக் கொண்டால், அது அவரது அறியாமைதான். ஒரு திரைப்பட நடிகராகத் தனது படம் ஓட வேண்டும் என்பதற்காக சில நடிகர்கள் பபரபரப்பாகப்பேசி வருகிறார்கள்.

அதேபோல, விஜய் தன்னையும் அறியாமல் அப்படிப் பேசியிருப்பார். அவருடைய படங்கள் வெளிவருவதற்குத் தமிழக அரசு எவ்வளவு உதவி செய்துள்ளது என்பது குறித்து அவருடைய மனசாட்சிக்கே தெரியும். அவர் நடித்த `மெர்சல்’ திரைப்படம் வெளியாவதில் விலங்குகள் நல வாரியத்தின் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது, நடிகர் விஜய்யை முதல்வரிடம் அழைத்துச் சென்று பேசவில்லை என்றால், அந்தப்படம் வெளிவந்து இருக்காது. தமிழகத்திலுள்ள திரையரங்குகளில் விரைவில் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை முறையை நடைமுறைப்படுத்த, துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்களை அழைத்து இரண்டு முறை பேசியுள்ளோம்.

Kadambur Raju
Kadambur Raju

அடுத்தவாரம் மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது, அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பது குறித்து அறிவுறுத்தப்படும்” என்றார்.

பேனர் சரிந்ததால் லாரியில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீ மரணம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் பேசியது குறித்தும் பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, ``தான் அரைவேக்காடு என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அரசு அலட்சியத்தினால் எப்படிக் கொலை நடக்கும்? அவர் அரசியல்வாதிகளைக் குறைசொல்லவில்லை. சட்டம், காவல்துறை, நீதிமன்றத்தைக் குறைசொல்வதாகத்தான் அர்த்தம்” என்றார்.