Published:Updated:

`சமரசமாகப் பேசி நடிகர் சங்க உறுப்பினர்களைத் தேர்வு செய்தால் மகிழ்ச்சி!'- அமைச்சர் கடம்பூர் ராஜு

அமைச்சர் கடம்பூர் ராஜு
அமைச்சர் கடம்பூர் ராஜு

`மீண்டும் தேர்தல் என்ற நிலை உருவாகாமல் சமரசமாகப் பேசி நடிகர் சங்க உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் மகிழ்ச்சியடைவோம்' எனச் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``நடிகர் சங்கத் தேர்தலில் யாரும் தலையிடுவதற்கு வாய்ப்பில்லை. மொத்தம் 3,650 பேர் உறுப்பினராக உள்ளனர். நடிகர் சங்கத்தேர்தல் தமிழகத்தில் பொதுத்தேர்தல் நடந்ததைப் போல் பரபரப்பாக இருந்தது. தேவையில்லாமல் இதுபோல் பெரிதுபடுத்தியிருக்க வேண்டாம்.

அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் கடம்பூர் ராஜு
அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் கடம்பூர் ராஜு

அவர்களாகவே அமர்ந்து பேசி நல்ல தீர்வு கண்டு, நல்ல முறையில் நடத்தியிருக்கலாம் என்பதுதான் எங்களுடைய கருத்து. அது என்னுடைய துறை என்றாலும், அதில் அரசு தலையிடாது. நீதிமன்றம் விசாரித்து, அந்தத் தேர்தல் செல்லாது என்று நேற்றுதான் தீர்ப்பு வழங்கி உள்ளது. முறையாக தகவல் தெரிவித்து, ஒரு நாள் அவகாசம் இருந்தால்கூட நான் வாக்களிக்க வந்திருப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூட வேதனைப்பட்டார்.

இப்படிப்பட்ட குறைபாடுகள் ஏதுமில்லாமல், தகுந்த கால அவகாசம் எடுத்து சாதாரணமாகத் தேர்தலை நடத்தியிருக்கலாம். தற்போது, தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் தேர்தல் என்ற நிலை உருவாகாமல் சமரசமாகப் பேசி நடிகர் சங்க உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டால் மகிழ்ச்சியடைவோம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் என்பது அரசு அல்ல. அது ஒரு தனி அமைப்பு.

விலையில்லா மிதிவண்டி வழங்கல்
விலையில்லா மிதிவண்டி வழங்கல்

இதில் தற்போது தவறு நடந்திருந்தாலும்கூட பிற்காலத்தில் தவறு ஏதும் நடக்காமல் இருக்க என்ன வழிகாட்டுதல் செய்ய முடியுமோ அதை நிச்சயம் அரசு செய்யும். பல்கலைக்கழகங்களில் இதுபோன்று முறைகேடு நடந்த நேரத்தில், அரசு தலையிட்டு தீர்வு கண்டு அந்தப் பிரச்னையை முடித்து வைத்தது. அதே நிலையைதான் டி.என்.பி.எஸ்.சியிலும் அரசு கையாளும்.

`கருத்துக்கு எதிர்க்கருத்து வழக்கம்தான்... ஆனால்..!' - எச்சரிக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜு

தினகரன் தனியாகக் கட்சி தொடங்கியுள்ளார். அவர் மட்டும்தான் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் சென்றார். அதன் பின்னர் நடந்த மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில்கூட அ.ம.மு.க வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வந்ததே அவரால்தான். 18 சட்டமன்ற உறுப்பினர்களை அரசுக்கு எதிராக ஆளுநரிடம் முறையிட்டதன் பேரில் தகுதிநீக்கம் வரும் என்று தெரிந்தும், அவர்களை பலிகடா ஆக்கிவிட்டார்.

விலையில்லா மிதிவண்டி வழங்கல்
விலையில்லா மிதிவண்டி வழங்கல்

அதில், ஒருவர் கூட இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெறவில்லை. இருப்பினும், `வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம்' என அவர் ஏதோ ஒரு நம்பிக்கையில் சொல்கிறார். நாம்தமிழர் கட்சியின் சீமானும், `வரும் தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம்' எனச் சொல்கிறார். சொல்வதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு