Published:Updated:

`தேவையில்லாத வார்த்தைகளை விட்டார்' - தி.மு.க எம்.எல்.ஏ உடனான மோதல்குறித்து அமைச்சர் வீரமணி!

``அ.தி.மு.க அரசைக் குற்றம் சொல்லவும் குறை சொல்வதற்குமே, தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார் அரசு விழாவில் கலாட்டா செய்தார்’’ என்று மோதல் குறித்து அமைச்சர் வீரமணி விளக்கமளித்துள்ளார்.

அமைச்சர் கே.சி.வீரமணி
அமைச்சர் கே.சி.வீரமணி

வேலூரில் உள்ள தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி மாவட்ட மைய நூலகத்தில், ‘தேசிய நூலக வார விழா’ இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், ‘‘இந்த விழாவின் நோக்கம் இளைஞர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்காகத் தான். உலகில் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவர் எவரும் இல்லை. 

தேசிய நூலக வார விழா
தேசிய நூலக வார விழா

பள்ளிப் பருவத்தில், பாடப் புத்தகங்களைத் தாண்டி அறிவியல் அறிவு, வரலாற்று உண்மைகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் போன்ற பல்வேறு புத்தகங்களையும் முழுமையாகப் படித்து தெரிந்துகொள்ள வேண்டும். நாள்தோறும் வெளிவரும் புதிய புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் ஆய்வுகள் குறித்த புத்தகங்களையும் தமிழக அரசு அனைத்து நூலகங்களுக்கும் வழங்கிவருகிறது. எதிர்காலத்தில் சிறந்தவர்களாக உயரப் புத்தகங்களை வாசிப்பது அவசியம்.

இளைஞர்கள் அரசுப் பணிகளுக்குத் தங்களைத் தயார் செய்து போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக நூலகம்தோறும், அரசு இலவச பயிற்சியை வழங்கிவருகிறது’ என்றார். அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வீரமணி, ‘‘அணைக்கட்டு பகுதியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார், ‘ஊர் ஊராகக் கிராம சபைக் கூட்டம் நடத்தி 1,900 மனுக்களைக் கொடுத்தோம்’ என்று சொன்னார். 

அணைக்கட்டு தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார்
அணைக்கட்டு தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார்

கட்சி தரப்பில் கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கு ஸ்டாலினுக்கு அதிகாரம் இல்லை. அவர்கள் கொடுத்த அத்தனை மனுக்களுமே தி.மு.க-வைச் சேர்ந்த குடும்பத்தினரிடம் பெறப்பட்டவைதான். முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்டத்தின் கீழ் அதிகாரிகள் கிராமம்தோறும் சென்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று தகுதியான பயனாளிகளைத் தேர்வு செய்தனர். அதன்படி 1,050 பேருக்கு உதவித்தொகை கொடுத்துள்ளனர். 

தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார் அவசரப்பட்டு தேவையில்லாத வார்த்தைகளை விட்டார். திடீரென கட்சிக்கொடி இருக்கும் கலர் சேலை அணிந்திருந்த பெண்ணை அழைத்துவந்து மாவட்ட ஆட்சியர் முன்பு நிறுத்தி, ‘இந்த பெண்ணுக்கு ஏன் உதவித்தொகை வழங்கவில்லை?’ என்று கேட்கிறார். அ.தி.மு.க அரசைக் குற்றம் சொல்ல வேண்டும் என்று ஏற்கெனவே திட்டமிட்டு அந்தப் பெண்ணை அழைத்துவந்துள்ளார். அதனால்தான் பிரச்னை ஏற்பட்டது. 

அமைச்சர் கே.சி.வீரமணி
அமைச்சர் கே.சி.வீரமணி

அதிகாரிகள் எல்லோருமே கட்சிக்கு அப்பாற்பட்டுத்தான் மனுக்களை வாங்குகிறார்கள். தி.மு.க-வினர் நடத்திய கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொள்ளவில்லை. அப்படியிருக்க, பிரச்னை செய்ய வேண்டுமென்ற முடிவோடுதான் எம்.எல்.ஏ ‘கலாட்டா’ செய்தார். நேற்றைய அரசு விழாவில், தி.மு.க எம்.எல்.ஏ-வுடன் வந்தவர்களில் ஒருவர்கூட பொதுமக்கள் இல்லை. உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க கூட்டணியின் வெற்றியே தொடரும்’’ என்றார்.