Published:Updated:

விருதுநகர்: `இஸ்லாமியர்களை ஏமாற்றி இனியும் தி.மு.க ஓட்டு வாங்க முடியாது’- ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

``இஸ்லாமியர்களை ஏமாற்றி இனியும் தி.மு.க ஓட்டு வாங்க முடியாது. சாதிக் பாட்ஷாவின் மரணத்துக்கு தி.மு.க பதில் சொல்லியே ஆக வேண்டும். `சிறுபான்மை மக்களின் பாதுகாவலன்’ என்ற ஏமாற்று வேலையை இஸ்லாமிய மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்’ என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ``தமிழக முதல்வரை அவமரியாதையாகப் பேசினால் பெரிய ஆளாகிவிடலாம் என அவரை அவமரியாதையாகப் பேசச் சொல்லி, தி.மு.க-வில் தனக்குக் கீழுள்ள தலைவர்களிடம் வாய்மொழியாக உத்தரவிட்டிருக்கிறார் ஸ்டாலின். தி.மு.க-வின் கீழ்மட்டத் தலைவர்கள் முதல்வரை அவமரியாதையாகப் பேசவில்லை. ஸ்டாலினின் வாய்மொழி உத்தரவுதான் அவ்வாறு பேசவைக்கிறது. ஆ.ராசாவும் அப்படித்தான் பேசுகிறார்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க-வினரின் அநாகரிகப் பேச்சுகளை கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். முதல்வருக்கு சவால்விட்டுப் பேசும் அளவுக்கு தி.மு.க-வில் எந்த எம்.எல்.ஏ-க்களுக்கும் தகுதி கிடையாது. ராஜபாளையத்தில் கொடும்பாவி எரிக்கும் போராட்டம் என்று, தி.மு.க-வினர் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தி.மு.க-வும் வன்முறையும் வேறு வேறு அல்ல. வன்முறையும் கலவரமும் இரட்டைக்குழல் துப்பாக்கி போன்றவை. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கலைஞரிடம் தி.மு.க சென்ற பிறகு கலவரமும் சேர்ந்துகொண்டது.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை மதுரை விமான நிலையத்தில் ரத்தம் சொட்டச் சொட்ட தி.மு.க-வினர் தாக்கினர். அது குறித்து கலைஞரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, கலைஞர் அநாகரிகமாக பதில் கூறினார். பெண்களை இழிவுபடுத்தியதும் தி.மு.க-தான். விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க நடத்திய கலவரத்தைக் கண்டு மாவட்ட மக்கள் கொதித்துப்போயிருக்கிறார்கள். காவல்துறையினரையும் தி.மு.க-வினர் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

தி.மு.க-வின் கலவரம் தேர்தல் நேரத்தில் வெளிப்படும். கலவரத்தை தி.மு.க தொடர்ந்து கையில் எடுக்குமேயானால், வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க படுதோல்வியைச் சந்திக்கும். தனது கணவர் கொலைக்கு ஸ்டாலினும் ஆ.ராசாவும்தான் காரணம் என்று சாதிக் பாட்சாவின் மனைவி கண்ணீர்விட்டு அழுகிறார். `சொத்தை அபகரித்துக்கொண்டார் ஆ.ராசா. எங்கள் குடும்பமே நடுத்தெருவில் நிற்கிறது. தி.மு.க தலைவர்கள் கொடுத்த அழுத்தத்தில்தான் தனது கணவரை இறந்தார்’ என்று சாதிக் பாட்சாவின் மனைவி கண்ணீர்மல்க பேட்டி கொடுத்திருக்கிறார்.

2ஜி-யில் சம்பந்தப்பட்ட ஒருவர் கோபாலபுரம் சென்று ஸ்டாலினைப் பார்த்திருக்கிறார். அப்போது 200 கோடி ரூபாயை அந்த நபருக்கு ஸ்டாலின் கொடுத்திருக்கிறார். இதை சி.பி.ஐ விசாரணையில் சாதிக் பாட்சா கூறியிருக்கிறார். இதை நீதிமன்ற விசாரணையில் சொல்லிவிடக் கூடாது என்றுதான் சாதிக் பாட்சாவை தி.மு.க-வினர் மிரட்டியிருக்கிறார்கள். இதனால் மன அழுத்தத்தால் சாதிக் பாட்சா தற்கொலை செய்துகொண்டார். இது நாட்டு மக்களுக்கே தெரியும்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

`சிறுபான்மை மக்களின் பாதுகாவலன்’ என்ற தி.மு.க-வின் ஏமாற்று வேலையை இஸ்லாமிய மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இஸ்லாமியர்களை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஏமாற்றி தி.மு.க ஒட்டு வாங்க முடியும்? சாதிக் பாட்சாவின் மனைவிக்கு தி.மு.க-வினர் பதில் சொல்லியாக வேண்டும். `தமிழ்நாடு அரசு, போலீஸார் எனக்குப் பாதுகாப்பு கொடுத்ததால்தான் நான் உயிரோடு இருக்கிறேன். இல்லையென்றால் தி.மு.க-வினர் என்னைக் கொலை செய்துவிடுவார்கள்’ என்று ஜனாதிபதியிடமே சாதிக் பாட்சாவின் மனைவி புகார் கொடுத்திருக்கிறார். சொந்தக் கட்சிக்காரன் சாவுக்குக் காரணமானவர்கள் தி.மு.க-வினர். எங்களைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் கிடையாது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு