Published:Updated:

`அதிமுக ஆட்சியில் அதிக விலைக்கு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல்; விரைவில் நடவடிக்கை'-மா.சுப்பிரமணியன்

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
 ஆய்வு
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

கடந்த அதிமுக அட்சியில் மருத்துவ உபகரணங்கள் இரண்டு மூன்று மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கியது தடுக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், புதுக்கோட்டை மாத்தூர், கீரனூர் அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, அங்கு நடைபெறும் தடுப்பூசிப் பணிகளையும் ஆய்வு செய்தார். இதையடுத்து, திருமயம் அருகேயுள்ள லெம்பலக்குடியில் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தையும் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, திருமயம் அரசு மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று ஆய்வுசெய்தார். இந்த நிகழ்வுகளில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வுகளில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்ட மூன்று நாள்களிலேயே 25,617 பேர் பயனடைந்திருக்கின்றனர். தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. மூன்றாவது அலை வந்தாலும் அதைத் தடுக்க அனைத்துவிதமான முன்னேற்பாடுகளும் முதல்வரின் அறிவுறுத்தலின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் 98 சதவிகித மாற்றுத்திறனாளிகளுக்கும், 60 சதவிகித கர்ப்பிணிளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

தடுப்பூசி
தடுப்பூசி

இந்தியாவிலேயே அதிக கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படவுள்ளன. இந்தியாவில் இதுவரை 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கவில்லை. அதேநேரத்தில் செப்டம்பர் மாதம் பள்ளிகளைத் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் நல்ல முடிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். கடந்த ஆட்சியில் அதிக விலை கொடுத்து கொரோனா நோயாளிகளுக்கு உணவு வாங்கியது தடுக்கப்பட்டு, தற்போது உரிய விலை கொடுத்து வாங்கியதன் மூலம் ரூ.20 கோடி மிச்சப்படுத்தப்பட்டிருக்கிறது.

`மொத்தம் 100 பேருக்குக் குறி!’ - எஸ்.பி.வேலுமணி ரெய்டு பின்னணி..!

பி.பி.இ கிட் ரூ.350-லிருந்து ரூ.120-க்கும், ரூ.90 வரையிலும் பணம் கொடுத்து வாங்கிய N-95 முகக்கவசம் ரூ.22-க்கும் வாங்கப்பட்டுவருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் மருத்துவ உபகரணங்கள் இரண்டு மூன்று மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கியது தடுக்கப்பட்டுள்ளது. முறையான டெண்டர் விடப்பட்டு அனைத்துப் பொருள்களும் உரிய விலை கொடுத்து வாங்கப்பட்டுவருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் அதிக விலை கொடுத்து மருத்துவ உபகரணங்களை வாங்கியவர்களின் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு