Published:Updated:

``இது என்ன ஜீபூம்பா வேலையா?''- செந்தில் பாலாஜியை சாடும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

``கடந்த ஒரு வருட காலம் முயற்சி செய்து, இப்போது பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் திறப்பதற்கு, இது என்ன ஜீபூம்பா வேலையா?''

ஆத்துப்பாளையம் அணை திறக்கும் அமைச்சர்
ஆத்துப்பாளையம் அணை திறக்கும் அமைச்சர் ( நா.ராஜமுருகன் )

``நொய்யல் ஆற்றில் திருப்பூர் சாயக்கழிவு நீர் கலப்பதைத் தடுக்க, 150 கோடி மதிப்பீட்டில் பேபி கால்வாய் கட்டப்படவுள்ளது. அதன்பிறகு, சாயக்கழிவு பிரச்னை இருக்காது" என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

ஆத்துப்பாளையம் அணை திறக்கும் அமைச்சர்
ஆத்துப்பாளையம் அணை திறக்கும் அமைச்சர்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டத்தில் உள்ள ஆத்துப்பாளையம் நீர்த் தேக்கத்துக்கு, ஈரோடு மாவட்டம் முத்தூர் நொய்யல் ஆற்றில் உள்ள தடுப்பணையிலிருந்து வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு நிரப்பப்பட்டு, கரூர் மாவட்டத்தில் 19,500 ஏக்கர் பாசன வசதி பெற்றுவந்தது. கடந்த 1991-ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா, இந்த நீர்த்தேக்கத்தைத் திறந்துவைத்தார். சில ஆண்டுகள் பாசனத்துக்காக இந்த நீர்த் தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

அதன்பிறகு, திருப்பூர் சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலக்கப்பட்டதால், சாயக்கழிவு நீர், நீர் தேக்கத்தில் தேக்கி வைக்கப்பட்டு பாசனத்துக்குப் பயன்படுத்தப்பட்டதால், கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாழ்பட்டன. இதையடுத்து, கடந்த 1999-ம் ஆண்டு விவசாய சங்கத் தலைவர் ஜெகநாதன் என்பவர், முத்தூர் அணையிலிருந்து ஆத்துப்பாளையத்தில் தண்ணீர் கொண்டுவந்து தேக்கி வைக்க நீதிமன்றத்தில் தடை வாங்கினார்.

ஆத்துப்பாளையம் அணை திறக்கும் அமைச்சர்
ஆத்துப்பாளையம் அணை திறக்கும் அமைச்சர்
நா.ராஜமுருகன்

இதையடுத்து, சுமார் 18 ஆண்டுக்காலம் இந்த நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் கொண்டுவந்து தேக்கி வைக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், அண்மையில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நல்ல மழை பெய்ததால், நொய்யல் ஆற்றில் மழைநீர் அதிக அளவில் வந்தது. இதன்மூலம், முத்தூர் அணையிலிருந்து தண்ணீர் வாய்க்கால்கள் மூலம் கொண்டுவரப்பட்டு ஆத்துப்பாளையம் நீர்த் தேக்கத்தில் தேக்கி வைக்கப்பட்டது. அண்மையில் இந்த நீர்த் தேக்கம் நிறைந்ததையடுத்து, பாசனத்துகாக நீர் திறப்பு விழா கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு, மதகுகளை திறந்து வைத்து, பாசனத்துக்காக தண்ணீரை திறந்துவைத்தார்.

``18 வருஷம் கழித்து நிரம்பிய அணை; வீணடித்த அதிகாரிகள்!'' - கொதிக்கும் செந்தில் பாலாஜி

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ``18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நீர் தேக்கம் திறக்கப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் வந்ததால், நீர்தேக்கத்தில் நொய்யல் ஆற்று நீரை தேக்கக் கூடாது என நீதிமன்றம் தடை இருந்தது. இப்போது, நொய்யல் ஆற்றில் மழைநீர் அதிகளவில் வந்ததால், மழை நீர் ஆத்துப்பாளையம் நீர் தேக்கத்தில் தேக்கி வைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது. இதன் மூலம், 19,500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

ஆத்துப்பாளையம் அணை திறக்கும் அமைச்சர்
ஆத்துப்பாளையம் அணை திறக்கும் அமைச்சர்
நா.ராஜமுருகன்

நீதிமன்ற தடை விலக்கப்பட்டு, இன்று பாசனத்துக்காக நீர் திறக்கப்படுகிறது. தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட சாயப்பட்டறைகளில் இருந்து சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலப்பதைத் தடுக்க, 150 கோடி மதிப்பீட்டில் பேபி கால்வாய் கட்டப்படவுள்ளது. இந்தப் பணிகள் முடிவுற்றால், நொய்யல் ஆற்றில் மழைநீர் மட்டும் வரும். அப்படி வந்தால், இந்தப் பகுதி செழிக்கும்" என்றார்.

அவரிடம் செய்தியாளர்கள், ``அரசு நினைத்தால் நீதிமன்றத் தடை ஆணையை ஒரே நாளில் பெற்று, ஆத்துப்பாளையம் நீர்தேக்கத்திலிருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறந்திருக்கலாம்" என அரவக்குறிச்சி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி கூறியிருப்பது குறித்து கேட்டபோது,

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

``சாயக்கழிவு தண்ணீரால் நிலம் பாழ்பட்டது என்பதற்காக கடந்த 1999-ம் ஆண்டு பெற்ற நீதிமன்ற தடையாணை விவசாயிகள் பெற்றார்கள். நல்ல தண்ணீர் வரும்போது, தடையாணையை விலக்கி இருக்க வேண்டும். ஆட்சியில் இருக்கும்போது, செந்தில் பாலாஜிக்கு யாரையும் கண்ணுக்குத் தெரியவில்லை. தடையாணை பெற்றவரிடம் பேசி, அவரிடம் அனுமதி பெற்று, கடந்த ஒரு வருட காலம் முயற்சி செய்து, இப்போது பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் திறப்பதற்கு, இது என்ன ஜீபூம்பா வேலையா?" என எதிர் கேள்வி எழுப்பினார்.