Published:Updated:

தனி ராஜாங்கம் செய்கிறார் சங்கத் தலைவி! - மிரட்டுகிறார் அமைச்சர் நாசர்!

அமைச்சர் நாசர்
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர் நாசர்

துணி வெட்டும் மையத்தை மாற்றியதால் எங்கள் சங்கத்துக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படுவதோடு, உறுப்பினர்களின் வருவாயும் சரிபாதி பறிபோயிருக்கிறது.

தனி ராஜாங்கம் செய்கிறார் சங்கத் தலைவி! - மிரட்டுகிறார் அமைச்சர் நாசர்!

துணி வெட்டும் மையத்தை மாற்றியதால் எங்கள் சங்கத்துக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படுவதோடு, உறுப்பினர்களின் வருவாயும் சரிபாதி பறிபோயிருக்கிறது.

Published:Updated:
அமைச்சர் நாசர்
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர் நாசர்

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கத்திலிருந்து துணி வெட்டும் மையத்தைப் பிரித்து நெமிலிச்சேரிக்கு மாற்றியதைக் கண்டித்து, சமீபத்தில் சங்க உறுப்பினர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னணியை விசாரித்தால், “பால்வளத்துறை அமைச்சர் நாசரும், பூவிருந்தவல்லி தி.மு.க எம்.எல்.ஏ கிருஷ்ணசாமியும் சங்கத்தைக் கைப்பற்றும் நோக்கத்தில் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, இந்தக் கூட்டுறவு சங்கத்தின் துணி வெட்டும் மையத்தை நெமிலிச்சேரிக்கு மாற்றிவிட்டார்கள்” என்று குற்றம்சாட்டுகிறார்கள் மகளிர் சங்க நிர்வாகிகள்!

பரிமளம்
பரிமளம்

1987-ம் ஆண்டு, 60 உறுப்பினர்களுடன் தொடங்கிய திருவள்ளூர் மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கத்தில் கணவரை இழந்தவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட தற்போது 1,527 பெண்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் அரசுப் பள்ளிகளுக்குச் சீருடைகள், மாணவர்களுக்கு முகக்கவசங்கள் உள்ளிட்ட பள்ளி சார்ந்த ஆடைகளைத் தைத்து வழங்கிவருகிறது இந்தக் கூட்டுறவுச் சங்கம். இந்த நிலையில்தான் ‘போதிய இடவசதி இல்லை’ என்று கூறி இங்கு செயல்பட்டுவந்த துணி வெட்டும் மையத்தை நெமிலிச்சேரிக்கு மாற்றியது மாவட்ட சமூக நலத்துறை. இதற்கு சங்கத்தின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இதன் பின்னணியில் நடந்தது குறித்து நம்மிடம் விவரித்தார் மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பரிமளம்... “1991-ம் ஆண்டிலிருந்து 30 ஆண்டுகளாக இந்தச் சங்கத்தின் தலைவராக இருக்கிறேன். இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் சங்கத்தை லாபத்துடன் நடத்திவருகிறோம். அதற்கான அத்தனை ஆவணங்களும் எங்களிடம் இருக்கின்றன. ஆனால், சமீபத்தில் சங்கத்தைப் பிரித்து, புதிதாக ஒரு சங்கத்தை நெமிலிச்சேரியில் தொடங்கியதுடன், இங்கிருந்த துணி வெட்டும் மையத்தையும் சமூக நலத்துறை அதிகாரிகள் அங்கு மாற்றிவிட்டார்கள். அதிகாரிகளைக் கேட்டால், இந்த மாவட்டத்தின் அமைச்சர் நாசரையும், தி.மு.க எம்.எல்.ஏ கிருஷ்ணசாமியையும் கைகாட்டுகிறார்கள்.

நாசர்
நாசர்

துணி வெட்டும் மையத்தை மாற்றியதால் எங்கள் சங்கத்துக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படுவதோடு, உறுப்பினர்களின் வருவாயும் சரிபாதி பறிபோயிருக்கிறது. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது பற்றி அமைச்சர் நாசரிடம் சொல்வதற்காக அவரைச் சந்தித்தபோது, பெண்கள் என்றும் பார்க்காமல் கடுமையான வார்த்தைகளால் எங்களைத் திட்டியதுடன், ‘நீங்களெல்லாம் மாற்றுக் கட்சியினர். இனி அந்தக் கூட்டுறவு சங்கம் எங்கள் கட்சியினர் கட்டுப்பாட்டில் வர வேண்டும். அமைச்சர் நான் சொல்வதுதான் நடக்கும். உங்களால் முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று மிரட்டும் தொனியில் பேசி அனுப்பிவிட்டார். இது பற்றி முதல்வர் அலுவலகம், சமூக நலத்துறை அமைச்சர், இயக்குநர், மாவட்ட அதிகாரிகளுக்குப் புகார் அளித்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ள இந்த விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு நியாயம் தேடித்தர வேண்டும்” என்றார்.

மேற்கண்ட புகார் பற்றி அமைச்சர் நாசரிடம் கேட்டோம். “அந்தக் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் தங்களுக்குள் இரு பிரிவுகளாகப் பிரிந்து பல்வேறு குளறுபடிகளைச் செய்துவந்தனர். மேலும், நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் வந்தன. அதனாலேயே பிரச்னையைத் தீர்ப்பதற்காகவும், நிர்வாக வசதிக்காகவும் அந்தச் சங்கத்தை இரண்டாகப் பிரிக்க உத்தரவிட்டேன். பரிமளா என்பவர் எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ, அந்தக் கட்சியில் சேர்ந்துகொண்டு 30 ஆண்டுகளாக அந்தச் சங்கத்தின் தலைவராகத் தனி ராஜாங்கம் நடத்தியிருக்கிறார். இப்போது தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், எங்கள் கட்சிக்கு வர முயன்றார். அவர்மீது மோசடிப் புகார்கள் சொல்லப்பட்டதால், அவரைக் கட்சியில் சேர்க்கவில்லை. தற்போது பா.ஜ.க-வில் சேர்ந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அவர்மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டிருக்கிறது. விசாரணையின் அடிப்படையில் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். மற்றபடி எனது கட்சிக்காரர்களுக்காக இந்தக் கூட்டுறவு சங்கத்தை இரண்டாகப் பிரித்தேன் என்று சொல்வது தவறு” என்றார் விளக்கமாக. இதே கருத்தைதான் எம்.எல்.ஏ கிருஷ்ணசாமியும் சொல்கிறார்.

கிருஷ்ணசாமி
கிருஷ்ணசாமி

மீண்டும் பரிமளத்தைத் தொடர்புகொண்டு அமைச்சர் சொன்ன குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டோம்... “கணக்கு வழக்குகளைப் பொறுத்தவரை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அலுவலர்தான் கவனித்துக்கொள்கிறார். அந்த அலுவலர் காட்டும் இடத்தில் கையெழுத்திடுவது மட்டுமே சங்கத் தலைவியாக எனது பணி. பா.ஜ.க-வில் இணைவதற்கான முயற்சியில்தான் இருக்கிறேனே தவிர இன்னும் இணையவில்லை” என்றார்.

உண்மை நிலவரத்தை விசாரித்து, நேர்மையான நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism