Published:Updated:

ராமநாதபுரம்: 'முதல்வர் சொன்னது தொண்டி... அமைச்சர் சொல்வதோ சாயல்குடி..!’ பேருந்து பணிமனை பஞ்சாயத்து!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் பேருந்து பணிமனை அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்க, அமைச்சர் ராஜகண்ணப்பனோ சாயல்குடியில் அமைக்கப்படும் என்று சொல்லியிருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இது பற்றி நம்மிடம் பேசிய தொண்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், ``நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவாடானை தொகுதிக்குட்பட்ட முஸ்லிம்கள் அதிகம் வாழும் தொண்டியில் பேசிய ஸ்டாலின், `பலநாள் கோரிக்கையான பேருந்து பணிமனை இந்த முறை கண்டிப்பாக அமைத்துக் கொடுக்கப்படும்' என்று உறுதியளித்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த ஊர் மக்கள் வாக்குகளை அள்ளிச் செலுத்தி காங்கிரஸ் வேட்பாளர் கருமாணிக்கத்தை ஜெயிக்கவைத்தனர். மேலும், ஆட்சி அமைத்ததும் அதே ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை தொகுதிக்கு அருகில் இருக்கும் முதுகுளத்தூர் தொகுதியில் ஜெயித்த ராஜ கண்ணப்பனை போக்குவரத்துத்துறை அமைச்சராக்கினார் ஸ்டாலின். இது தொண்டி மக்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. 'டெப்போ வந்துரும்' என்று நம்பிக்கொண்டிருந்தனர்.

அமைச்சர் ராஜ கண்ணப்பன்
அமைச்சர் ராஜ கண்ணப்பன்

ஆனால், மக்களின் ஆசையை நிராசையாக்கும் வகையில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஒரு வேலையைச் செய்துவிட்டார். அதாவது, அவரது தொகுதியான முதுகுளத்தூருக்கு உட்பட்ட சாயல்குடியில் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்யச் சென்ற கண்ணப்பன், பேருந்து பணிமனை அமைத்துக் கொடுக்கப்படும் எனக் கூறியிருக்கிறார். இதனால், தொண்டி ஊர் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஏனெனில், அருகருகே உள்ள தொகுதிகளில் இரண்டு பேருந்து பணிமனைகள் வராது என்பதுதான் காரணம். `முதல்வர் ஒரு தேர்தல் உறுதி கொடுக்க, அதை மீறி போக்குவரத்துத்துறை அமைச்சர் அதே உறுதிமொழியை வேறோர் ஊருக்கு கொடுத்திருப்பது என்ன நியாயம்?’ என்கிறார்கள் தொண்டி மக்கள். அமைச்சர் ராஜ கண்ணப்பன் தனது முடிவை மாற்றி, நீண்டநாள் கோரிக்கையான தொண்டிக்கு டெப்போ அமைத்துக் கொடுக்க வேண்டும்!" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு