Election bannerElection banner
Published:Updated:

`பெயர் மாற்றம் முதல் சர்ச்சை ட்வீட் வரை...!’ - ஏன் பறிக்கப்பட்டது ராஜேந்திர பாலாஜியின் மா.செ. பதவி?

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடமிருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்ட விவகாரம், அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சியின் துனைத் தலைவர் பதவி வகித்த கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடந்த 2011-ம் ஆண்டு சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அத்தேர்தலில் வெற்றி பெற்ற சில நாள்களிலேயே மாவட்டச் செயலாளர் பதவியும், அமைச்சர் பதவியும் தேடி வந்தது. அதிரடியாகப் பேசுவதில் வல்லவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. கடந்த 2007-ம் ஆண்டு கே.டி.ராஜேந்திரன் என்ற தனது பெயரை நியூமராலஜிபடி, கே.டி.ராஜேந்திர பாலாஜி என மாற்றினார். அதன்பிறகே தனக்கு எம்.எல்.ஏ, அமைச்சர், மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்தது என நம்பியதால், அவரது தீவிர ஆதரவாளரும் தற்போதைய சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏவான ராஜவர்மனும், துரைப்பாண்டியன் என்ற தன் பெயரை நியூமராலஜிப்படி மாற்றினார்.

ராஜேந்திர பாலாஜி - ராஜவர்மன்
ராஜேந்திர பாலாஜி - ராஜவர்மன்

கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது தீவிர பற்று கொண்டிருந்ததால், ராஜவர்மனுக்கு சீட் பெற்றுக் கொடுத்து எம்.எல்.ஏவும் ஆக்கினார் கே.டி.ஆர். ஆனால், அதே ராஜவர்மனை கையில் எடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை டம்மி ஆக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போடப்பட்ட முதல் பாலில் விழுந்த விக்கெட்தான் தற்போதைய மாவட்டச் செயலாளர் பதவி பறிப்பு என்கிறார்கள்.

அதிரடியாகப் பேசும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தொடர் சர்ச்சைப் பேச்சுகளை கவனித்து வந்த அ.தி.மு.க தலைமை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், எம்.எல்.ஏ ராஜவர்மனுக்கும் இடையே நிலவும் போர் குறித்து கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியான வார இதழின் கட்டுரையை எழுதிய சம்மந்தப்பட்ட நிருபர் மீதான தாக்குதல்தான் மா.செ பதவி பறிப்பிற்கான முக்கிய காரணம் எனவும் சொல்கிறார்கள். இதுகுறித்து கட்சியினர் சிலரிடம் பேசினோம், ``மீடியாக்களில் பேட்டி கொடுக்கிறேன் என்ற பெயரில் அதிரடியாகவும், காமெடியாகவும் பேசிவிடுவதால் அவை சர்ச்சையாகி வெடித்துள்ளன.

முதல்வருக்கு வெள்ளி வாள் பரிசளித்த ராஜவர்மன்
முதல்வருக்கு வெள்ளி வாள் பரிசளித்த ராஜவர்மன்

இவரது பேச்சினை முதல்வர் பழனிச்சாமியும், துணைமுதல்வர் பன்னீர்செல்வமும் பலமுறை கண்டித்துள்ளனர். அதைமீறியும் தன்னை அறியாமல் அவர் பேசும் பேச்சும் சர்ச்சையாகி விடுகிறது. இந்த நிலையில்தான், `அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கட்டுப்படுத்த நீங்கதான் சரியான ஆள். கட்சிக்காக தீவிரமா உழையுங்க. சரியான நேரத்துல உங்களுக்கான உரிய மரியாதை அளிக்கப்படும்’ என ராஜவர்மனை தன் அறைக்கே அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியது அண்ணனுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதிலிருந்து இருவரும் மோதல் போக்கையே கடைபிடித்து வந்தனர். மாவட்டச் செயலாளர் பதவின்னா சும்மாவா…? அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் ஆதரவால், `அடுத்த மாவட்டச் செயலாளர் நான்தான்’ என தன் ஆதரவாளர்களிடம் வெளிப்படையாகவேச் சொல்லி வலம் வந்தாரம் ராஜவர்மன். இந்தநிலையில்தான், கடந்த 1-ம் தேதி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த புதிய மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா மேடை ஏறும்போது, `அதிரடியாப் பேசணும்னு எதையாவது பேசி வைக்காதீங்க’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சற்றே எரிச்சலுடன் கூறியதால்தான் 11.25 நிமிடங்கள் மட்டுமே வரவேற்புரை நிகழ்த்துவிட்டு அமர்ந்தார்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

விழா முடியும்வரை இறுக்கமான முகத்துடனே உட்கார்ந்திருந்தார் கே.டி.ஆர். விழாவின் முடிவில் முதல்வர், துணைமுதல்வருக்கு வெள்ளியாலான கறவைப்பசுவை நினைவுப் பரிசாக ராஜேந்திர பாலாஜி வழங்கிவிட்டு திரும்புவதற்குள், வெள்ளியாலான வாள்களை இருவருக்கும் பரிசாக வழங்கி ராஜேந்திர பாலாஜிக்கு டென்சனை ஏற்படுத்தினார் ராஜவர்மன். இதை எல்லாவற்றையும் விட தேசியகீதம் முடிவடைந்து மேடையை விட்டு முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் கீழே இறங்கியபோது சாஷ்டாங்கமாக கீழே விழுந்து இருவரது காலிலும் ராஜவர்மன் விழுந்ததுதான் ஹைலைட்.

கடந்த 3-ம் தேதி வெளியான வார இதழ் ஒன்றில் கட்சியில் அமைச்சரின் செயல்பாடுகள் குறித்த விமர்சனமும், அமைச்சரால் எம்.எல்.ஏ ஆக்கப்பட்டு கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராஜவர்மனின் ஆரம்பகால வாழ்வு முதல் தற்போதைய மா.செ பதவிக்கான மூவ் குறித்தும், இருவருக்குமிடையான மோதல் குறித்தும் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. இக்கட்டுரை வெளியான அன்று இரவே சிவகாசியில் நின்று கொண்டிருந்த அக்கட்டுரையை எழுதிய நிருபர் கொலைவெறித் தாக்குலுக்கு உள்ளானார்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

நிருபர் மீதான இத்தாக்குதல் சம்பவத்தை தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர் சங்கங்களும், தி.மு.க தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டித்தனர். இச்சம்பவம் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் இருவருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இருவரும் கடுமையாக எச்சரித்தார்கள்.

அத்துடன், மதுரை ஆவினில் பால் பொருட்கள் விற்பனைப்பிரிவு மேலாளராகப் பணியாற்றி வந்த 36 வயதான புகழேந்தி, உற்பத்திப் பிரிவில் இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த 7-ம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டார். விரக்தியில் இருந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது மதுரை ஆவின் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. `சில உயரதிகாரிகளின் நெருக்கடிக்கும், நிர்வாகத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்கும் புகழேந்தி பலிகடா ஆக்கப்பட்டார்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

ஆவினில் நடக்கும் பலகோடி ரூபாய் முறைகேட்டுக்குக் காரணமான அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு நேர்மையானவரை அமைச்சராக்க வேண்டும். இதுவரை நடந்துள்ள ஆவின் முறைகேடுகள் அனைத்தையும் சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்’ என தமிழ்நாடு பால்முகர்வகள் சங்கத்தினர் முதல்வரிடம் வலியுறுத்தியதும் மா.செ பதவி பறிப்பிற்கு ஒரு காரணம் என்றனர்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம், ``ராஜேந்திர பாலாஜி மீது ஏற்கெனவே கொலை வழக்கு ஒன்னு கோர்ட்டுல பென்டிங் இருக்கு, வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்த வழக்கும் இருக்கு. கடந்த ஆண்டு செப்டம்பரில், காங்கிரஸ் ஜெயித்து விட்டது என்ற கடுப்பில் கூட்டம் ஒன்றில் பேசிய ராஜேந்திர பாலாஜி, `மாணிக்கம் தாகூர் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க வராமல் உள்ளார். அவர் வந்தால் மக்களே சுட்டுக் கொன்று விடுவார்கள்’’ என்று ஆவேசமாகப் பேசியது எங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்த மாணிக்கம் தாகூரை இவ்வளவு கொலை வெறியோடு பேசினார். காங்கிரஸ் கட்சி சார்பில், `மாணிக்கம் தாகூருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ராஜேந்திர பாலாஜியால் ஆபத்து உள்ளது. நடவடிக்கை எடுக்கணும்’ என்று போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. அமைச்சர் என்பதால் அந்த புகாரை அப்படியே கிடப்பில் போட்டது காவல்துறை.

ராஜேந்திர பாலாஜி - ரஜவர்மன்
ராஜேந்திர பாலாஜி - ரஜவர்மன்

மாணிக்கம் தாகூரோ, நாடாளுமன்றச் செயலாளருக்கு புகார் மனு அனுப்பினார்.`ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தொகுதியில் பணியாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ராஜேந்திர பாலாஜியால் அச்சுறுத்தல் உள்ளது. ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க தமிழக சட்டப்பேரவை சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்' என்று அவர் அனுப்பிய புகாரும் நிலுவையில் உள்ளது.

இப்படித்தான் பெரியார், அண்ணா, கவிஞர் வைரமுத்து கி.வீரமணி, கமல் உள்ளிட்டோரை கடுமையாகப் பேசி சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். அது பரபரப்பாக பேசப்படும்போது, சந்தோஷப்பட்டுக் கொள்வார். அவர் பெயர் மட்டும்தான் பரபரப்பா பேசப்பட்டு வருது. சீனியர் கட்சிக்கார்ரகளிடம் மோசமாகவே நடந்து கொள்வார். அவருடன் கட்சிக்கு சிறிதும் சம்மந்தமில்லாத ஒரு கும்பல் சுத்தி வருது. அவர்களுடன்தான் எல்லா இடங்களுக்கும் சென்று வருவார். அப்படி முன்பு நெருக்கமாக இருந்தவர்தான் ராஜவர்மன், அமைச்சரை பற்றிய அனைத்து ரகசியங்களும் தெரியும். இப்போது அமைச்சர் வகிக்கும் மாவட்டச் செயலாளர் பதவியை கைப்பற்ற நினைப்பதால்தான் இவ்வளவு பிரச்னையே.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

மாவட்டத்துல கட்சி செல்வாக்கை இழந்து வருது. இப்பவே மாவட்டத்துல மொத்தமுள்ள 7 தொகுதிகளில் 4 தி.மு.க வசம் உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் பெருத்த அடி. அதிலும், ராஜேந்திர பாலாஜியின் சிவகாசி தொகுதியில பல இடங்கள் கைவிட்டு போயிடுச்சு. வருகிற சட்டமன்றத் தேர்தலில் இருக்கிற 3 தொகுதியும் போய்விடும் நிலை உள்ளது. அதுக்கு தகுந்த மாதிரி சாதி ரீதியான பிளவையும் அமைச்சர் உருவாக்கிட்டார்” என்றனர்.

அமைச்சரின் ட்வீட்
அமைச்சரின் ட்வீட்

இப்படி நெருக்கடிகள் சூழ்ந்திருக்கும் நிலையில், ``இந்துக்களின் மத வழிபாட்டு தன்மைகளையும் நம்பிக்கைகளையும் இயற்கையான வழிபாடுகளையும் கிண்டல் செய்த போலி போராளிகளுக்கு இன்று நாட்டில் நடக்க கூடிய சம்பவம் ஒரு பாடம்.. ஒரு படிப்பினை..! இறைவா கிருஷ்ணபரமாத்வே இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் கொரோனோவிடமிருந்து காப்பாற்று” என ட்வீட்டி புதிய சர்ச்சையில் சிக்கினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இந்த ட்வீட் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அப்செட் ஆக்கியது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். சர்ச்சைகள் விஸ்வரூபமெடுத்திருக்கும் நிலையில், இந்த ட்வீட்டுக்குப் பின்னரும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியல்ல என்று அ.தி.மு.க தலைமை நினைத்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படி அதிரடி பேச்சுகளாலும் சர்ச்சைக் கருத்துகளாலும் தனது மா.செ பதவியை இழந்திருக்கிறார் கே.டி.ஆர். அடுத்ததாக அவரது அமைச்சர் பதவியைப் பறிக்கவும் முயற்சிகள் நடப்பதாகச் சொல்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். சர்ச்சைக்குரிய அந்த ட்வீட்டை தற்போது நீக்கியிருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு