Election bannerElection banner
Published:Updated:

சசிகலாவுக்காக யாக பூஜையில் கலந்துகொண்டாரா ராஜேந்திர பாலாஜி? - கும்பகோணம் பரபரப்பு

யாக பூஜையில் ராஜேந்திர பாலாஜி
யாக பூஜையில் ராஜேந்திர பாலாஜி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசியதாக தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், அவர் கும்பகோணம் கோயிலுக்கு வந்து சசிகலாவுக்காக யாக பூஜையில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

கும்பகோணத்திலுள்ள பிரசித்தி பெற்ற கோயில் ஒன்றில் அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற யாக பூஜையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். சசிகலா நினைத்த காரியம் நடக்கவே, அவர் இங்கு வந்து வழிபட்டதாகத் தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

கும்பகோணம் அருகேயுள்ள அய்யாவாடியில் அமைந்திருக்கிறது பிரசித்திபெற்ற பிரத்யங்கிராதேவி கோயில். இங்கு அமாவாசைதோறும் `நிகும்பலா’ என்ற யாகம் நடைபெறுவது வழக்கம். யாகத்தின் முக்கியப் பொருளாக மிளகாயைப் பயன்படுத்துவர். இந்த யாகத்தில் கலந்துகொண்டால், எதிரிகள் வீழ்ந்துவிடுவார்கள், நினைத்த காரியம் கைகூடும், வெற்றி கிட்டும் என்பது ஐதீகம்.

ஒருமுறை மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் இங்கு வந்து வழிபட்டுச் சென்றனர். அதன் பிறகு ஜெயலலிதா மீண்டும் ஆட்சி அரியணையில் அமர்ந்தார். சசிகலா குடும்பத்தினர் அடிக்கடி இங்கு வந்து அமாவாசையில் நடைபெறும் யாகத்தில் கலந்துகொள்வது வழக்கம்.

சசிகலா
சசிகலா

இந்தநிலையில், தை அமாவாசையான இன்று கும்பகோணத்துக்கு வந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ப்ரத்யங்கராதேவி கோயிலில் நடைபெற்ற நிகும்பலா யாகத்தில் கலந்துகொண்டார். பின்னர் நீண்ட நேரம் இருந்து சாமி தரிசனம் செய்த பிறகு சென்றார். அவருடன் அ.தி.மு.க தஞ்சை தெற்கு மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் இணைச் செயலாளர் ஜீவா கலந்துகொண்டதுடன், அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

ராஜேந்திர பாலாஜியின் வருகை குறித்து அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகளுக்கே தெரியாமல் ரகசியம் காத்தனர். அ.தி.மு.க-வின் கும்பகோணம் மேற்கு ஒன்றியச் செயலாளரான என்.ஆர்.வி.செந்தில் தனியாக இந்த யாகத்தில் கலந்துகொண்டார். ஆனால், அவருடன் ராஜேந்திர பாலாஜி எதுவும் பேசவில்லை எனக் கூறப்படுகிறது.

யாக பூஜையில் ராஜேந்திர பாலாஜி
யாக பூஜையில் ராஜேந்திர பாலாஜி

இது குறித்து விவரமறிந்த வட்டாரத்தில் விசாரித்தோம். ``ஜெயலலிதா சசிகலாவுடன் இந்தக் கோயிலுக்கு வந்து நிகும்பலா யாகத்தில் கலந்துகொண்டார். அதன் பிறகே மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரனார்.

ஸ்டாலினுக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி, விந்தியா - வேலுமணியின் அ.தி.மு.க பொதுக்கூட்ட ரிப்போர்ட்!

பின்னர், இந்தக் கோயிலுக்கு அரசியலிலுள்ள முக்கிய வி.ஐ.பி-க்கள் பலரும் வரத் தொடங்கினர். இந்தநிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா சில தினங்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார். சசிகலாவை வரவேற்று அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க-வைச் சேர்ந்த சிலரும் போஸ்டர் ஒட்டினர். கட்சித் தலைமை அவர்கள்மீது நடவடிக்கை எடுத்தது.

கோயில் பூஜையில் ராஜேந்திர பாலாஜி
கோயில் பூஜையில் ராஜேந்திர பாலாஜி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சசிகலாவுக்கு ஆதரவாக பேசியதாகத் தகவல்கள் வெளியாகின். இதையடுத்து, அவர் இந்தக் கோயிலுக்கு வந்து சசிகலாவுக்காக இந்த யாகத்தில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. சசிகலா மீண்டும், அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளராக வேண்டும் என்பது அவரின் விருப்பம். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சில அமைச்சர்கள் சசிகலாவுக்கு எதிராகப் பேசிவருகின்றனர்.

ராஜேந்திர பாலாஜி மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கும்போது அதிகப்படியாகப் பேசிவந்ததால் ,அவர் பல சர்ச்சைகளுக்கு ஆளானார். அ.தி.மு.க தலைமையும் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ராஜேந்திர பாலாஜிக்கு சீட் கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

கோயில் பூஜையில் ராஜேந்திர பாலாஜி
கோயில் பூஜையில் ராஜேந்திர பாலாஜி

இதனால் அவர் சசிகலாவுக்கு ஆதரவாகச் செயல்படத் தொடங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சசிகலாவின் அண்ணன் வினோதகன் மகன் மறைந்த மகாதேவனால் வாளர்க்கப்பட்டவர் ராஜேந்திர பாலாஜி. இதனால், சசிகலா குடும்பத்தின் மீது எப்போதும் உள்ளூர பாசத்துடனேயே இருப்பார்.

இந்தநிலையில்தான், சசிகலாவுக்காக ரகசியமாகக் கோயிலுக்கு வந்து யாகத்தில் கலந்துகொண்டு அவர் வழிபட்டதாகத் தெரிகிறது. இதனால், சசிகலாவின் எதிரிகள் வீழ்த்தப்படுவார்கள், நினைத்த காரியம் கைகூடும், வெற்றிகள் கிடைக்கும் என்பதால் யாகத்தில் கலந்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன’’ என்று தெரிவித்தனர்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

ராஜேந்திர பாலாஜி தரப்பிலோ, ``அமைச்சர் அடிக்கடி பல்வேறு கோயில்களுக்குச் சென்று வழிபட்டுவருவது எல்லோரும் அறிந்ததே. சில மாதங்களுக்கு முன்னர் தஞ்சாவூரிலுள்ள திட்டை கோயிலுக்கு வந்து வழிபட்டுச் சென்றார். அதேபோல் இன்று ப்ரத்யங்கராதேவி கோயிலில் நடைபெற்ற யாகத்தில் கலந்துகொண்டார். அவருக்கு பல்வேறு வேண்டுதல்கள் உள்ளன. அவை நிறைவேறவே இங்கு வந்து வழிபட்டார்.

சசிகலா சொன்ன பொது எதிரி... தி.மு.க-வா, பா.ஜ.க-வா?

மற்றபடி சசிகலாவுக்காக வந்தார் என யாரோ சிலர் பரபரப்புக்காகக் கிளப்பிவிட்டுள்ளனர். அது தவறானது. இதேபோல் நவகிரக கோயில்களில் ஒன்றான சூரியனார் கோயிலிலும், அதைத் தொடர்ந்து கும்பகோணத்தைச் சுற்றியுள்ள சில கோயில்களுக்கும் சென்று வழிபட்டார்’’ என்று தெரிவித்தனர். ராஜேந்திர பாலாஜியிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால், அவர் பேட்டிக் கொடுக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு