Published:Updated:

எலி, காட்டுப்பன்றியால் 58 கிராம பாசனக் கால்வாயில் உடைப்பு!'- அமைச்சர் உதயகுமார் சர்ச்சை

58 கிராம கால்வாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் அமைச்சர், மதுரை தேனி கலெக்டர்கள் இன்று ஆய்வு செய்தனர்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

வைகை அணையில் இருந்து உசிலம்பட்டி கிராம பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் 58 கிராம பாசனக் கால்வாயில் நேற்று அதிகாலை உடைப்பு ஏற்பட்டது. உடைப்பு ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்ய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வந்திருந்தார். உடன், தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ், மதுரை கலெக்டர் வினய் மற்றும் அதிகாரிகள் பலர் இருந்தனர்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

கால்வாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “கால்வாய் பகுதியில் எலி, காட்டுப்பன்றிகள் அதிகமான துளை ஏற்படுத்திய காரணத்தால் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

போர் கால அடிப்படையில் கால்வாய் சரி செய்யும் பணி நடக்கிறது. 6 கிலோமீட்டர் பள்ளமான பகுதியாக இருப்பதால், தண்ணீரின் வேகத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இனி இது போன்றதொரு சம்பவம் நடைபெறா வண்ணம் இருக்க, அதிகாரிகளிடம் பேசியுள்ளேன்” என்றார்.

58 கிராம கால்வாய்
58 கிராம கால்வாய்

அமைச்சரின் பேச்சு குறித்து 58-ம் கால்வாய் பாசன விவசாயிகள் சிலரிடம் பேசினோம். ``அந்தப் பகுதி மலைப்பகுதி. காட்டு விலங்குகள் நடமாட்டம் அதிகம். கடந்த வருடம் சோதனை ஓட்டம் நடந்த பின்னர், கால்வாய் புதர்மண்டிப்போனது. தற்போது தண்ணீர் திறக்கப்போகிறார்கள் எனக் கூறியதும் புதர்களை மட்டுமே அகற்றினர். கால்வாய் பலமாக இருக்கிறதா எனப் பார்க்கவில்லை.

மேலும், அப்பகுதி மண், லேசான மண் என்பதால் அந்த இடத்தில் சிமென்ட் கால்வாய் அமைக்க வேண்டும் என மதுரை ஆட்சியரிடம் பல முறை மனுக்கொடுத்திருக்கிறோம். இன்று ஆய்வு செய்த அமைச்சரும் சிமென்ட் கால்வாய் அமைக்கலாம் என்று கூறியிருக்கிறார். இப்போதைக்கு உடைந்த கால்வாயில் மணல் மூட்டைகளை அடுக்கி சரி செய்துவருகிறார்கள்” என்றனர்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

நேற்று முன்தினம் 100 கன அடி தண்ணீர் கால்வாயில் திறக்கப்பட்டது. இந்நிலையில் கால்வாய் உடைப்பு ஏற்பட்டதால் அதன் அருகே இருந்த விளைநிலங்களுக்குள் தண்ணீர் சென்றது. இதனால், அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி, நெல், தட்டைப்பயறு ஆகிய பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இன்று அமைச்சர், கலெக்டர்கள் ஆய்வு செய்ய வந்ததும், அந்த விளைநில விவசாயிகள், அமைச்சர், கலெக்டர்களிடம் சேதமான பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு முறையிட்டனர்.