`ஏர் உள்ள காலம் வரை முதல்வர் பேர் இருக்கும்!'- தீர்மானம் நிறைவேற்றிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஏற்கெனவே குடிமராமத்துப் பணியைத் தொடங்கியபோது முதல்வரை கரிகால் சோழன் என்று புகழ்ந்தவர், தற்போது `ஏர் உள்ள காலம் வரை எடப்பாடியாரின் பேர் இருக்கும்' என்று அவர் தலைமை வகிக்கும் ஜெயலலிதா பேரவை மூலம் தீர்மானம் இயற்றி பாராட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைத் தொடர்ந்து தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் புகழ்ந்து திக்குமுக்காட வைக்கிறார்கள் தமிழக அமைச்சர்கள். அதிலும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முதல்வரை புகழ்ந்து சொல்லும் விஷயங்கள் அதிக கவனம் பெறும்.

ஏற்கெனவே குடிமராமத்துப் பணியைத் தொடங்கியபோது முதல்வரை கரிகால் சோழன் என்று புகழ்ந்தவர், தற்போது டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு `ஏர் உள்ள காலம் வரை எடப்பாடியாரின் பேர் இருக்கும்' என்று அவர் தலைமை வகிக்கும் ஜெயலலிதா பேரவை மூலம் தீர்மானம் இயற்றி பாராட்டியுள்ளார்.
இன்று மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயகுமார், ``டெல்டா விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களைத் தொடங்குவதற்கு இந்த அரசு அனுமதி அளிக்காது என்று காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார் நமது முதலமைச்சர். இதை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் உடனடியாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு எதிரான எந்தத் திட்டம் வந்தாலும் அதை முதலமைச்சர் இரும்புக் கரம் கொண்டு அடக்கி, அதை ஒருபோதும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டார். ஒட்டுமொத்த டெல்டா விவசாயிகளுக்கு நலம் சேர்க்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக முதலமைச்சர் அறிவித்துள்ளதை ஸ்டாலினுக்குப் பாராட்ட மனம் இல்லை'' என்று பேசினார்.
நேற்று இதே தொகுதியில் நடந்த நலத்திட்ட விழாவில் பேசியவர், ``அ.தி.மு.க அரசை, அடிமை அரசு என்று ஸ்டாலின் கூறுகிறார். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதில் தவறில்லை. மாநில அரசின் நிதியை வைத்து மக்களின் தேவைகளை முழுவதும் நிறைவேற்ற முடியாது.

மத்திய அரசு பங்களிப்பு இருந்தால்தான் திட்டங்களை மக்களுக்கு வழங்க முடியும். எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் மக்களுக்குத் திட்டங்களை எப்படி செயல்படுத்த முடியும். உறவு வைத்தால்தானே கேட்க முடியும்.. தமிழக உரிமையையும் கேட்டுப் பெற முடியும். இதற்காக அ.தி.மு.க அரசை அடிமை அரசு என்று ஸ்டாலின் கூறினால் ஏற்றுக்கொள்ளத் தயார் '' என்று அவர் பேசினார்.