Published:Updated:

“பொங்கல் பரிசுத்தொகுப்பு டெண்டரில் என் மருமகன் தலையீடு இருப்பதாக நிரூபித்தால்...”

சக்கரபாணி
பிரீமியம் ஸ்டோரி
News
சக்கரபாணி

- பொங்குகிறார் அமைச்சர் சக்கரபாணி

பொங்கல் பரிசுத்தொகுப்பில் ‘பணம் கொடுக்கப்படவில்லை’ என்ற மக்களின் ஆதங்கப் புகாரில் ஆரம்பித்து, ‘உருகிய வெல்லம்’, ‘அரிசியில் வண்டு’, ‘புளி பாக்கெட்டில் பல்லி’ என அடுக்கடுக்காகப் புகார்கள் வரிசைகட்டுகின்றன. இதையடுத்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணியை நேரில் சந்தித்தோம்...

“கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போதும், கொரோனா பிரச்னை, நிதி நெருக்கடிகள் இருந்தன. ஆனாலும்கூட பொங்கல் தொகுப்பில் மக்களுக்குப் பணம் வழங்கப்பட்டதே?’’

“ஆமாம்... 1,000 ரூபாய் கொடுத்தார்கள். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த நாங்களும் ‘கொரோனா நிவாரணமாக 4,000 ரூபாயைச் சேர்த்து வழங்குங்கள்’ என அன்றைய அரசுக்குக் கோரிக்கை வைத்தோம். ஆனாலும், அவர்கள் செய்யவில்லை. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் 4,000 ரூபாயை இரண்டு தவணைகளாக மக்களுக்கு வழங்கிவிட்டோம். பொங்கல் பரிசுத்தொகுப்பிலும்கூட கடந்த ஆண்டுகளைவிடவும் அதிக எண்ணிக்கையில் 21 பொருள்களை வழங்கிவருகிறோம்.’’

“ஆனால், ‘முழுமையாக 21 பொருள்களும் வழங்கப்படுவதில்லை’ என்ற புகார் பரவலாக எழுந்துள்ளதே?’’

“பரிசுத்தொகுப்பு வழங்கும் இடங்களிலேயே 21 பொருள்களின் பட்டியலைக் குறிப்பிட்டுள்ளோம். `ஏதேனும் பொருள்கள் விடுபட்டிருந்தால், கேட்டு வாங்கிச் செல்லுங்கள்’ என்று நானும் அறிக்கை கொடுத்திருக்கிறேன். வடசென்னை பகுதியில், ‘பை இருப்பு இல்லை’ என்ற புகார் வந்தது. அங்கே சென்று விசாரித்தபோது, இருப்பில் பைகளை வைத்துக்கொண்டே ‘பை வரவில்லை’ என்று சேல்ஸ்மேன் பொய்யாக அறிவிப்பு செய்திருந்தது தெரியவந்தது. தமிழ்நாட்டில் பெரும்பாலான கோஆபரேட்டிவ் சொசைட்டிகளில், இப்போதும் அ.தி.மு.க தரப்பில் தேர்வுசெய்யப்பட்ட நபர்களே பொறுப்பில் இருப்பதால், தி.மு.க அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், இது போன்று செயல்பட்டு வருகின்றனர்.’’

 “பொங்கல் பரிசுத்தொகுப்பு டெண்டரில் என் மருமகன் தலையீடு இருப்பதாக நிரூபித்தால்...”
 “பொங்கல் பரிசுத்தொகுப்பு டெண்டரில் என் மருமகன் தலையீடு இருப்பதாக நிரூபித்தால்...”

“உருகிய வெல்லம், வண்டு, பல்லி எனத் தரமற்ற வகையில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவதாக அ.தி.மு.க தலைவர்கள் காட்டுகிற ஆதாரத்தை எப்படி மறுப்பீர்கள்?’’

“பரிசுத்தொகுப்பில் உள்ள அத்தனையும் தரமான பொருள்கள்தான். உதாரணமாக வெல்லத்தைச் சாதாரணமாகத் தரையில் வைத்திருந்தால் உருகிவிடும் என்பதால், ஐந்தடி உயரத்தில் பாதுகாப்பான முறையில் வைத்திருந்து மக்களுக்கு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்குக் கடந்த டிசம்பர் மாதமே அறிவுறுத்தியிருந்தோம். ஒருவேளை எங்கேனும் தரமற்ற பொருள்கள் விநியோகிக்கப் பட்டிருந்தால், உடனடியாக அவற்றைக் கண்டறிந்து, மாற்றுப்பொருள் வழங்கவும் உத்தரவிட்டுவருகிறோம்.

ஆனால், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களே இது போன்று திட்டமிட்டு பொய்ப் புகார் கூறிவருவது அதிகரித்திருக்கிறது. உதாரணமாக, புளி பாக்கெட்டில் பல்லி இருந்ததாகத் திருத்தணியிலிருந்து ஒருவர் புகார் கூறியிருந்தார். உடனே, சம்பவ இடத்துக்கு நேரில் சென்று அதிகாரிகள் விசாரணை செய்தபோது, பொய்யாக வேறு ஒரு புளி பாக்கெட்டைக் காண்பித்து அவதூறு பரப்பியிருக்கிறார் என்பது தெரியவந்தது. எனவே, உடனடியாக அவர்மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது.’’

“பரிசுத்தொகுப்புக்கான பொருள்களைத் தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யாமல், வட மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்தது ஏன்?’’

“தமிழ்நாடு முழுக்க 2 கோடியே 15 லட்சத்து 67 ஆயிரம் குடும்பங்களுக்குப் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. அப்படியென்றால், மொத்தம் 40 கோடிக்கும் அதிகமான பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன. இவை அத்தனையையும் தமிழ்நாட்டில் மட்டுமே கொள்முதல் செய்துவிட முடியாது. தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்பட்டது போக, பற்றாக்குறைக்கு வெளி மாநிலங்களிலும் கொள்முதல் செய்திருக்கிறோம். மேலும், எல்லாப் பொருள்களும் தமிழ்நாட்டிலேயே கிடைத்துவிடாது. உதாரணமாக சீரகம், கடுகு, துவரம் பருப்பு, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்கள் தமிழ்நாட்டில் விளைவதில்லையே...’’

 “பொங்கல் பரிசுத்தொகுப்பு டெண்டரில் என் மருமகன் தலையீடு இருப்பதாக நிரூபித்தால்...”
 “பொங்கல் பரிசுத்தொகுப்பு டெண்டரில் என் மருமகன் தலையீடு இருப்பதாக நிரூபித்தால்...”

“ஆனால், `ஆந்திரா, குஜராத், நாக்பூர் என வேற்று மாநிலத் தயாரிப்புகளை கமிஷனுக்காகவே கொள்முதல் செய்துள்ளனர்’ என்கிறார்களே?’’

“டெண்டர் விவகாரங்களில், அமைச்சரோ அரசாங்கமோ தலையிடுவதில்லை. அதற்கென்று ஒரு சப் கமிட்டி இருக்கிறது. அந்தக் குழுவின் கண்காணிப்பைத் தாண்டி யாரும் தவறு செய்துவிட முடியாது. கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், டெண்டர்களில் இரண்டு அல்லது மூன்று பேர்தான் கலந்துகொண்டனர். ஆனால், இப்போது ஆன்லைன் வழியாக நாடு முழுவதிலுமிருந்து 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. அவர்களில் யார் குறைவான தொகைக்கு டெண்டர் கேட்கிறார்களோ அவர்களுக்குத்தான் ஒப்புதல் வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர் கூட்டுறவு சங்கத்துக்கும்கூட டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் முந்திரிப் பருப்பு, ஏலக்காய் உள்ளிட்ட 45 கிராம் பொருள்கள் 45 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், தற்போது அதே பொருள்களை 110 கிராம் அளவுக்கு வெறும் 62 ரூபாய் மட்டுமே கொடுத்து கொள்முதல் செய்திருக்கிறோம்.’’

 “பொங்கல் பரிசுத்தொகுப்பு டெண்டரில் என் மருமகன் தலையீடு இருப்பதாக நிரூபித்தால்...”

“டெண்டர் விவகாரங்களில், உங்கள் மருமகன் தலையீடு இருப்பதாகச் சொல்கிறார்களே?’’

“என் மருமகன் ஸ்ரீராம் எம்.பி.பி.எஸ் படித்து முடித்துவிட்டு பொள்ளாச்சியில் பள்ளி ஒன்றை நடத்திவருகிறார். மேற்கொண்டு முதுநிலை மருத்துவப் படிப்புக்காகவும் முயன்றுகொண்டிருக்கிறார். அமைச்சராகிய நானே நினைத்தாலும் டெண்டர் விவகாரங்களில் தலையிட முடியாது என்கிறபோது, என் மருமகன் எப்படித் தலையிட்டுவிட முடியும்? அப்படி அவர் தலையிட்டிருப்பதாக ஓர் அதிகாரி சொல்லட்டும், அதற்கு முழுப் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்கிறேன்.

அரசியல்ரீதியாக, இந்த அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டு சுமத்த நினைப்பவர்களுக்கு வேறு எந்தக் காரணமும் கிடைக்கவில்லை. எனவே, இல்லாத பொய்களையெல்லாம் இட்டுக்கட்டிச் சொல்லிவருகிறார்கள்!’’