Published:Updated:

`தமிழகம், பெரியார் வழி வந்த பூமி..!'- செல்லூர் ராஜு சொல்வது என்ன?

ஹாஜியார்களுக்கு தொகுப்பூதியம் 20 ஆயிரம் வழங்கி வரலாற்றுச் சாதனை புரிந்துவருகிறது.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ ( என்.ஜி.மணிகண்டன் )

''இஸ்லாமியர்களுக்கு, இஸ்லாமிய நாடுகளைவிட அதிக அளவு நன்மைகளைச் செய்துவருபவர் எடப்பாடி. சாணக்கிய முதல்வராகத் திகழ்கிறார். எடப்பாடி அரசின் திட்டங்கள் குக்கிராமங்களுக்கு ஊடுறுவிச் சென்றுள்ளன. ஆனால், அ.தி.மு.க-வை சிறுபான்மையினருக்கு விரோதிகளைப் போல தி.மு.க சித்திரித்துவருகிறது'' என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு
என்.ஜி.மணிகண்டன்

மதுரை கோரிப்பாளையம் தர்ஹாவில், ரூ.1.8 கோடி மதிப்பீட்டில் சுற்றுலாத்துறை மூலமாகச் செயல்படுத்தவுள்ள திட்டத்தைத் தொடங்கிவைத்த அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசும்போது, ''எடப்பாடியாரின் அரசு, வக்பு வாரியத்துக்கு மானியமாக ரூ.2 கோடி வழங்குகிறது. உலமாக்கள் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. ஹாஜியார்களுக்கு தொகுப்பூதியம் 20 ஆயிரம் வழங்கி வரலாற்றுச் சாதனை புரிந்துவருகிறது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க எப்போதும் இருக்கும். தி.மு.க -வினர் வெளியில் புலி, சட்டமன்றத்தில் எலி போல செயல்படுகின்றனர். அன்வர்ராஜா தலைமையில் சிறுபான்மையினர் குழு முதல்வரை சந்திக்கின்றது.

கோரிப்பாளையம் தர்ஹாவில் செல்லூர் ராஜு
கோரிப்பாளையம் தர்ஹாவில் செல்லூர் ராஜு
என்.ஜி.மணிகண்டன்

வரும் தேர்தல்களில், இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் வாக்களிப்பார்கள். அவர்கள் எங்களது நண்பர்கள். பா.ஜ.க-வோடு 7 ஆண்டுகள் அமைச்சரவையில் இருந்தவர்கள் தி.மு.க-வினர். இந்திரா காந்தியை அன்னை எனக் கூறியவர்கள், பின்பு அவரைத் தாக்கினர்.

ஆதரிப்பவர்களை மட்டும் புகழ்பாடுவது தி.மு.க-வின் வழக்கம். தமிழகம், பெரியார் வழி வந்த பூமி. இங்கு, மத உணர்வைத் தூண்டி குளிர்காய நினைக்கும் தி.மு.க-வின் எண்ணம் நிறைவேறாது'' என்று பேசினார்.

எதிர்ப்பு கோஷமிட்டவர்கள்
எதிர்ப்பு கோஷமிட்டவர்கள்
என்.ஜி.மணிகண்டன்

செல்லூர் ராஜு காரில் திரும்பிச் சென்றபோது, இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த சிலர், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அட்டைகளைப் பிடித்தபடி கோஷமிட்டதால், அப்பகுதியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.