Published:Updated:

`இனி முழுமையா மக்கள் பணிதான்!’ - கொரோனாவில் இருந்து மீண்ட செல்லூர் ராஜு உற்சாகம்

செல்லூர் ராஜூ குடும்பத்தினர்
செல்லூர் ராஜூ குடும்பத்தினர் ( என்.ஜி.மணிகண்டன் )

``தங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து எங்கள் மீது கட்சியினரும் மக்களும் காட்டிய அன்புக்கும் பிரார்த்தனைக்கும் கடமைப்பட்டுள்ளேன். இனி முழுமையாக மக்கள் பணிதான்'' என்றார் செல்லூர் ராஜு உற்சாகமாக.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் செல்லூர் ராஜு அதிலிருந்து மீண்டு, மீண்டும் அரசியல் பணியாற்ற வந்துள்ள நிலையில், அவருடைய ஆதரவாளர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்து வருகிறர்கள்.

வரவேற்பு
வரவேற்பு
என்.ஜி.மணிகண்டன்

சீரியஸான விஷயங்களையும் ஜாலியாக பேசி அரசியல் வட்டாரத்தில் கலகலப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தி வந்த அமைச்சர் செல்லூர்ராஜு, கொரோனா காலத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார். இந்த நிலையில் அவர் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 10-ம் தேதி அவருக்கும் பாதிப்பு ஏற்பட சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார்.

மதுரையில் அவர் இல்லாமல் அவர் ஆதரவாளர்கள் மிகவும் சோர்ந்து போனார்கள். இந்த நிலையில் கொரோனாவிலிருந்து மீண்டு மதுரை வந்தவர், சில நாள்கள் வீட்டிலும் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ
என்.ஜி.மணிகண்டன்

முழுமையாக குணமான நிலையில், நேற்று முதல் வழக்கமான அரசியல் பணியில் இறங்கி விட்டார். நேற்று கட்சி அலுவலகத்துக்கு செல்லூர் ராஜு குடும்பத்தினருடன்வந்தபோது ஊரடங்கை மறந்து கட்சியினர் மேடை அமைத்து, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். சமூக இடைவெளியைப் பற்றி கவலை கொள்ளாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு நூற்றுக்கணக்கான கட்சியினர் திரண்டு வந்து அனைவரையும் திகைக்க வைத்தனர்.

இன்று முதல் துறை சார்ந்த பணிகளையும், கட்சிப்பணிகளையும் தொடங்கியுள்ள செல்லூர்ராஜுவிடம் பேசினோம். ``போறபோக்கில் கொரோனா நம்மளையும் டச் பண்ணிட்டு போயிருச்சு, அவ்வளவுதான். இப்போது பூரண குணமடைந்து விட்டேன். என் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோது அவருக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசச் சென்றபோது எனக்கும் தொற்று ஏற்பட்டது.

செல்லூர் ராஜு குடும்பத்தினர்
செல்லூர் ராஜு குடும்பத்தினர்
என்.ஜி.மணிகண்டன்

உரிய சிகிச்சை பெற்று இருவரும் குணமடைந்துவிட்டோம். சமூக இடைவெளியை கடைப்பிடித்து மருத்துவர்கள் சொல்லும் வழிமுறைகளை கடைப்பிடித்தால் கொரோனா பாதிக்காமல் வாழலாம். தங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து எங்கள் மீது கட்சியினரும், மக்களும் காட்டிய அன்புக்கும், பிரார்த்தனைக்கும் கடமைப்பட்டுள்ளேன். இனி முழுமையாக மக்கள் பணிதான்'' என்றார் உற்சாகமாக.

அடுத்த கட்டுரைக்கு