Published:Updated:

`அதிசயமல்ல; ஆரோக்கியமான அரசியல்!' - கம்யூனிஸ்ட் எம்.பி அலுவலகத்துக்கு வந்த அமைச்சர் செல்லூர் ராஜு

செல்லூர் ராஜு-சு.வெங்கடேசன்
செல்லூர் ராஜு-சு.வெங்கடேசன் ( என்.ஜி.மணிகண்டன் )

`தனிப்பட்ட முறையில், அவருடைய எழுத்துக்கு நானும் ஒரு வாசகர்தான். அவர் எழுதிய நூல்கள் பற்றி கேட்டேன். அப்படியே அவருடன் ஆலோசிக்க வந்துவிட்டேன்'.

அமைச்சர் செல்லூர் ராஜு, எதிர்க்கட்சி கூட்டணி எம்.பி-யான சு.வெங்கடேசனை சந்திக்க அவர் அலுவலகத்துக்கு வந்தது,தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்லூர் ராஜு-சு.வெங்கடேசன்
செல்லூர் ராஜு-சு.வெங்கடேசன்

`மத்திய அரசின் ஊதுகுழலாக தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான அரசு செயல்படுகிறது' என்று தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடுமையாக விமர்சித்துவருகின்றன. அதற்கு, அ.தி.மு.க அமைச்சர்கள் கடுமையான எதிர்வினையாற்றிவருகிறார்கள். குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை எதிர்க்கட்சிகள் தூண்டிவருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டிவருகிறார்கள்.

இந்த நிலையில், இன்று மதியம் மதுரையில் சு.வெங்கடேசன் ஏற்பாடு செய்த சிறப்பு முகாமைத் தொடங்கிவைக்க வருகை தந்தார், அமைச்சர் செல்லூர் ராஜு. அந்த நேரம், அமைச்சரைத் தன் அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று சு.வெங்கடேசன் அழைப்பு விடுக்க, உடனே வருவதாக ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து, இன்று மதியம் சு.வெங்கடேசனின் அலுவலகத்துக்கு வருகை தந்தவரிடம், தொகுதிப் பிரச்னைகளைப் பற்றி பேசியபின், தன்னுடைய நூல்களை வழங்கினார்.

செல்லூர் ராஜு-சு.வெங்கடேசன்
செல்லூர் ராஜு-சு.வெங்கடேசன்

இதுபற்றி அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசும்போது, ``இது ஒன்றும் அதிசயமல்ல. ஆரோக்கியமான அரசியல். நாங்கள் இருவரும் மதுரையில் பிறந்து வளர்ந்தவர்கள். நகரின் பிரச்னைகள் எங்களுக்குத் தெரியும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட இருவரும், மக்களுக்கு செய்யவேண்டியதைப் பற்றி ஆலோசிக்க உள்ளோம். தனிப்பட்ட முறையில் அவருடைய எழுத்துக்கு நானும் ஒரு வாசகர்தான். அவர் எழுதிய நூல்கள் பற்றி கேட்டேன். அப்படியே அவருடன் ஆலோசிக்க வந்துவிட்டேன். கட்சிரீதியாகக் கொள்கை மாறுபாடு இருக்கலாம். ஆனால், மக்கள் பணி என்று வரும்போது, இணைந்து செயல்படுவது நல்ல விஷயம். இதை எங்கள் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் கூறியுள்ளார்கள்.

`தமிழகத்துக்கு வெறும் 10,000 ரூபாய்; உ.பி-க்கு ரூ.7,000 கோடி!' - கொதிக்கும் சு.வெங்கடேசன் எம்.பி

நாங்கள், எதிர்க்கட்சி ஆளும் கட்சி என்று பாரபட்சம் பார்ப்பதில்லை. கீழடி அகழ்வாய்வுக்கு தொடர்ந்து குரல் கொடுத்தவர் சு.வெங்கடேசன். அதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கி, தற்போது 6-ம் கட்டப்பணிகள் தொடங்கியுள்ளன. ஆரம்ப காலத்திலிருந்து பொதுவுடமைத் தோழர்களுடன் துணை நின்றவர்கள் நாங்கள்.

செல்லூர் ராஜு-சு.வெங்கடேசன்
செல்லூர் ராஜு-சு.வெங்கடேசன்

தோழர் லீலாவதி கொலை செய்யப்பட்டபோது, மாநகராட்சி உறுப்பினராக இருந்த நான், அவர்களுடன் இணைந்து குரல் கொடுத்தேன். அதனால், இந்த சந்திப்பு ஆரோக்கிய அரசியலுக்கு வழி வகுக்கும்'' என்றார். இந்த சந்திப்பு அ.தி.மு.க-வுக்குள் மட்டுமல்ல, தி.மு.க கூட்டணிக்குள்ளும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு