Published:Updated:

`செந்தில் பாலாஜியின் அடுத்த குறி!'- கைகொடுத்த நிலக்கரி; கடுப்பில் தங்கமணி!

செந்தில் பாலாஜி - வட சென்னை அனல்மின் நிலையம் ஆய்வு
செந்தில் பாலாஜி - வட சென்னை அனல்மின் நிலையம் ஆய்வு

நிலக்கரி மாயமானதை இரு தரப்புமே ஒப்புக்கொள்கின்றன. ஆனால் அதற்கான காரணத்தை வைத்துத்தான் இப்போது அரசியல் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``அனல்மின் நிலையத்தில் நடந்த நிலக்கரி முறைகேடு குறித்து உரிய ஆய்வு நடத்தி தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்” என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார். செந்தில் பாலாஜியின் அடுத்த குறி கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கமணிதான் என்று ஏற்கனவே ஆரூடம் சொன்ன அ.தி.மு.க-வினர் இப்போது ஆக்‌ஷனை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

தங்கமணி - செந்தில் பாலாஜி
தங்கமணி - செந்தில் பாலாஜி

அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் ஏற்கெனவே லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை நடத்தியிருக்கிறது. கொங்குமண்டல முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்து நடந்த இந்த லஞ்ச ஒழிப்பு ரெய்டுக்குப் பின்னணியாக இருப்பது தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிதான் என்று அ.தி.மு.க-வினர் ஓப்பனாகவே புலம்பிவந்தனர். ஆனால், செந்தில் பாலாஜி தரப்போ, ``வெளிப்படையான நிர்வாகத்தைக் கொடுக்கும் தி.மு.க அரசு, தவறு செய்தவர்களுக்கும் அதற்கான தண்டனையை பெற்றுத்தரும்” என்று பதிலளித்து வந்தது. இந்தநிலையில், வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஆக்‌ஷனில் இறங்கியதுமே, அடுத்த குறியாக தங்கமணியே இருப்பார் என்று அ.தி.மு.க வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.

அதை நிரூபிக்கும் வகையில் செந்தில் பாலாஜியும் ஆக்‌ஷனில் இறங்கியிருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று வட சென்னை அனல்மின் நிலையத்துக்கு ஆய்வுக்குச் சென்றார் செந்தில் பாலாஜி. அங்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான இருக்கும் நிலக்கரி கையிருப்பு விவரங்களை ஆய்வு செய்தார். அப்போது கையிருப்பில் இருக்கவேண்டிய நிலக்கரி மதிப்பு 3.68 லட்சம் டன். ஆனால் 1.38 லட்சம் டன் நிலக்கரி மட்டுமே அங்கு இருப்பில் இருந்ததை அதிகாரிகள், அமைச்சரிடம் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதாவது சுமார் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமானதை அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அந்த நிலக்கரி எப்படி மாயமானது, எங்கு பயன்படுத்தப்பட்டது என்கிற விவரங்கள் ஏதும் அங்குள்ள ஆவணங்களில் இல்லை. மாயமான நிலக்கரி மதிப்பு மட்டும் சுமார் 85 கோடி ரூபாய் என்கிறார்கள் அதிகாரிகள். நிலக்கரி விவகாரம் குறித்து அதிகாரிகள் குழுவை அமைத்து விசாரிக்கச் சொல்லியிருக்கிறார் செந்தில் பாலாஜி. இந்த ஆய்வுப் பணிகள் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது ``நிலக்கரி மாயமான விவகாரத்தில் தவறு இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்று காட்டமாகச் சொல்லியிருக்கிறார்.

மின்சாரம்
மின்சாரம்

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி பொறுப்பில்தான் இந்த வடசென்னை அனல்மின் நிலையம் இருந்தது. இந்த அனல்மின் நிலையத்துக்குத் தேவைப்படும் நிலக்கரி எண்ணூர் துறைமுகம் மூலம் வந்து சேரும். ஏற்கெனவே மத்திய கணக்காய ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், `கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மின்சார வாரியத்துக்குக் கொள்முதல் செய்யப்பட்ட நிலக்கரி தரமில்லாமல் இருந்தது, நிலக்கரி கொள்முதலிலும் பல்வேறு தவறுகள் நடந்துள்ளன’ எனக் குறிப்பிட்டிருந்தனர். ``இந்த விவரங்களையெல்லாம் தெரிந்துகொண்ட செந்தில் பாலாஜி, தங்கமணிக்கு எதிரான அஸ்திரத்தை ஏவ முதலில் நிலக்கரி விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார்” என்கிறார்கள் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது ``மின்சார வாரியத்துக்குத் தேவையான நிலக்கரி வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் டெண்டர் முறையில் கொள்முதல் செய்யப்பட்டது. குறிப்பாக, சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்கு இதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அந்த நிறுவனம் கடந்த ஆட்சியில் இருந்தவர்களுக்கு மிகவும் நெருக்கமான நிறுவனம். ஆனால், அந்த நிறுவனம் அனுப்பிய நிலக்கரியில் போதிய கலோரி இல்லை என்கிற குற்றச்சாட்டு அப்போதே எழுந்தது. இப்போது ஆய்வு செய்யப்பட்ட நிலக்கரியெல்லாம் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட நிலக்கரி என்பதால், கடந்த ஆட்சியில் இருந்தவர்களுக்கு சிக்கல் உருவாகியிருக்கிறது” என்கிறார்கள்.

அனல்மின் நிலையம்
அனல்மின் நிலையம்

செந்தில் பாலாஜியின் புகார் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, ``நாங்கள் கடந்த மார்ச் மாதமே கண்டறிந்த ஒன்றைத்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி இப்போது கண்டறிந்ததாகக் கூறியிருக்கிறார். நாங்கள் ஆட்சியிலிருந்தபோதே இதற்கு விசாரணைக்குழுவை அமைத்துவிட்டோம். என் மடியில் கனமில்லை... வழியில் பயமில்லை” என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், இதன் பின்னால் பலமான அரசியல் இருக்கிறது என்கிறார்கள்.

கொங்கு மண்டலத்தில் தி.மு.க-வை வலுப்படுத்த நினைக்கும் செந்தில் பாலாஜி அ.தி.மு.க-வுக்கு எதிராகப் பல அஸ்திரங்களை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார். குறிப்பாக அ.தி.மு.க-வின் பலமான தலைவர்களை நோக்கியே இவரது அஸ்திரங்கள் இருப்பதால், அ.தி.மு.க தலைமையும் ஆடிப்போயிருக்கிறது.

கொடநாடு வழக்கு; தொடரும் நடவடிக்கைகள்; கலக்கத்தில் முன்னாள் அமைச்சர்கள்!
முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி
முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி

அந்த வரிசையில் இப்போது தங்கமணிக்கு குறிவைத்திருக்கிறார் செந்தில் பாலாஜி. அதற்காகவே ஆறு மாதங்களுக்கு முன்னால் மாயமான நிலக்கரி விவாகரத்தை இப்போது கையில் எடுத்து தங்கமணிக்கு எதிராகத் தனது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். இதற்கு தி.மு.க மேலிடத்தின் ஆசியும் முழுமையாக இருக்கிறது என்கிறார்கள். நிலக்கரி மாயமானதை இரு தரப்புமே ஒப்புக்கொள்கின்றன. ஆனால் அதற்கான காரணத்தை வைத்துத்தான் இப்போது அரசியல் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. உண்மை கண்டறியப்படுமா என்பதைப் பொறுந்திருந்து பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு