
அமைச்சர் வேலுமணியின் அண்ணனைச் சுற்றும் புகார்கள்...
‘‘தமிழகத்தில் தி.மு.க குடும்ப ஆட்சி வந்துவிடக் கூடாது’’ என்று பிரசாரம் செய்துதான் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. அதே விஷயத்தை முன்வைத்துத்தான் வருகிற சட்டமன்றத் தேர்தலையும் அ.தி.மு.க சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால், கொங்கு மண்டலத்தில் அதே குடும்ப அரசியலுடன் ஊழல் குற்றச்சாட்டும் சேர்ந்து அ.தி.மு.க-வை விரட்டிக்கொண்டிருக்கிறது. அ.தி.மு.க ஆட்சியில் பவர் சென்டராக வலம்வரும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அண்ணனை நோக்கித்தான் இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

வேலுமணியின் அண்ணன் அன்பரசனுக்குச் சொந்தமானது செந்தில் அண்ட் கோ நிறுவனம். அந்த நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த ராஜன் என்பவர், வேலுமணி ஆதரவால் கோவை மாநகராட்சியில் தனியாக ஒப்பந்தப் பணிகளைச் செய்யும் அளவுக்கு வளர்ந்தார். ஆர்.டி.ஐ மூலம் கிடைத்த தகவலின்படி, செந்தில் அண்ட் கோ மற்றும் ராஜன், தனித்தனி நிறுவனங்கள்போல கணக்கு காண்பித்து 47 டெண்டர்களில் கலந்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. ஆனால், அந்த டெண்டருக்கான ஏலத்துக்கு, இரண்டு தரப்பிலுமே ஒரே ஐ.பி அட்ரஸில் இருந்துதான் சமர்ப்பித்துள்ளனர். வெளியுலகுக்கு வேறு வேறாகத் தெரிந்தாலும் இரண்டும் ஒன்றுதான் என்பதுதான் புகார். மேலும், கோவை மாநகராட்சி வெளியிட்ட ஒப்பந்ததாரர்கள் பட்டியலில், செந்தில் அண்ட் கோ மற்றும் ராஜன் நிறுவனங்கள் இரண்டுக்குமே ஒரே தொடர்பு எண்தான் கொடுக்கப் பட்டிருக்கிறது. அந்த எண்ணை ட்ரூ காலர் ஆப்பில் போட்டுப் பார்த்தால், Rajan SPV (SPV - SP Velumani) என்று வருகிறது.
இந்த விவகாரத்தை கையிலெடுத்திருக்கும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் பேசினோம். ‘‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மேற்கண்ட தகவல்களைப் பெற்றுள்ளோம். அமைச்சராக இருக்கும் ஒருவர், தன் சகோதரரின் நிறுவனத்துக்காக இப்படிச் செய்வது, ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி குற்றம். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். இனி நீதிமன்றம்தான் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

கோவை மாநகராட்சி பே-புக்கில் கிடைத்த தகவலின்படி, கோவை மேயராக செ.ம.வேலுசாமி இருந்தவரை செந்தில் அண்ட் கோ உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் சுமார் 5 கோடி ரூபாய்க்கு மட்டுமே (2011 - 2013) ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன. ஆனால், கோவை மாநகராட்சி வேலுமணியின் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, மேற்கண்ட மூன்று நிறுவனங்களும் சுமார் 60 கோடி ரூபாய்க்கு (2014 - 2015) ஒப்பந்தம் பெற்றுள்ளன. முக்கியமாக, வேலுமணி சகோதரர் அன்பரசன், நிழல் அமைச்சராகவே வலம்வருகிறார். ஒருமுறை கோவை ஸ்மார்ட் சிட்டி பணிகளை, அன்பரசனுடன் மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்ததாக அதிகாரபூர்வ செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டதே இதற்கு சாட்சி. வேலுமணியும் அன்பரசனும் தங்களுக்குச் சொந்தமான ‘நல்லறம் அறக்கட்டளை’ சார்பாக நடத்தும் ‘அம்மா ஐ.ஏ.எஸ் அகாடமி’க்காக, மாநகராட்சியின் வணிக வளாகத்தை விதிகளை மீறிப் பயன்படுத்தியதும் ஆர்.டி.ஐ மூலம் அம்பலமானது.
இது குறித்துப் பேசிய கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க சிறுபான்மை அணி அமைப்பாளர் டேனியல் ஜேசுதாஸ், ‘‘கோவை மாநகராட்சி கணக்கு பிரிவு கணினிமயமாக்கப் படவில்லை. தங்களுக்கு வேண்டியதுபோல கணக்கை மாற்றி எழுதுவதற்கு வசதியாக, இப்போதும் பதிவேடுகளில்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தணிக்கை அறிக்கையில் கிடைத்த தகவலின்படி, ஸ்மார்ட் சிட்டி பணி ஆய்வுக்காக (போக்குவரத்து மற்றும் இதர செலவுகள்) ஆறு வார்டுகளுக்கு (50, 51, 52, 53, 54, 55) ரூ.6,64,996 கணக்கு காட்டியிருக்கிறார்கள். ஆனால், அந்த வார்டுகளில் பணியே நடக்கவில்லை. அதிகாரிகளுக்கு ஏற்கெனவே அரசு வாகனமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கோவை மாநகராட்சி வார்டுகளுக்குள், அதுவும் நடக்காத பணிகளுக்கே இவ்வளவு செலவு செய்ததாகக் கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. இப்படி 100 வார்டுகளுக்குக் கணக்கு சொன்னால், அது கோடி ரூபாயைத் தொட்டுவிடும்.

கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு 25 வங்கிக் கணக்குகள் உள்ளன. அவற்றில், கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016 வரை ரூ.300 கோடி டெபாசிட் தொகை இருந்தது. இப்போது, சுமார் ரூ.4 கோடிதான் டெபாசிட் தொகை இருக்கிறது. இரண்டும் அ.தி.மு.க ஆட்சிதான். இவ்வளவு பெரிய தொகை எப்படிச் செலவு செய்யப்பட்டது என்பது மர்மமாகவே இருக்கிறது’’ என்று சந்தேகம் எழுப்புகிறார்.
சமூகச் செயற்பாட்டாளர் தியாகராஜன், ‘‘கோவை மாநகராட்சி தனி அலுவலரால் நிறைவேற்றப்பட்ட சுமார் 5,000 தீர்மானங்கள் (2017-ம் ஆண்டு முதல் தற்போதுவரை) இணையதளத்தில் பதிவேற்றப்படவில்லை. தீர்மானங்களைப் பதிவேற்றச் சொல்லி, உள்ளாட்சி முறை மன்ற நடுவம் உத்தரவிட்டும் அதை நிறைவேற்றவில்லை. பணிகள் தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டால், ‘கோவை ஒப்பந்ததாரர்கள் நல சங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தடை வாங்கியிருக்கிறது. எனவே, பதில் வழங்க முடியாது’ என்கிறார்கள். அந்தச் சங்கம் பதிவு செய்யப்பட்டது 2012-ம் ஆண்டுதான். குறைந்த அளவிலான உறுப்பினர்களே அதில் இருக்கிறார்கள். ஆனால், அதில் அதிக உறுப்பினர்கள் இருப்பதுபோல தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள்’’ என்று குற்றம்சாட்டினார்.

“டெண்டர் முறைகேடுகள் வெளியான பிறகு சற்று சுதாரித்துவிட்டனர். சர்ச்சையில் சிக்கிய நிறுவனங்களில் பெரும்பாலானவை காணாமல் போக, அதே நபர்களின் கன்ட்ரோலில், வெவ்வேறு பெயர்களில் பல நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. கோவை மாநகராட்சியில் முன்புபோல ராஜன் நேரடியாக ஆதிக்கம் செலுத்தாவிட்டாலும், சத்தமில்லாமல் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறார். ராஜனுக்கு பதிலாக, ‘நமது அம்மா’ நாளிதழ் பதிப்பாளர் சந்திரசேகருக்கு மறைமுகப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இப்போது, கோவை மாநகராட்சிக்குள் சந்திரசேகரின் கைதான் ஓங்கியிருக்கிறது. அவரை மீறி எதுவும் நடப்பதில்லை. இவரும் வேலுமணிக்கு நெருக்கமானவர்தான். இவரின் மனைவி ஷர்மிளாதான், அ.தி.மு.க-வில் கோவை மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் என்று கூறப்படுகிறது. கே.சி.பி நிறுவனத்தின் உரிமையாளரும், கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் செயலாளருமான சந்திரபிரகாஷ்தான் இதற்கெல்லாம் மூளையாக இருக்கிறார்” என்கிறார்கள் மாநகராட்சி வட்டாரத்தில்.
இது தொடர்பாக விளக்கம் கேட்க அமைச்சர் வேலுமணியின் அண்ணன் அன்பரசனைத் தொடர்புகொண்டோம். ‘‘இவை அனைத்துமே பொய்க் குற்றச்சாட்டு. செந்தில் அண்ட் கோ 1998-ம் ஆண்டிலிருந்து இருக்கிறது. ராஜன் எங்களிடம் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தார். பிறகு, அவர் தனியாகப் பணிகளை எடுத்து செய்யத் தொடங்கிவிட்டார். நாங்கள் பெரிதாக வெல்லாம் வேலை எடுத்துச் செய்வதில்லை. எங்கள் ஆட்களுக்குப் பணி கொடுப்பதற்காக வேலை எடுக்கிறோம். இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக இப்படியொரு குற்றச்சாட்டை வைக்கின்றனர். நாங்கள் விதிமீறல் செய்யவில்லை. நான் அரசியலிலெல்லாம் தலையிடுவதில்லை. ஆலயம் டிரஸ்ட்தான் மாநகராட்சிக் கட்டடத்தை எடுத்தது. அவர்களால் நடத்த முடியவில்லை என்பதால், ஐ.ஏ.எஸ் அகாடமியை நாங்கள் நடத்துகிறோம். அதிலும் இலவசமாகத்தான் சொல்லிக் கொடுக்கிறோம். இப்போது அம்மா ஐ.ஏ.எஸ் அகாடமிக்காக வேறு இடம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். கோவை மாநகராட்சி உட்பட எந்த நிர்வாகத்திலும் நான் தலையிடுவதில்லை’’ என்றார்.


‘நமது அம்மா’ நாளிதழ் பதிப்பாளர் சந்திரசேகர், ‘‘நான் மாநகராட்சி பணி எடுப்பதிலிருந்து வெளியே வந்து ஐந்து ஆண்டுகளாகிவிட்டன. என்னிடம்கூட கேட்க வேண்டாம். அதிகாரிகளிடமே, ‘இதுவரை சந்திரசேகர் உங்களிடம் பேசியிருக்கிறாரா?’ என்று கேளுங்கள். ஒரு சதவிகிதம்கூட நாங்கள் தலையிடுவதில்லை’’ என்றார்.
கே.சி.பி நிறுவன நிர்வாக இயக்குநர் சந்திரபிரகாஷ், ‘‘தி.மு.க ஆட்சியில் செம்மொழி மாநாட்டில் பணியாற்றியிருக்கிறேன். அப்போது சிறந்த பணிக்கான பரிசு வாங்கியிருக்கிறேன். மாநகராட்சிப் பணிகளுக்கு பேமென்ட் தாமதமாக வருகிறது. அதனால், நான் இங்கு அதிகம் பணிகளை எடுப்பதில்லை. தெலங்கானா மாநிலப் பகுதிகளில்தான் கவனம் செலுத்திவருகிறோம். அன்பரசன் பெயரை யாரிடமும் நான் பயன்படுத்தியதில்லை’’ என்றார்.

கான்ட்ராக்டர் ராஜனுக்கு அழைத்தோம். நம்மை அறிமுகப்படுத்தி விவரத்தைச் சொன்னவுடன், ‘‘நான் டிராவலிங்கில் இருக்கிறேன்’’ என்று கட் செய்தார். சிறிது நேரம் கழித்து நாம் மீண்டும் முயன்றபோது, ‘‘நான் மருத்துவனையில் இருக்கிறேன்’’ என்று கூறி மீண்டும் கட் செய்துவிட்டார். ‘‘நான் மருத்துவமனையில் இருக்கிறேன்’’ என்று குறுஞ்செய்தியும் அனுப்பினார். ‘‘உங்களிடம் பேச வேண்டும்’’ என்று நாம் குறுஞ்செய்தி அனுப்பினோம். அதன் பின்னர் பலமுறை தொடர்புகொண்டும் நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை.
இது குறித்து விளக்கம் கேட்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அலைபேசி எண்ணுக்கு அழைத்தோம். பதிலில்லை. அவரின் உதவியாளர் சந்தோஷ் என்பவரிடம் விவரத்தைச் சொன்னோம். அவர் அமைச்சரிடம் சொல்வதாகக் கூறினார். அதன் பிறகு நமது அழைப்பை அமைச்சர் தரப்பு ஏற்கவே இல்லை. இது தொடர்பாக விளக்கம் கேட்டு, வேலுமணிக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறோம். இதுவரை பதில் வரவில்லை. பதில் வரும்பட்சத்தில் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.