Published:Updated:

` துரைமுருகனிடம் இவ்வளவு பாசம் தேவைதானா?' - அமைச்சர் வீரமணியால் கொந்தளிக்கும் வேலூர் அ.தி.மு.க

வீரமணியுடன் சிரித்துப் பேசும் துரைமுருகன்
வீரமணியுடன் சிரித்துப் பேசும் துரைமுருகன்

வேலூரில், சமீபகாலமாக துரைமுருகனும் அமைச்சர் வீரமணியும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கைகோத்து சிரித்துப் பேசுகிறார்கள். இவர்களுக்குள் இருக்கும் இந்த இணக்கமான உறவைப் பார்த்து, அ.தி.மு.க-வினரும், தி.மு.க-வினரும் குழம்பிப்போய் உள்ளனர்.

தி.மு.க பொருளாளர் துரைமுருகனும், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணியும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். காட்பாடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக துரைமுருகன் உள்ளார். ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக வீரமணி இருக்கிறார். ஒரே மாவட்டம் மட்டுமின்றி ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்,இருவருக்குள்ளும் உறவு அலை வீசுகிறது. 

துரைமுருகனுடன் அமைச்சர் கே.சி.வீரமணி
துரைமுருகனுடன் அமைச்சர் கே.சி.வீரமணி

இதுநாள் வரை இருவருமே மாறி மாறி விமர்சனம் செய்தது கிடையாது. அந்த அளவுக்கு உறவு முறையுடன் பழகுவதாக அவர்களுக்கு நெருக்கமானவர்களே சொல்கிறார்கள். கடந்த ஜூலை மாதம், சென்னையில் ஏற்பட்ட கடும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க, ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் காவிரி உபரி நீர் கொண்டுசெல்லப்பட்டது. இதற்காக, அ.தி.மு.க அரசு ரூ.65 கோடியை ஒதுக்கியது.

‘‘வேலூர் மக்களே தண்ணீர் பிரச்னையில் தவிக்கிறார்கள். ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீரை எடுத்துச்சென்றால் தி.மு.க சார்பில் போராட்டம் வெடிக்கும்’’ என்று வார்த்தையை விட்டார் துரைமுருகன். எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்தக் கருத்திலிருந்து பின்வாங்கிக்கொண்டார். அ.தி.மு.க அமைச்சர்கள் பலர் பதிலடியும் கொடுத்தனர். எனினும், உள்ளூர் அமைச்சரான வீரமணி கடைசி வரை வாய்திறக்கவில்லை.

வீரமணியுடன் சிரித்துப் பேசும் துரைமுருகன்
வீரமணியுடன் சிரித்துப் பேசும் துரைமுருகன்

இந்த நிலையில், சமீப காலமாக வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் கட்சி சாராத பல்வேறு நிகழ்ச்சிகளில் துரைமுருகனும் அமைச்சர் வீரமணியும் சேர்ந்து கலந்துகொண்டு இணக்கமாக பேசிக்கொள்கிறார்கள். எதிரும் புதிருமாக உள்ள இரண்டு பெரிய கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், பொது இடங்களில் கைகோத்து பேசிக்கொள்வதை அக்கட்சிகளின் தலைமை விரும்புகிறதா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.

இதுபற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க, தி.மு.க நிர்வாகிகள் சிலர், ‘‘இரண்டு கட்சிகளின் மாவட்டக் கழக நிர்வாகிகள் யாரேனும் பேசிச் சிரித்துக்கொண்டாலே, ‘துரோகி’ப் பட்டம் கட்டி அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்குகிறார்கள். வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அ.தி.மு.க கூட்டணியில் களமிறங்கிய புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு மறைமுகமாக வேலைபார்த்ததாகக் கூறி, தி.மு.க நிர்வாகிகள் இரண்டு பேரை கட்சியிலிருந்து நீக்கச் செய்தார் துரைமுருகன்.

துரைமுருகன் - அமைச்சர் கே.சி.வீரமணி
துரைமுருகன் - அமைச்சர் கே.சி.வீரமணி

இப்போது என்ன நடக்கிறது... அவர்கள் பேசிக்கொள்ளலாம், நாங்கள் பேசக்கூடாது. ஒரே ஊரில் இருப்போம், அண்ணன் தம்பியாக வளர்ந்திருப்போம். ‘கட்சி வேறு; கொள்கை வேறு’ என்று வரும்போது, அவரவர் வழியில் பயணிக்கிறோம். இவர்கள் மட்டும் கட்சி, கொள்கையை மறந்து பேசலாம்; சிரிக்கலாம். இருவருக்குமான தனிக் கூட்டணி அது. நாங்கள் கண்டும் காணாமல் இருப்பதே எங்களுக்கு நல்லது’’ என்றனர் கடுப்புடன்.

`துரைமுருகன் கொண்டாட வேண்டிய வெற்றியல்ல!' - வேலூரில் கதிர் ஆனந்த் கரைசேர்ந்த பின்னணி

இந்த விமர்சனத்துக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் வீரமணி தரப்பில் பேசிய உதவியாளர் சீனிவாசன், ‘‘நேரில் பார்க்கும்போது வாழ்த்துச் சொல்வது, வணக்கம் சொல்லிக்கொள்வது அரசியல் நாகரிகம். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சாதிச் சாயம் பூசுகிறார்கள். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை மூன்று மாவட்டங்களாகப் பிரிக்க முட்டுக்கட்டை போட்டவர் துரைமுருகன். இந்த அதிகாரப் பரவல் வேண்டாமென்று துரைமுருகனின் எண்ணத்தை உடைத்து, மாவட்டத்தை மூன்றாகப் பிரித்தவர் அமைச்சர் வீரமணி. திராவிடப் பாரம்பரியத்தில் வந்தவர்கள். மற்றபடி, இருவரும் இணக்கமாகவோ அல்லது வேறு ஏதோ காரணங்களுக்காக விட்டுக்கொடுத்துப் போவது போன்ற புகார்களிலோ உண்மையில்லை’’ என்றார் உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு