Published:Updated:

`மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் ஓ.பி.எஸ்!' அமைச்சர் வேலுமணி - கோவை நிகழ்ச்சி ஹைலைட்ஸ்

அமைச்சர் வேலுமணி
அமைச்சர் வேலுமணி

முதலில் பேசிய அமைச்சர் வேலுமணி, அவரது நிகழ்ச்சி என்பதால் ஆவேசமாகப் பேசினார். ஆரம்பிக்கும்போதே ரோலிங் ஆகிப் பேசியதுதான் ஹைலைட்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை, செட்டிபாளையம் பகுதியில் 123 ஜோடிகளுக்கு இலவசமாகத் திருமணம் செய்து, 73 வகை சீர்வரிசைப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அ.தி.மு.க திருமண நிகழ்ச்சி
அ.தி.மு.க திருமண நிகழ்ச்சி
சசி விடுதலை.. வேலுமணி-க்கு EPS செக்..புது ட்விஸ்ட்! | TN Elections 2021| Elangovan Explains

சட்டசபைத் தேர்தல் நெருங்குவதால் நிகழ்ச்சிக்கு தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கான வரவேற்பு பந்தல், கோட்டை வடிவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மூன்று மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் திருமணம் நடத்திவைக்கப்பட்டது.

மேடையில் பரபரப்பாகக் காணப்பட்ட வேலுமணி, `அமைச்சர்களெல்லாம் அந்தந்த வரிசையில தாலி எடுத்துக் கொடுங்க...’, ‘எல்லாம் ரெடியா..?’, `மாலை மாத்தியாச்சா..?’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய முன்னாள் எம்.எல்.ஏ மகேஸ்வரி ஏதோ அறிவிக்க, `இருங்க.. இருங்க’ என்று அவ்வப்போது அவருக்கும் இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துக்கொண்டிருந்தார்.

அமைச்சர் வேலுமணி
அமைச்சர் வேலுமணி

இதற்கிடையே, அமைச்சர்கள் வருவதற்கு முன்பே பலர் தாலிகட்டிவிட்டனர். இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் முன்னிலையில் தாலி கட்ட ஒரு ஜோடியை அழைத்தனர். ஆனால் அவர்களும், `ஏற்கெனவே தாலிகட்டிவிட்டோம்’ எனச் சொல்ல,`சரி கட்டுற மாதிரி போஸாவது கொடுங்க’ என்று கூறினர்.

முதலில் பேசிய அமைச்சர் வேலுமணி, அவரது நிகழ்ச்சி என்பதால் ஆவேசமாகப் பேசினார். ஆரம்பிக்கும்போதே ரோலிங் ஆகி,``கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் ஓ.பி.எஸ் அவர்கள்” என்று கூறிவிட்டார். அப்போது மேடையிலும் அரங்கத்தில் இருந்தவர்களும், ``என்னது ஓ.பி.எஸ் முதல்வரா..?” என்று ஷாக் ரியாக்ஷன் கொடுத்தனர். பிறகு சுதாரித்துக் கொண்டு பேசிய வேலுமணி, தமிழக அரசின் சாதனைகளை அடுக்கினார். அவ்வபோது தி.மு.க-வையும், மு.க.ஸ்டாலினையும் சாடினார்.

எடப்பாடி பழனிசாமி, வேலுமணி
எடப்பாடி பழனிசாமி, வேலுமணி

``கொரோனா காலத்தில் எடப்பாடி பழனிசாமி எல்லா மாவட்டங்களிலும் ஆய்வு செய்து மக்கள் பணியாற்றினார். ஸ்டாலின் வீட்டில் அமர்ந்து வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தார். 4.5 கோடி ரூபாய்க்கு விக் வாங்கி அலங்காரம் செய்துகொண்டார்“ என்று சாடினார்.

இந்த நிகழ்ச்சியில் வேலுமணியின் உறவினர்களும் கலந்துகொண்டனர். அமைச்சர்களுடன், வேலுமணி சகோதரர் அன்பரசனும் ஜோடிகளுக்குத் தாலி எடுத்துக் கொடுத்தார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வரவில்லை. வேலுமணி பேசி முடிப்பதற்குள், அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் கிளம்பிவிட்டனர். பேசுவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி அருகே வேலுமணி அமர்ந்திருந்தார். வேலுமணி பேசிக் கொண்டிருக்கும்போது, அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி வந்தார்.

வேலுமணி மகன் மற்றும் உறவினர்கள்
வேலுமணி மகன் மற்றும் உறவினர்கள்

அவர் எடப்பாடி அருகே அமர்ந்தார். வேலுமணி பேசி முடிந்தவுடன், முனுசாமி அருகில் காலியாக இருந்த இருக்கைக்குச் செல்ல முயன்றார். அதற்குள் எடப்பாடி பழனிசாமி, ``நீங்க அங்க போய் உட்காருங்க” என்று வேலுமணியிடம் கூறினார். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சம்பிரதாயத்துக்காக அவ்வபோது பேசிக்கொண்டனர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் வேலுமணியைப் பாராட்டித்தான் பேச்சைத் தொடங்கினார். ``கொங்கு மண்டலம் எப்போதுமே அ.தி.மு.க-வின் எஃகு கோட்டை. ஜெயலலிதா ஒரு கட்சியும், ஆட்சியும் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம். அதனால்தான், 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியில் இருந்த கட்சியே மீண்டும் ஆட்சி அமைத்த பெருமையை நாம் பெற்றோம்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதா தந்த ஆட்சியை அடிபிறழாமல், அதே பாதையில் திட்டங்களை நிறைவேற்றும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். மத்திய அரசின் பல்வேறு விருதுகளை நாம் பெற்றிருக்கிறோம்” என்றார்.

இறுதியாகப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,``ஏழை, எளிய மக்களுக்கு உதவும் ஒரே கட்சி அ.தி.மு.க-தான். தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிடுவர். நாங்கள், தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து விஷயங்களையும் நிறைவேற்றிவருகிறோம். கோவையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம்.

அத்திக்கடவு, அவிநாசி திட்டத்துக்கான இரண்டாவது திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்துவருகிறது. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் உதவியிருக்கிறோம். சிறப்பான நிர்வாகம் இருப்பதால் இந்தியாவிலேயே அதிக விருதுகளைப் பெற்ற மாநிலம் தமிழகம்தான்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு