Published:Updated:

மகாராஷ்டிரா: "சாதி காரணமாக எனக்கு வருவாய்த்துறை கிடைக்கவில்லை!"- பரபரப்பைப் பற்றவைத்த காங். அமைச்சர்

விஜய் வடேத்திவார்
விஜய் வடேத்திவார்

சாதிப் பிரச்னையால் தனக்கு அமைச்சரவையில் வருவாய்த்துறை கிடைக்கவில்லை என்று மகாராஷ்டிரா அமைச்சர் விஜய் வடேத்திவார் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்டவர்கள்) க்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்னை தற்போது மாநில அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது. கடந்த மாதம் உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசி-யினருக்கான இட ஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கும் இடங்களுக்குத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் ஓபிசி-யினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாஜக போராட்டம் நடத்திவருகிறது. மற்றொரு புறம், தேர்தலை நடத்த ஆறு மாதங்கள் அவகாசம் கொடுக்கும்படி மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது. மகாராஷ்டிராவில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

விஜய் வடேத்திவார்
விஜய் வடேத்திவார்

ஓபிசி வகுப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். ஓபிசி வகுப்பைச் சேர்ந்த, மகாராஷ்டிரா பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் விஜய் வடேத்திவார், `சாதிப் பிரச்னையால்தான் எனக்கு அமைச்சரவையில் வருவாய்த்துறை கிடைக்காமல் போனது’ என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஓபிசி தலைவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் விஜய், `முந்தைய ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தேன். இப்போது அமைச்சரவையில் வருவாய்த்துறை கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவன் என்பதால், எனக்கு அந்தத் துறை கிடைக்கவிலை’ என்று ஆதங்கப்பட்டார். அமைச்சர் விஜய் தெரிவித்த கருத்து குறித்து காங்கிரஸ் வருவாய்த்துறை அமைச்சர் பாலாசாஹேப் தோரட் கூறுகையில், ``காங்கிரஸ் கட்சிக்கு சாதி அரசியலில் நம்பிக்கை இல்லை. வசந்த்ராவ் நாயக்கை, காங்கிரஸ் முதல்வராக்கியது. அதே போன்று அந்துலேய்க்கும் முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது. அமைச்சர் விஜய் வயதைக் கணக்கிடும்போது எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகளைப் பெறுவார். அதற்காக அவர் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்" என்று தெரிவித்தார். அமைச்சர் விஜய் தனது உரையில், காங்கிரஸ் சொற்படி புலி நடக்கிறது என்று சிவசேனாவைச் சாடியிருந்தார். இது குறித்து பாலாசாஹேப் தோரட்டிடம் கேட்டதற்கு, ``புலிக்கும் விஜய்க்கும் பழைய பந்தம் இருக்கிறது. அதோடு அவரது தொகுதி அருகில்தான் புலிகள் சரணாலயம் இருக்கிறது. எனவே சிவசேனா இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. எங்களது கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது" என்று தெரிவித்தார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் சிவசேனா இடையே அடிக்கடி வார்த்தைப் போர் நடந்துகொண்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு