Published:Updated:

`என்னை ஆறுதல்படுத்த நீ இல்லை... மிஸ் யூ மை டியர் பவ்!'- தனி உதவியாளர் மரணத்தால் கலங்கும் விஜயபாஸ்கர்

இந்த விபத்தில் அமைச்சரின் தனி உதவியாளர் வெங்கடேசன் மற்றும் காரை ஓட்டிச்சென்ற இடையபட்டியைச் சேர்ந்த செல்வம் (38) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வெங்கடேசன் - விஜயபாஸ்கர்
வெங்கடேசன் - விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரின் மகன் பவ் (எ) வெங்கடேசன் (31). இவர் கடந்த 8 ஆண்டுகளாகத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்து வந்தார். மேலும், இவர் அ.தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டத் தலைவராகவும் இருந்தார்.

வெங்கடேசன்
வெங்கடேசன்

இந்நிலையில், புதுக்கோட்டையில் நேற்று மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஒன்றிய ஊராட்சி குழுத் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க-வினருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து கூறினார். பின்னர், எம்.ஜி.ஆர், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு நேற்றுஇரவு சென்னைக்குச் சென்றார்.

அமைச்சர் விஜயபாஸ்கரை திருச்சி விமான நிலையத்தில் விட்டுவிட்டு பொலிரோ காரில் அவரது சொந்த ஊரான பரம்பூருக்கு வெங்கடேசன் திரும்பிக்கொண்டிருந்தார். கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த அவரது கார் எதிர்பாராதவிதமாகப் புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து
விபத்து

இந்த விபத்தில் அமைச்சரின் தனி உதவியாளர் வெங்கடேசன் மற்றும் காரை ஓட்டிச்சென்ற இடையபட்டியைச் சேர்ந்த செல்வம் (38) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தனி உதவியாளர் வெங்கடேசன் மரணத்தால் அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை யடைந்துள்ளார். அவர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ``நீ இந்த உலகில் இல்லை என்பதை அறியும்போது என் இதயம் நொறுங்குகிறது. உனது பல நினைவுகள் என் மனதில் பளிச்சிடுகின்றன. உன் இழப்பை ஏற்றுக்கொள்வதை நினைக்கும்போது அது அதீத வலியைக் கொடுக்கிறது. 31 வயதில் மிகவும் சீக்கிரமாகவே இந்த உலகைவிட்டுப் பிரிந்துவிட்டாய்.

வெங்கடேசன்
வெங்கடேசன்

இந்த மிகக் கடினமான சூழ்நிலையில் என்னை ஆறுதல்படுத்த நீ இல்லை. உனது அன்பையும் புன்னகையையும் இனி இழப்பேன். நீ எப்போதும் என்னை வலிமையாக இருக்கச் சொன்னாய். ஏனென்றால் உன் இழப்பைச் சுமக்க எனக்கு ஒரு நாள் வலிமை தேவைப்படும் என்று உனக்குத் தெரியும். இனி எப்போதும் உன்னை மிஸ் செய்வேன். உனது ஆத்மா சாந்தியடையட்டும் மை டியர் பவ்" என்று உருக்கமாக வீடியோ உடன் பதிவிட்டுள்ளார்.